Showing posts with label மா காய் மா காய் மா தேமா. Show all posts
Showing posts with label மா காய் மா காய் மா தேமா. Show all posts

Saturday, September 25, 2021

05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)

05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)


2015-01-19

கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம் - நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

"மா காய் மா காய் மா தேமா" என்று நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")


1)

ஏலக் குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை எழில்மி டற்றில்

நீல மணியானை நேயர் மனக்கோயில் நீங்கா தானைச்

சூலத் தொடுமானும் சுடரும் தரித்தானைச் சுரும்பொ லிக்கும்

கோலப் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஏலக்குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை;

எழில் மிடற்றில் நீல மணியானை - அழகிய கண்டத்தில் கருமணி உடையவனை;

நேயர் மனக்கோயில் நீங்காதானை - பக்தர்களின் மனம் என்ற கோயிலில் என்றும் உறைபவனை;

சூலத்தொடு மானும் சுடரும் தரித்தானை - கையில் சூலத்தையும் மானையும் தீயையும் ஏந்தியவனை;

சுரும்பு ஒலிக்கும் கோலப் பொழில் சூழ்ந்த கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


2)

துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பலபாடித் தொழுபி ரானை

மன்றிற் றிருநட்டம் மகிழும் பெருமானை மழவெள் ளேற்று

வென்றிக் கொடியானை மேவார் புரமூன்றும் வேவ எய்த

குன்றச் சிலையானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பல பாடித் தொழு-பிரானை - நெருங்கித் தேவர்களெல்லாம் பல துதிகள் பாடி தொழும் தலைவனை;

மன்றில் திருநட்டம் மகிழும் பெருமானை - அம்பலத்தில் திருநடம் செய்யும் பெருமானை;

மழ-வெள்-ஏற்று வென்றிக் கொடியானை - இளைய, வெண்ணீற இடபச் சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனை;

மேவார் புரம் மூன்றும் வேவ எய்த குன்றச் சிலையானைக் - பகைவர்களது முப்புரமும் வெந்து அழியும்படி எய்த மேருவில்லை ஏந்தியவனைக்;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே.- திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


3)

பன்றி மருப்பணிந்த பவளத் திருமார்பில் பாம்பு மாலை

ஒன்றும் உடையானை ஒற்றை விடையானை ஓது வார்க்கு

நன்று மிகநல்கும் நங்கள் பெருமானை நறவம் நாறு

கொன்றை முடியானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பன்றி மருப்பு - பன்றிக்கொம்பு ;

ஒற்றை - ஒப்பற்ற ;

ஓதுவார்க்கு நன்று மிக நல்கும் நங்கள் பெருமானை - (அப்பர் தேவாரம் - 4.77.3 - "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே" - பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன);

நறவம் நாறு கொன்றை முடியானை - வாசனை கமழும் கொன்றைமலரைச் சூடியவனை;


4)

தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அடியவர்க்குத் துன்பம் செய்ய

அடுக்கும் அடற்கூற்றின் அகலம் தனிலுதைத்தங் கருளி னானைக்

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் கரவி லாது

கொடுக்கும் கரத்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடுக்கும் அடல் கூற்றின் அகலம்தனில் உதைத்து - மார்க்கண்டேயரை நெருங்கிய வலிய நமனது மார்பில் உதைத்து; (அடுத்தல் - நெருங்குதல்); (அகலம் - மார்பு);

கடுக்கும் கடல்நஞ்சு - எவரும் வெறுக்கும் கசக்கின்ற விஷம்; (கடுத்தல் - மிகுதல்; வெறுத்தல்; கசத்தல்);

கரந்த மிடற்றானை - ஒளித்த கண்டனை;

கரவு இலாது கொடுக்கும் கரத்தானை - ஒளித்தல் இன்றி வாரி வழங்கும் கரத்தை உடையவனை;


5)

இனியெம் துணைநீயென் றேத்தும் அடியார்உண் இன்பத் தேனைத்

தனிவெள் விடையானைத் தக்கன் பெருவேள்வி தனைய ழித்த

முனிவும் உடையானை முக்கட் பெருமானை முடியின் மீது

குனிவெண் மதிசூடும் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடியார் உண் இன்பத்தேனை - (8.10.3 - திருவாசகம் - திருக்கோத்தும்பி - "நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்");

தனி வெள் விடை - ஒப்பற்ற வெண்ணிற இடபம்;

முனிவு - கோபம்;

குனி வெண் மதி - வளைந்த வெண் திங்கள்; (குனிதல் - வளைதல்);


6)

பாதித் திருமேனி பாவை வடிவேற்ற பரமன் தன்னை

ஆதி நடுவாகி அந்தம் எனவாகும் அளவி லானைப்

பூதிப் பொலிவோடு பூக்கள் பலதூவிப் போற்றிப் பாடிக்

கோதில் அடியார்சேர் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பூதி - சாம்பல் - திருநீறு;

கோது இல் அடியார் சேர் - குற்றமற்ற அடியவர்கள் சேர்கின்ற;


7)

பறைகள் ஒலிக்கநடம் பயிலும் பசுபதியைப் பணிந்து வானோர்

இறைவ எமக்கருளாய் என்று துதிசெய்ய இரங்கி நஞ்சுண்

கறைகொள் மிடற்றானைக் கையால் மலர்தூவிக் கருது வார்தம்

குறைகள் களைவானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


8)

கருவம் மிகவாகிக் கயிலை மலைபேர்த்த கார ரக்கன்

வெருவ மலைமீது விரலிட் டடர்த்தானை வேதத் தானை

அரவப் புனற்கங்கை அணிகூ விளமாலை அரவம் கொன்றை

குரவம் புனைந்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


கார் அரக்கன் வெருவ - கரிய நிறத்து இராவணன் அஞ்சுமாறு;

அடர்த்தானை - நசுக்கியவனை;

அரவப் புனற்கங்கை, அணி கூவிள மாலை, அரவம், கொன்றை, குரவம் புனைந்தானை - ஒலிக்கும் புனல் பாயும் கங்கையையும் அழகிய வில்வமாலையையும் பாம்பையும் கொன்றைமலரையும் குரா மலரையும் சூடியவனை;


9)

நாற்ற மலர்மேலான் நாரா யணனிவர்கள் நண்ண ஒண்ணாத்

தோற்றச் சுடரானைச் சுடலைப் பொடியேறும் தோளி னானை

ஆற்றுச் சடையானை ஆல நிழலானை அன்பர்க் காகக்

கூற்றை உதைகோனைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


நாற்றமலர் மேலான் நாராயணன் இவர்கள் நண்ண ஒண்ணாத் தோற்றச் சுடரானை - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அடைய இயலாத தோற்றம் உடைய தீ ஆனவனை; (தோற்றம் - புகழ்; வடிவம்)

ஆல நிழலானை - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;


10)

பொக்கம் மலிநெஞ்சர் பொய்கள் பலசொல்லும் புல்லர் மார்க்கம்

துக்கம் மிகவாக்கும் துரிசர் உரைநீங்கித் தூவெண் ணீறும்

அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை அரவத் தோடு

கொக்கின் இறகுமணி கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பொக்கம் - வஞ்சகம்;

புல்லர் - கீழோர்;

துரிசர் - குற்றம் உடையவர்; (துரிசு - குற்றம்);

அக்கு - உருத்திராக்கம்;

கொக்கின் இறகும் அணி - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனைக் கொன்று அவ்விறகைச் சூடிய;


11)

தளிகள் பலநாடித் தமிழின் தொடைபாடித் தாழ்வார்க் கெல்லாம்

எளியன் எனவாகி இன்னல் வினைதீர்க்கும் இறைவன் தன்னை

அளிகள் இசைபாடி அலரில் மதுமாந்தி அகங்க ளிக்கும்

குளிரும் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


தளி - கோயில்;

தமிழ் இன்தொடை - இனிய தமிழ்ப் பாமாலைகள்;

தாழ்வார்க்கு - வணங்குபவர்களுக்கு;

எளியன் - எளிதில் அடையப்படுபவன்;

இன்னல் வினை - துன்பம் செய்யும் வினை; துன்பத்தையும் வினையையும்;

அளி இசை பாடி அலரில் மது மாந்தி அகம் களிக்கும் - வண்டுகள் இனிய ஒலிசெய்து பூவில் தேன் உண்டு மனம் மகிழும்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

  • காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;

  • இப்பதிகத்தில் 1, 3-ஆம் சீர்கள் மாச்சீர்கள். 2, 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

  • (சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")


Sunday, October 6, 2019

04.75 – வேலூர்


04.75 – வேலூர்

2014-08-23
வேலூர் - (வேலூர்க் கோட்டையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோயில்)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா காய் மா காய் மா தேமா' என்ற வாய்பாடு. மாச்சீரை அடுத்து வரும் காய்ச்சீர்கள் நிரையசையில் தொடங்கும்).).
(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")

1)
அமரே புரிபுலன்கள் ஐந்தும் அனுதினமும் அல்லல் ஆக்கி
இமையோர் தலைவாநின் இருதாள் தொழல்ஒட்டா என்செய் வேன்நான்
கமையே உருஆனாய் கரும்பார் மொழிமடவாள் கணவா காவாய்
விமலா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

அமரே புரி புலன்கள் ஐந்தும் அனுதினமும் அல்லல் ஆக்கி - ஓயாமல் போர் செய்யும் ஐம்புலன்கள் தினந்தோறும் துன்பம் தந்து; (அமர் - போர்);
இமையோர் தலைவா நின் இருதாள் தொழல் ஒட்டா - தேவர் தலைவனே, உன் இரு திருவடிகளைப் பொருந்த விடமாட்டா; (ஒட்டுதல் - சார்தல்; சம்மதித்தல்); (சம்பந்தர் தேவாரம் 1.50.7 - "தாயும்நீயே தந்தைநீயே ... ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர்நின்று ஒன்றலொட்டார்..." - ஐவர் - பஞ்சேந்திரியங்கள். ஒன்றல் ஒட்டார் - நின்னோடு பொருந்தவிடார்.)
என் செய்வேன் நான் - நான் என்ன செய்வேன்;
கமையே உரு ஆனாய் - பொறுமையின் வடிவம் ஆனவனே; (கமை - க்ஷமை - பொறுமை);
கரும்பு ஆர் மொழி மடவாள் கணவா காவாய் - கரும்பு போல் இனிய மொழி பேசும் உமைக்குக் கணவனே, காத்தருள்வாயாக;
விமலா - தூயனே;
மதில் புடைசூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);

2)
படையாய்ப் புலனைந்தும் பரிவில் சமர்செய்துன் பாதம் போற்றத்
தடையா கிடக்கண்டாய் தமியேன் தனக்கிரங்காய் தழலை ஏந்தும்
உடையாய் ஒலிகங்கை உலவும் சடையானே ஒப்பில் லாத
விடையாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

பதம் பிரித்து:
படையாய்ப் புலன் ஐந்தும் பரிவு இல் சமர் செய்து உன் பாதம் போற்றத்
தடை ஆகிடக் கண்டாய்; தமியேன்தனக்கு இரங்காய்; தழலை ஏந்தும்
உடையாய்; ஒலி-கங்கை உலவும் சடையானே; ஒப்பு இல்லாத
விடையாய்; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.

பரிவு இல் சமர் செய்து - இரக்கம் இன்றிப் போர் புரிந்து;
தமியேன் தனக்கு - தனித்து இருக்கும் எனக்கு;
தழலை ஏந்தும் உடையாய் - கையில் தீயை ஏந்திய சுவாமியே;
ஒலி கங்கை - ஒலிக்கின்ற கங்கை; முழங்குகின்ற கங்கை; ( சம்பந்தர் தேவாரம்- 2.18.4 - "ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய்");

3)
சேர்ந்தா ரிடர்செய்யும் செவிமூக் குடல்வாய்கண் செருவி னாலே
சோர்ந்தேன் சுடுநீற்றாய் துணையார் உனையன்றித் தொழுவா னோர்க்கா
ஆர்ந்தாய் அருநஞ்சை அளித்தாய் அமுதத்தை அண்டங் கட்கோர்
வேந்தே மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

பதம் பிரித்து:
சேர்ந்து ஆர்-இடர் செய்யும் செவி மூக்கு உடல் வாய் கண் செருவினாலே
சோர்ந்தேன்; சுடு-நீற்றாய்; துணை யார் உனை அன்றித்; தொழு-வானோர்க்கா
ஆர்ந்தாய் அரு-நஞ்சை; அளித்தாய் அமுதத்தை; அண்டங்கட்கு ஓர்
வேந்தே; மதில் புடை-சூழ்-வேலூர் இடம் ஆக விரும்பினாயே.

ஆர் இடர் - பெரும் துன்பம்;
செரு - போர்;
ஆர்ந்தாய் அரு-நஞ்சை - கொடிய விடத்தை உண்டவனே; (ஆர்தல் - உண்ணுதல்);
அண்டங்கட்கு ஓர் வேந்தே - விசுவநாதனே; விசுவேசுவரனே;

4)
போரே புரிகின்ற புலன்கள் இவையைந்தும் போற்றல் ஒட்டா
நீரார் சடையானே நீயென் நிலைதன்னை நினைந்தி ரங்காய்
ஏரார் மதிசூடி எரியார் கணையேந்தி எயில்மூன் றட்ட
வீரா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

பதம் பிரித்து:
போரே புரிகின்ற புலன்கள் இவை ஐந்தும் போற்றல் ஒட்டா;
நீர் ஆர் சடையானே; நீ என் நிலைதன்னை நினைந்து இரங்காய்;
ஏர் ஆர் மதிசூடி, எரி ஆர் கணை ஏந்தி, எயில் மூன்று அட்ட
வீரா; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.

நீர் ஆர் சடையானே - கங்கைச் சடையனே;
ஏர் ஆர் மதி சூடி - அழகு பொருந்திய திங்களை அணிந்து;
எரி ஆர் கணை ஏந்தி - தீப் பொருந்திய அம்பைக் கையில் எடுத்து;
எயில் மூன்று அட்ட வீரா - முப்புரங்கள் எரித்த வீரனே;

5)
கூடார் உளர்ஐவர் கும்பிட் டுனையோதக் குறுக்கே நிற்பார்
வாடா முலையாளை வாமம் மகிழ்கின்ற மைந்த காவாய்
ஓடேந் தியசெல்வா உயர்கா னிடைஏனம் ஒன்றின் பின்செல்
வேடா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

கூடார் உளர் ஐவர் - ஐந்து பகைவர்கள் உள்ளனர்; (கூடார் - பகைவர்);
கும்பிட்டுனைதக் குறுக்கே நிற்பார் - உன்னை வழிபட விடாமல் என்னைத் தடுப்பார்கள்;
வாடா முலையாளை வாமம் மகிழ்கின்ற மைந்த காவாய் - தளராத தனங்களை உடைய உமையம்மையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய அழகனே, என்னைக் காத்தருள்வாயாக; (வாமம் - இடப்பக்கம்);
டு ஏந்திய செல்வா - கையில் பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழலும் செல்வனே;
உயர் கானிடை ஏனம் ஒன்றின்பின் செல் வேடா - (அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பதற்காகப்) பெரிய காட்டில் ஒரு பன்றியைத் துரத்திக்கொண்டு சென்ற வேடனே;
மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);


6)
ஆட்டா அலைக்கின்ற ஐவர் தளைநீக்கி அருளாய் அண்ணா
பாட்டால் பணிந்தேத்து பத்தர் தமைக்கொல்லப் பாய்ந்தான் மாளத்
தாட்டா மரையோச்சு தந்தாய் தடவெற்பன் தனயை தன்னை
வேட்டாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

ஆட்டா அலைக்கின்ற - ஆட்டி அலைக்கின்ற; மிகவும் வருத்துகின்ற; (ஒருபொருட்பன்மொழி); (ஆட்டுதல் - ஆடச்செய்தல்; அலைத்தல்/வருத்துதல்); (ஆட்டா - ஆட்டி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);
ஐவர் தளை நீக்கி அருளாய் - ஐம்புலன்களின் கட்டை அறுத்து அருள்வாயாக;
அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது, 'அண்ணா' என மருவிற்று; (தேவாரத்தில் பல பாடல்களில் காணலாம்);
பாட்டால் பணிந்து ஏத்து பத்தர்தமைக் கொல்லப் பாய்ந்தான் மாளத் தாட்டாமரைச்சு தந்தாய் - பாடி வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல விரைந்த காலனே மாளும்படி திருவடித் தாமரையை உயர்த்திய தந்தையே; (தாட்டாமரை - தாள்+தாமரை - பாத தாமரை); (ஓச்சுதல் - உயர்த்துதல்); (தந்தாய் - தந்தை என்பதன் விளி - தந்தையே);
தடவெற்பன் தனயை தன்னை வேட்டாய் - இமவான் மகளை மணம்புரிந்தவனே; (வேட்டல் - விரும்புதல்; மணம்புரிதல்);
மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);

7)
அரித்தா ரிடர்செய்யும் ஐவர் தமைவெல்லும் ஆற்றல் இல்லேன்
தரித்தாய் மதிதன்னைத் தமியேன் தனக்கிரங்காய் தழலம் பொன்றால்
எரித்தாய் எயில்மூன்றை ஏரார் வடவால்கீழ் எழுதா வேதம்
விரித்தாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

பதம் பிரித்து:
அரித்து ஆர்-இடர் செய்யும் ஐவர்தமை வெல்லும் ஆற்றல் இல்லேன்;
தரித்தாய் மதிதன்னைத்; தமியேன்தனக்கு இரங்காய்; தழல்-அம்பு ஒன்றால்
எரித்தாய் எயில் மூன்றை; ஏர் ஆர் வடவால்கீழ் எழுதா வேதம்
விரித்தாய்; மதில் புடை-சூழ்-வேலூர் இடமாக விரும்பினாயே.

அரித்தல் - வருத்துதல்; இமிசித்தல்;
ஆர்-இடர் - பெரும் துன்பம்;
தரித்தல் - தாங்குதல்;
தழல்-அம்பு ஒன்றால் எரித்தாய் எயில் மூன்றை - எரிகணை ஒன்றால் முப்புரங்களை எரித்தவனே;
ஏர் ஆர் வடவால்கீழ் எழுதா வேதம் விரித்தாய் - அழகிய கல்லால மரத்தின்கீழ், எழுதாமறை நாலின் பொருளை விளக்கியவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் ....");
(அபிராமி அந்தாதி - 10 - "நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, ... எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே...");

8)
விடங்கார் முகில்போல மிளிரும் மணிகண்டா வெற்பி டந்த
அடங்கா அரக்கன்கை ஐந்நான் கடர்த்துப்பின் அருள்கள் செய்தாய்
நடங்கா னிடையாடும் நம்பா அரவொன்றை நாணா வீக்கும்
விடங்கா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

விடம் கார்-முகில் போல மிளிரும் மணிகண்டா - நஞ்சு கரிய மேகம் போல மிளிர்கின்ற நீல மணி பொருந்திய கண்டம் உடையவனே;
வெற்பு இடந்த அடங்கா அரக்கன் கை ஐந்நான்கு அடர்த்துப் பின் அருள்கள் செய்தாய் - கயிலையைப் பெயர்த்த அடங்காத இராவணனின் இருபது கைகளையும் நசுக்கிப் பின் (இசைகேட்டு) வரங்கள் தந்தவனே;
நடம் கானிடை ஆடும் நம்பா - சுடுகாட்டில் நடம்செய்யும் நம்பனே;
அரவு ஒன்றை நாணா வீக்கும் விடங்கா - ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டும் அழகனே; (அப்பர் தேவாரம் - 6.57.3 - "கையார் தழலார் விடங்கா போற்றி");
மதில் புடை சூழ் வேலூர் இடமாக விரும்பினாயே - மதிலால் சூழப்பட்ட வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலில் விரும்பி எழுந்தருளியவனே; (விரும்பினாய் - விரும்பியவனே);

9)
மாலால் அயனோடு மாலும் மிகநேடி வாடிக் காண
ஏலா தடிபோற்ற எரியாய் எழுந்தோனே ஏரார் மார்பில்
நூலா மடமான்போல் நோக்கி ஒருகூறா நுனைகள் மூன்றார்
வேலா மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

மாலால் - மயக்கத்தால்; அறியாமையால்;
நேடி - தேடி;
ஏலாது - இயலாது - இயலாமல்;
ஏர் ஆர் மார்பில் நூலா - அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவனே;
மடமான் போல் நோக்கி ஒரு கூறா - இளமான் போல் நோக்கு உடைய உமையை ஒரு கூறாக உடையவனே;
நுனைகள் மூன்று ஆர் வேலா - மூன்று முனைகளை உடைய சூலத்தை உடையவனே;

10)
பழித்தே பலநாளும் பாழுக் குழல்கின்ற பதர்கள் சொல்லை
ஒழித்தே எழுத்தஞ்சை ஓதும் அடியார்கள் உவக்கப் பாவம்
அழித்தே உயர்வானம் ஆள அருள்செய்வாய் அனங்கன் வேவ
விழித்தாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

பதர்கள் - வீணர்கள்; அறிவற்றவர்கள்;
உவத்தல் - மகிழ்தல்;
அனங்கன் வேவ விழித்தாய் - மன்மதன் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவனே;
(சம்பந்தர் தேவாரம் - 1.92.5 - "காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்...");
(அப்பர் தேவாரம் - 4.80.8 - "சுற்று மமரர் சுரபதி .... செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன் ......");

11)
சொல்லார் தமிழ்பாடித் தொழுவார் வினைதீர்த்துச் சுகம ளிக்கும்
நல்லாய் நளிர்திங்கள் நாகம் நதிகொன்றை நயந்த ணிந்தாய்
பொல்லார் புரமூன்றும் பொடியாய் விழுமாறு போர்செய் வெற்பு
வில்லாய் மதில்புடைசூழ் வேலூர் இடமாக விரும்பி னாயே.

சொல் ஆர் தமிழ் பாடி - சொல்மாலையாகிய தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி;
(சொல்லார் தமிழ் - பல்வகையான இனிய அரிய தமிழ்ச்சொற்களால் அமைந்த திருப்பதிகம்);
நல்லாய் - நல்லவனே; (அப்பர் தேவாரம் - 6.38.6 - "உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே ...
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே ...");
நளிர்திங்கள் நாகம் நதி கொன்றை நயந்து அணிந்தாய் - குளிர்மதியையும், பாம்பையும், கங்கையையும், கொன்றைமலரையும் விரும்பி அணிந்தவனே;
பொல்லார் புரம் மூன்றும் பொடியாய் விழுமாறு போர்செய் வெற்பு வில்லாய் - பொல்லா அசுரர்களின் முப்புரங்களும் சாம்பலாகி விழும்படி போர் புரிந்த, மலையை வில்லாக ஏந்தியவனே;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) பாடல்கள் 1 - 7 : ஐம்புலன்களை வெல்ல அருள்வேண்டியது வெளிப்படை;
பாடல்கள் 8-11 : வெளிப்படையாக வேண்டுகோள் எதுவும் இன்றி இறைவனைப் போற்றிய பாடல்கள்;

2) யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - 'மா காய் மா காய் மா தேமா' என்ற வாய்பாடு.
இதனில் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.
இது 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற அறுசீர் அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம்.
3) உதாரணம்-1: சம்பந்தர் தேவாரம் - 2.72.1 -
"பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே."
உதாரணம்-2: திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 -
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி”
4) வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=284
-------------- --------------

Monday, May 28, 2018

04.36 - பூவனூர் - நாவார் தமிழ்பாடி

04.36 - பூவனூர் - நாவார் தமிழ்பாடி

2013-12-25

பூவனூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள்")


1)

நாவார் தமிழ்பாடி நம்பா அருளென்று நாடு வார்க்கு

நாவாய் எனவாகி நன்றே புரியீசன் நாரி பங்கன்

சாவாப் பெருமையினான் தண்ணார் மதிசூடி தங்கும் ஊராம்

பூவார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.


நா ஆர் தமிழ் பாடி நம்பா அருள் என்று நாடுவார்க்கு - நாவில் பொருந்திய தேவாரம் திருவாசகம் பாடி, "நம்பனே, அருளாய்" என்று வணங்கும் அன்பர்களுக்கு;

நாவாய் எனகி நன்றே புரிசன் - இப்பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாகி நன்மைசெய்யும் ஈசன்; (நாவாய் - மரக்கலம்);

நாரி பங்கன், சாவாப் பெருமையினான், தண்ர் மதி சூடி தங்கும் ஊர் ஆம் - உமைபங்கனும், இறப்பு இல்லாதவனும், குளிர்ந்த சந்திரனைச் சூடியவனுமான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;

பூ வார் மது உண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே - பூக்கள் சொரியும் தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த பூவனூர்; (பூவார்மது - 1. பூ வார் மது; 2. பூ ஆர் மது); (ஆர்தல் - நிறைதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.2 - "வம்பு நாண்மலர் வார்மது வொப்பது");


2)

காதார் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா

ஓதா தருமறைகள் எல்லாம் உணர்வோனே உம்பர் போற்றும்

பாதா எனவேத்திப் பணிவார் வினைதீர்க்கும் பரமன் ஊராம்

போதார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.


காது ஆர் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா - காதில் குழையை அணிந்தவனே, கையில் மழுவை ஏந்தியவனே, நீலகண்டனே;

ஓதாது அருமறைகள் எல்லாம் உணர்வோனே - (அப்பர் தேவாரம் - 6.55.11 - "ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி");

உம்பர் போற்றும் பாதா என ஏத்திப் பணிவார் வினை தீர்க்கும் பரமன் ஊர் ஆம் - "தேவர்கள் போற்றும் திருப்பாதனே" என்று துதித்து வழிபடும் அன்பர்களது வினையைத் தீர்க்கும் பரமன் உறையும் தலம் ஆவது;

போது ஆர் மது ண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே- பூவில் பொருந்திய தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பூவனூர்;


3)

காக்கும் கழல்பாடிக் கையால் மலர்தூவிக் கருது வார்க்குத்

தாக்கும் வினைதீர்க்கும் தாதை அழலாரும் சடையில் நீரைத்

தேக்கும் பெருமான்உண் பலியோர் சிரமேற்கும் செல்வன் ஊராம்

பூக்கள் கமழ்சோலை புடைசூழ்ந் தழகாரும் பூவ னூரே.


தாதை - தந்தை;

அழல் ஆரும் சடை - தீப் போன்ற சடை; (ஆர்தல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே" - அழற் சடை - உவமத்தொகை. அழல்போலும் ஒளிர் செஞ்சடை);

உண்பலி ஓர் சிரம் ஏற்கும் செல்வன் - பிச்சையைப் பிரமன் தலையோட்டில் ஏற்கின்ற செல்வன்;


4)

தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் சாம வேதன்

அனலோர் கரமேந்தி அல்லில் நடமாடும் ஐயன் ஓர்பால்

மினலேர் இடைமாதைப் பங்கா விரும்பியவன் மேவும் ஊராம்

புனலார் முகில்வந்து புகுவான் பொழில்சூழ்ந்த பூவ னூரே.


தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் - தன்னையே எண்ணி வழிபடும் அடியார்க்கு அபயம் அருளும்;

சாமவேதன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; (சம்பந்தர் தேவாரம் - 3.56.2 - "சடையினன் சாமவேதன்");

அனல் ஓர் கரம் ஏந்தி அல்லில் நடம் ஆடும் ஐயன் - ஒரு கையில் தீயை ஏந்தி இரவில் கூத்தாடும் தலைவன்;

ஓர்பால் மினல் ஏர் இடை மாதைப் பங்கா விரும்பியவன் - மின்னல் போன்ற இடையை உடைய உமையை ஒரு பக்கம் பங்காக விரும்பி ஏற்றவன்; (மினல் - மின்னல் - இடைக்குறை விகாரம்); (ஏர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.7.9 - "மின்னிடை மாதொடும் வீற்றிருந்த");

புனல் ஆர் முகில் வந்து புகு வான் பொழில் - நீர் நிறைந்த மேகம் வந்து நுழையும் அழகிய சோலை;


5)

ஓதக் கடல்நஞ்சம் உண்டான் புகழ்பாடி ஓம்பு வார்க்கு

வாதைத் தொடரறுப்பான் மலையான் மகளோர்பால் வைத்து கந்தான்

சீதப் புனலோடு திங்கள் சடையேறும் சீரன் ஊராம்

போதைப் புகழ்வண்டார் பொழில்கள் புடைசூழ்ந்த பூவ னூரே.


ஓதக் கடல் - மிக்க நீரையுடைய கடல்; (ஓதம் - நீர்; அலை);

வாதைத்-தொடர் அறுப்பான் - துன்பத்தொடரைத் தீர்ப்பவன்; (வாதை - துன்பம்; வேதனை); (அறுத்தல் - நீக்குதல்; தீர்த்தல்);

சீதப் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை;

சீரன் - புகழ் உடையவன்;

போதைப் புகழ் வண்டு ஆர் பொழில்கள் - பூக்களைப் புகழ்கின்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள்; (போது - பூ); (ஆர்த்தல் - ஒலித்தல்); (வண்டுகள் முரல்வதை அவை பூக்களைப் புகழ்ந்து பாடுவதாகச் சொன்னது - தற்குறிப்பேற்றம்);


6)

கடியார் மலர்தூவிக் கமழும் தமிழ்பாடும் காத லார்க்கு

மடியா வினைதீர்த்து வானம் தருகின்ற வள்ளல் எம்மான்

துடியார் கரத்தீசன் தூமா மதிசூடி சூலன் ஊராம்

பொடியார் உடலோடு பூவைப் புகழ்வண்டார் பூவ னூரே.


கடி ஆர் மலர் - வாசனை பொருந்திய பூ; (கடி - வாசனை);

காதலார் - அன்பு உடையவர்கள் - அடியவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.26.5 - "கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்");

மடியா - அழியாத;

துடிர் கரத்து ஈசன் - கையில் உடுக்கையை ஏந்திய ஈசன்;

பொடி ஆர் உடலோடு பூவைப் புகழ் வண்டு ஆர் பூவனூரே - மகரந்தப்பொடி பொருந்திய உடலோடு பூவைப் புகழும் வண்டுகள் பாடுகின்ற பூவனூர்; (பெரிய புராணத்தில் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - பாடல் 242 - "கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்று முரல்கின்றன" என்ற பாடலையும் காண்க);


7)

நாகா பரணத்தான் நஞ்சார் மணிகண்டன் நயக்கும் ஊராம்

பாகார் மொழிமாதைப் பாகம் உடையானே பாய்வெள் ளேற்றுப்

பாகா படர்சடைமேல் பனிவெண் பிறையானே பரம என்று

போகா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.


நஞ்சு ஆர் மணிகண்டன் - விடத்தை உண்ட நீலகண்டன்;

பாகு ஆர் மொழி மாது - பாகு போன்ற இன்மொழி பேசும் உமாதேவி; (சம்பந்தர் தேவாரம் - 3.2.10 - "கரும்பன்ன மென்மொழியாள்");

பாய் வெள்-ஏற்றுப் பாகா - பாய்ந்து செல்லும் வெள்ளை இடபத்தைச் செலுத்துபவனே; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-34: "மெய்யா விமலா விடைப்பாகா");

போகா வினை தீர - நீங்காத வினைகளெல்லாம் தீரும்படி;


8)

செல்லா திழிதேரால் சினமே மிகவோடிச் சிலையி டந்த

அல்லார் நிறத்தரக்கன் அழவோர் விரலூன்றி அடர்த்த அண்ணல்

வில்லால் வியனரணம் மூன்றும் விழவெய்தான் மேவும் ஊராம்

பொல்லா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.


செல்லாது இழி தேரால் சினமே மிக, ஓடிச் சிலை இடந்த - வானில் செல்லும் தேர் கயிலைமலைமேல் செல்லாமல் தரையில் இறங்கியதால் மிகுந்த கோபம் கொண்டு ஓடிப்போய் மலையைப் பேர்த்த; (சிலை - மலை);

அல் ஆர் நிறத்து அரக்கன் அழ, ஓர் விரல் ஊன்றி அடர்த்த அண்ணல் - கரிய மேனி உடைய அரக்கனான இராவணன் அழும்படி, ஓர் விரலை ஊன்றி அவனை நசுக்கிய அண்ணல்; (அல் - இரவு; இருள்); (ஆர்தல் - ஒத்தல்);

வில்லால் வியன் அரணம் மூன்றும் விழ எய்தான் மேவும் ஊர் ஆம் - பெரிய முப்புரங்களும் அழியும்படி வில்லினால் எய்தவன் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (அப்பர் தேவாரம் - 6.5.1 - "வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி");

பொல்லா வினை தீரப் போற்றித் தொழுவார் சேர் பூவனூரே - பாவங்கள் தீர வேண்டிப் பணியும் அடியவர்கள் சென்றடையும் திருப்பூவனூர்.


9)

எழிலார் மலரோன்மால் எங்கும் மிகநேடி எய்த மாட்டா

அழலாய் உயரீசன் அடியார் அகவாசன் ஆதி மூர்த்தி

நிழலார் மழுவாளன் நீறார் மணிமார்பன் நின்ற ஊராம்

பொழிலார் மலரில்தேன் மகிழ்வண் டறையோவாப் பூவ னூரே.


எழில் ஆர் மலரோன் மால் - அழகிய தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்;

எங்கும் மிக நேடி எய்த மாட்டா அழலாய் உயர் ஈசன் - வானிலும் மண்ணிலும் மிகத் தேடியும் அடைய ஒண்ணாத ஜோதியாகி உயர்ந்த ஈசன்;

அடியார் அக-வாசன் - அன்பர் உள்ளத்தில் தங்கியிருப்பவன்; (அகம் - உள்ளம்; வாசன் - வசிப்பவன்);

நிழல் ஆர் மழுவாளன் - ஒளி திகழும் மழுவாள் உடையவன்;

நீறு ஆர் மணி மார்பன் - திருநீற்றைப் பூசிய அழகிய மார்பை உடையவன்;

பொழில் ஆர் மலரில் தேன் மகிழ் வண்டு அறை ஓவாப் பூவனூரே - சோலையில் பூக்களில் மதுவை உண்டு மகிழ்கின்ற வண்டுகளின் ரீங்காரம் ஓயாத திருப்பூவனூர்;


10)

காணாக் குருடர்களாய்க் கள்ளம் பலபேசும் கையர் சொல்லைப்

பேணா தொழிவீரே பேரா வினைதீர்க்கும் பெரிய தேவன்

நாணா அரையினிலோர் நாகம் தனைவீக்கும் நம்பன் ஊராம்

பூணாப் பொடியணிந்த வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.


கையர் - கீழோர்;

பேணாது ஒழிவீர் - மதியாமல் நீங்குங்கள்;

பேரா வினை தீர்க்கும் பெரிய தேவன் - நீங்காத பாவத்தையெல்லாம் நீக்கும் மகாதேவன்;

நாணா அரையினில் ஓர் நாகம்தனை வீக்கும் நம்பன் - அரைநாணாக ஒரு நாகப்பாம்பைக் கட்டியிருக்கும் சிவபெருமான்; (வீக்குதல் - கட்டுதல்); (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

பூணாப் பொடி அணிந்த வண்டு ஆர் பொழில் - மேனிமேல் அலங்காரமாக மகரந்தத் தாதுக்களை அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை; (பூண் - அணி);

(யாப்புக் குறிப்பு: "குருடர்களாய்" - ஒற்று நீக்கி அலகிடுக - கருவிளங்காய்ச் சீர்);


11)

கவியால் கழல்போற்றிக் காதல் மிகவூறிக் கசிப வர்க்குத்

தவியா நிலையீவான் தலைமேற் பிறைதன்னைத் தாங்கும் ஈசன்

செவியோர் குழைகாட்டும் மெய்யன் பவளம்போற் செய்யன் ஊராம்

புவியோர் பசிதீர்க்கும் பொன்னார் வயல்சூழந்த பூவ னூரே.


கவி - பாடல்;

காதல் - அன்பு;

தவியா நிலை ஈவான் - வருத்தம் இல்லாத இன்பநிலையை அளிப்பவன்;

செவி ஓர் குழை காட்டும் மெய்யன் - ஒரு காதில் குழையை அணிந்த திருமேனியன் (உமையொருபங்கன்); மெய்ப்பொருள் ஆனவன்; (மெய் - திருமேனி; மெய்ப்பொருள்);

செய்யன் - சிவந்த நிறம் உடையவன்;

புவியோர் பசி தீர்க்கும் பொன் ஆர் வயல் சூழந்த பூவனூரே - மக்களின் பசியைத் தீர்க்கும் பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பூவனூர்; (சம்பந்தர் தேவாரம் - 1.30.2 - "பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே");


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு : அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - என்ற வாய்பாடு.

இப்பதிகத்தில் அடிகள்தோறும் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

இது "காய் காய் காய் காய் மா தேமா" என்ற அறுசீர் அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம்.

2) உதாரணம்-1: சம்பந்தர் தேவாரம் - 2.72.1 -

பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி

அந்தார் அரவணிந்த அம்மான் இடம்போலும் அந்தண் சாரல்

வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்

செந்தேன் தெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்கும் திருநணாவே.

3) உதாரணம்-2: திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மே லுந்தி".


வி. சுப்பிரமணியன்

-------------- --------------