Friday, October 16, 2026

P.522 - மீயச்சூர் - சங்கடம் தீர்த்தருள்

2020-09-16

P.522 - மீயச்சூர்

-----------

(அறுசீர் விருத்தம் - தானனா தானனா தானனா தானனா தான தானா - சந்தம்)

(விளம் விளம் விளம் விளம் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே");


முற்குறிப்புகள்:

1. இத்தலத்தின் கருவறைக் கோஷ்டத்தில் இருக்கும் க்ஷேத்ரபுராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அழகு! சடையில் கங்கையைத் தாங்கிய ஈசன் உமையைச் சமாதானப்படுத்துவது போன்ற காட்சி.

2. இப்பதிகத்தின் எல்லாப் பாடல்களிலும் உமாதேவியும் கங்கையும் உள்ளனர்.


1)

சங்கடம் தீர்த்தருள் சங்கர என்பவர் தமக்கு நல்லன்

சங்கணி கையினள் சவுந்தர நாயகி தன்ம ணாளன்

திங்களைச் சூடிய செஞ்சடைக் கங்கையைத் தேக்க வல்லான்

வெங்கரி உரித்தவன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


"சங்கடம் தீர்த்தருள் சங்கர" என்பவர் தமக்கு நல்லன் - "கஷ்டத்தைத் தீர்த்தருள் சங்கரனே" என்று தொழும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

சங்கு அணி கையினள் சவுந்தரநாயகி தன் மணாளன் - வளையல் அணிந்த கையையுடைய சௌந்தரநாயகிக்குக் கணவன்; (சங்கு - கைவளை); (* சௌந்தரநாயகி - லலிதாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);

திங்களைச் சூடிய செஞ்சடைக் கங்கையைத் தேக்க-வல்லான் - சந்திரனை அணிந்த சிவந்த சடையில் கங்கையைத் தடுத்து நிறுத்தியவன்;

வெங்கரி உரித்தவன் - கொடிய யானையின் தோலை உரித்தவன்; (வெம்மை - கொடுமை);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


2)

கண்பனித் திடவிரு கழல்தொழும் அன்பரைக் காக்கும் அண்ணல்

தண்புனல் உலவிடும் சடையினில் கொன்றையன் சாம வேதன்

பெண்புடை காட்டிடும் பெரியவன் முருகனைப் பெற்ற தந்தை

வெண்பொடி மேனியன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


கண் பனித்திட இருகழல் தொழும் அன்பரைக் காக்கும் அண்ணல் - கண்ணீர் கசிய உருகி இருதிருவடிகளைத் தொழும் பக்தர்களைக் காக்கும் தலைவன்;

தண்புனல் உலவிடும் சடையினில் கொன்றையன் - குளிர்ந்த கங்கை உலவும் சடையில் கொன்றைமலரை அணிந்தவன்;

சாமவேதன் - சாமவேதப் பிரியன்;

பெண் புடை காட்டிடும் பெரியவன் - உமையை ஒரு பக்கம் காட்டும் பெருமான்;

முருகனைப் பெற்ற தந்தை - முருகனுக்கு அப்பன்;

வெண்பொடி மேனியன் - திருநீற்றை மேனியில் பூசியவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


3)

துரிசறு நெஞ்சொடு தொழுமவர் தொல்வினை துடைக்கும் ஐயன்

எரிசரம் கொடுபுரம் எய்தவன் மழவிடை ஏறும் ஈசன்

சுரிகுழல் உமையொரு பங்கென மகிழ்பவன் தோயம் ஆரும்

விரிசடை வித்தகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


துரிசு-அறு நெஞ்சொடு தொழும்அவர் தொல்வினை துடைக்கும் ஐயன் - குற்றமற்ற நெஞ்சோடு வழிபடும் பக்தர்களது பழைய வினையைத் தீர்க்கும் தலைவன்; (துரிசு - குற்றம்);

எரிசரம்கொடு புரம் எய்தவன் - எரிக்கும் கணையால் முப்புரங்களை எய்தவன்; (சரம் - அம்பு);

மழவிடை ஏறும் ஈசன் - இளைய எருதை வாகனமாக உடைய ஈசன்;

சுரிகுழல் உமை ஒரு பங்கு என மகிழ்பவன் - சுருண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்காக விரும்பியவன்; (சுரிதல் - சுருள்தல்);

தோயம் ஆரும் விரிசடை வித்தகன் - கங்கை பொருந்திய விரிந்த சடையை உடைய ஆற்றல் மிக்கவன்; (தோயம் - நீர்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


4)

சொற்பெரு மாலைகள் சூட்டினார்க் கன்புடைத் துணைவன் எம்மான்

விற்பெரு விறலுடை விசயனுக் கருளிய வேடன் நீரார்

பொற்சடைப் புண்ணியன் மங்கையோர் பங்கினன் புரமெ ரிக்க

வெற்புவில் ஏந்தினான் மேவிய நன்னகர் மீயச் சூரே.


சொற்பெரு மாலைகள் சூட்டினார்க்கு அன்புடைத் துணைவன் எம்மான் - சிறந்த சொல்மாலைகள் சூட்டும் பக்தர்களுக்கு அன்பு உடைய துணைவன் எம்பெருமான்;

விற்-பெருவிறலுடை விசயனுக்கு அருளிய வேடன் - பெரிய வில்வீரனான அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருள வேடன் உருவில் சென்றவன்; (விறல் - வெற்றி; வீரம்);

நீர் ஆர் பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையில் கங்கையை உடையவன்;

மங்கை ஓர் பங்கினன் - உமையொருபங்கன்;

புரம் எரிக்க வெற்புவில் ஏந்தினான் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


5)

அஞ்செழுத் தோதிடும் அன்பருக் கின்பமே அருளும் அண்ணல்

பஞ்சன மெல்லடிப் பாவையோர் பங்கினன் பாய்ந்த கங்கை

செஞ்சடைக் கரந்தவன் கொன்றிடும் கூற்றினைச் செற்ற பாதன்

வெஞ்சின விடையினன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


அஞ்செழுத்து ஓதிடும் அன்பருக்கு இன்பமே அருளும் அண்ணல் - திருவைந்தெழுத்தை ஓதும் பக்தர்களுக்கு இன்பமே அருளும் தலைவன்;

பஞ்சு அன மெல்-அடிப் பாவை ஓர் பங்கினன் - பஞ்சு போன்ற மென்மையான பாதத்தை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

பாய்ந்த கங்கை செஞ்சடைக் கரந்தவன் - பாய்ந்து வந்த கங்கையைச் செஞ்சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - மறைத்தல்);

கொன்றிடும் கூற்றினைச் செற்ற பாதன் - கொல்லும் கூற்றுவனை உதைத்து அழித்த திருப்பாதன்;

வெஞ்சின விடையினன் - மிகவும் சினமுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


6)

ஆற்றவும் அன்பினால் அடிதொழும் அன்பர்தம் அல்லல் தீர்ப்பான்

தோற்றமும் கேடிலான் சுடர்மழு வாளினன் தோகை பங்கன்

ஆற்றினைச் சூடினான் அருமறை விரித்திட ஆல நீழல்

வீற்றருள் ஆரியன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


ஆற்றவும் அன்பினால் அடிதொழும் அன்பர்தம் அல்லல் தீர்ப்பான் - மிகவும் அன்போடு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (ஆற்ற - மிக);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் அற்றவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது); (அப்பர் தேவாரம் - 4.38.9 - "ஆதியும் அந்தம் வைத்தார்");

சுடர்-மழுவாளினன் - பிரகாசிக்கும் மழுவாயுதத்தை உடையவன்; (நெருப்பையும் மழுவையும் ஏந்தியவன் என்றும் பொருள்கொள்ளலாம்); (சுடர்தல் - ஒளிவிடுதல்; சுடர் - நெருப்பு);

தோகை-பங்கன் - உமைபங்கன்; (தோகை - பெண்);

ஆற்றினைச் சூடினான் - கங்காதரன்;

அருமறை விரித்திட ஆலநீழல் வீற்றருள் ஆரியன் - அரிய மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி; (ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


7)

சூழ்பவர் தம்வினைத் துயரறுத் தருளிடும் சூல பாணி

ஆழ்கடல் நஞ்சினை அமுதுசெய் தருளிய அணிமி டற்றன்

கேழ்கிளர் மேனியில் மாதொரு பாதியன் கெங்கை தாங்கும்

வீழ்சடைப் பிஞ்ஞகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


சூழ்பவர்தம் வினைத்துயர் அறுத்து அருளிடும் சூலபாணி - வலம்செய்யும் பக்தர்களது வினைத்துன்பத்தைத் தீர்த்து அருளும் சூலபாணி;

ஆழ்கடல் நஞ்சினை அமுதுசெய்து அருளிய அணி மிடற்றன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு அருளிய அழகிய கண்டத்தை உடையவன்;

கேழ் கிளர் மேனியில் மாது ஒரு பாதியன் - ஒளி திகழும் மேனியில் உமையை ஒரு பாதியாக உடையவன்; (கேழ் - ஒளி);

கெங்கை தாங்கும் வீழ்சடைப் பிஞ்ஞகன் - கங்கையைத் தாங்கிய, தொங்கும் சடையை உடைய தலைக்கோலம் உடையவன்; (கெங்கை - கங்கை); (அப்பர் தேவாரம் - 4.10.6 - "தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே"); (சம்பந்தர் தேவாரம் - 1.57.4 - "கங்கை கரந்தவன் வீழ்சடையினன்");

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


8)

வெள்ளிமால் வெற்பினைப் பேர்த்தவன் அலறிட விரலை வைத்தார்

துள்ளுமான் மறியொடு சூலமும் ஏந்தினார் சுடலை நீற்றர்

வள்ளிகோன் தாதையார் வஞ்சிநுண் ணிடையுடை மங்கை பங்கர்

வெள்ளமார் சடையினர் மேவிய நன்னகர் மீயச் சூரே.


வெள்ளி-மால்-வெற்பினைப் பேர்த்தவன் அலறிட விரலை வைத்தார் - வெள்ளிமயமான பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவர்;

துள்ளு-மான்மறியொடு சூலமும் ஏந்தினார் - துள்ளுகின்ற மான்கன்றையும் சூலத்தையும் ஏந்தியவர்;

சுடலை நீற்றர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;

வள்ளிகோன் தாதையார் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தையார்; (தாதை - தந்தை);

வஞ்சி-நுண்-இடையுடை மங்கை பங்கர் - வஞ்சிக்கொடிபோல் சிற்றிடையுடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

வெள்ளம் ஆர் சடையினர் - கங்கையைச் சடையில் அணிந்தவர்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


9)

மண்ணகழ் மாயனும் வானிடை நேடிய மலரி னானும்

நண்ணரும் சோதியன் நாள்தொறும் நற்றமிழ் நாவில் ஏந்தி

எண்ணினார்க் கெளியவன் இரும்புனற் சடையினன் ஏழை பங்கன்

விண்ணவர் தலைமகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


மண் அகழ் மாயனும் வானிடை நேடிய மலரினானும் நண்ணரும் சோதியன் - நிலத்தை அகழ்ந்து தேடிய திருமாலாலும் வானில் தேடிய பிரமனாலும் அடைய ஒண்ணாத ஜோதிவடிவினன்; (நேடுதல் - தேடுதல்); (நண்ணரும் = நண்ண அரும்; தொகுத்தல் விகாரம்);

நாள்தொறும் நற்றமிழ் நாவில் ஏந்தி எண்ணினார்க்கு எளியவன் - தினமும் தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளை ஓதித் தியானிக்கும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்;

இரும்-புனல் சடையினன் - பெரிய கங்கையைச் சடையில் உடையவன்; (இருமை - பெருமை); (அப்பர் தேவாரம் - 4.56.1 - "பாய் இருங்கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்");

ஏழைபங்கன் - உமைபங்கன்; (ஏழை - பெண்);

விண்ணவர் தலைமகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


10)

பாலையைச் சோலையாப் பகர்ந்திடும் பாவிகள் பறைபொய்ந் நீங்கும்

காலையும் மாலையும் கைதொழும் அன்பரைக் காக்கும் அண்ணல்

கோலவார் சடையிடைக் குளிர்புனல் கரந்தவன் கோதை கூறன்

வேலைநஞ் சுண்டவன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


பாலையைச் சோலையாப் பகர்ந்திடும் பாவிகள் பறை-பொய்ந் நீங்கும் - பாலைவனத்தைச் சோலை என்று சொல்லி வஞ்சிக்கும் பாவிகள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்; (பகர்தல் - சொல்லுதல்; விற்றல்); (பறைதல் - சொல்தல்);

காலையும் மாலையும் கைதொழும் அன்பரைக் காக்கும் அண்ணல் - காலையும் மாலையும் கைகூப்பி வணங்கும் பக்தர்களைக் காக்கின்ற பெருமான்;

கோல-வார்-சடையிடைக் குளிர்-புனல் கரந்தவன் - அழகிய நீண்ட சடையில் குளிர்ந்த கங்கையை மறைத்தவன்; (வார்தல் - நீள்தல்);

கோதை-கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (கோதை - பெண்);

வேலை-நஞ்சு உண்டவன் - கடல்விஷத்தை உண்டவன்; (வேலை - கடல்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


11)

திடமணி எண்புயம் திகழரன் தொழுபவர் செல்லல் தீர்ப்பான்

மடமணி மங்கையை இட(ம்)மகிழ் இறையவன் மன்னு கங்கை

படமணி பாம்பொடு பனிமதி படர்சடைப் பயில வைத்தான்

விடமணி மிடறினன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


திடம் அணி எண்-புயம் திகழ் அரன் தொழுபவர் செல்லல் தீர்ப்பான் - வலிமை மிக்க எட்டுத் தோள்களையுடைய ஹரன் வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (புயம் - புஜம்); (செல்லல் - துன்பம்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.4 - "நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ");

மடம் அணி மங்கையை இடம் மகிழ் இறையவன் - மடம் என்ற பெண்மைக்குணத்தையுடைய (/ அழகும் மென்மையும் உடைய) உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய இறைவன்; (மடம் - அழகு; மென்மை; பெண்களின் நான்கு குணங்களுள் ஒன்று);

மன்னு கங்கை, படம் அணி பாம்பொடு, பனிமதி படர்சடைப் பயில வைத்தான் - நிலைபெற்ற கங்கை, படத்தினை உடைய பாம்பு, குளிர்ந்த திங்கள் இவற்றைப் படர்ந்த சடையில் தங்க வைத்தான்; (மன்னுதல் - நிலைபெறுதல்); (பயில்தல் - தங்குதல்);

விடமணி மிடறினன் - ஆலகாலத்தை நீலமணியாகக் கண்டத்தில் வைத்தவன்; (விடமணி - 1. விட-மணி; 2. விடம் அணி); (மிடறு - கண்டம்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


வி. சுப்பிரமணியன்

-----------


P.521 - ஆக்கூர் - இமையவர்கள் அடிபரவ

2020-09-12

P.521 - ஆக்கூர்

(இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)

-----------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னை")


1)

இமையவர்கள் அடிபரவ எரிகணையால் முப்புரங்கள்

தமைநொடியில் பொடிசெய்த தாழ்சடையன் வாள்நெடுங்கண்

உமையொருபால் மகிழுமிறை உலகினருக் கருள்செய்ய

அமருமிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


இமையவர்கள் அடிபரவ எரிகணையால் முப்புரங்கள்தமை நொடியில் பொடிசெய்த தாழ்சடையன் - தேவர்கள் திருவடியை இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கித் தீக்கணை ஒன்றால் முப்புரங்களை அழித்தவன், தாழும் சடையை உடையவன்;

வாள்நெடுங்கண் உமை ஒருபால் மகிழும் இறை - ஒளியுடைய நீண்ட கண்ணுடைய உமையை ஒரு பக்கத்தில் பாகமாக விரும்பிய இறைவன்; (வாள் - ஒளி); (* வாள்நெடுங்கண்ணி - இத்தலத்து இறைவி திருநாமம்);

உலகினருக்கு அருள்செய்ய அமரும் இடம் - உலகத்தவருக்கு அருள்செய்ய விரும்பி உறையும் தலம்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்; (* தான்தோன்றிமாடம் - ஆக்கூரில் உள்ள கோயிலின் பெயர்);


2)

எப்பொழுதும் ஈந்துவந்த இணையில்லாச் சிறப்புலியார்

முப்பொழுதும் அடிதொழுத முக்கண்ணன் சுடர்வண்ணன்

கைப்புடைய நஞ்சுதனைக் கண்டத்தில் ஒளித்தருள்செய்

அப்பனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


எப்பொழுதும் ஈந்து உவந்த இணை-இல்லாச் சிறப்புலியார் முப்பொழுதும் அடிதொழுத முக்கண்ணன் - ஒப்பற்ற வள்ளன்மையுடைய சிறப்புலி நாயனார் மூன்று வேளையும் வணங்கிய முக்கண்ணன்; (* சிறப்புலி நாயனார் வாழ்ந்த தலம் ஆக்கூர்);

சுடர்வண்ணன் - தீப்போல் செம்மேனியன்; (சுடர் - நெருப்பு);

கைப்பு உடைய நஞ்சுதனைக் கண்டத்தில் ஒளித்து-அருள்செய் அப்பன் இடம் - கசக்கும் ஆலகாலத்தைக் கண்டத்தில் மறைத்துக் காத்தருளியவனும் நம் தந்தையுமான பெருமான் உறையும் தலம்; (கைப்பு - கசப்பு); (அப்பர் தேவாரம் - 4.93.10 - "நஞ்சொளித்த பிரான்");

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


3)

இண்டையென இளம்பிறையை இருஞ்சடையில் சூடியவன்

தெண்டனிடும் அன்பர்க்காத் திருக்கூட்டத் தவரோடும்

உண்டருளும் ஆயிரத்தில் ஒருவனெனும் பெயருடைய

அண்டனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


இண்டை என இளம்பிறையை இருஞ்சடையில் சூடியவன் - பெரிய சடையில் இண்டைமாலை போல இளந்திங்களை அணிந்தவன்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (இருமை - பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 1.77.6 - "நீடிருஞ்சடைமேல் இளம்பிறை துலங்க");

தெண்டனிடும் அன்பர்க்காத் திருக்கூட்டத்தவரோடும் உண்டருளும் ஆயிரத்தில் ஒருவன் எனும் பெயருடைய அண்டன் இடம் - வணங்கிய அன்பருக்காக அடியார் திருக்கூட்டத்தில் ஒருவராகச் சென்று அமுதுசெய்தருளியவனும், ஆயிரத்தில் ஒருவன் என்ற திருப்பெயர் உடையவனும், அண்டங்களுக்கெல்லாம் தலைவனுமான பெருமான் உறையும் தலம்; (அண்டன் - அண்டங்களுக்கு எல்லாம் தலைவன்); (* ஒரு மன்னன் ஆயிரம் அடியவர்களுக்கு அமுதிட்டபொழுது அந்த அடியார் திருக்கூட்டத்தில் ஒருவராக வந்து ஈசன் உண்டருளினான்; "ஆயிரத்தில் ஒருவன்" - ஆக்கூர் உற்சவமூர்த்தி திருநாமம்; இச்செய்தி பெரியபுராணத்தில் இல்லை; ஆதலால் இப்படி அன்னமிட்டவர் சிறப்புலி நாயனார் அல்லர், வேறு ஒரு மன்னர் என்று ஊகிக்கலாம்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


4)

பாலனைய நீறணிந்து பாத(ம்)நினை மாணிக்காக்

காலனவன் உயிர்காலக் கழல்வீசிக் காத்தபிரான்

மாலழிய நால்வர்க்கு மறைப்பொருளை விரித்தருளும்

ஆலனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


பால் அனைய நீறு அணிந்து பாதம் நினை மாணிக்காக் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசித் திருவடியைத் தியானித்த மார்க்கண்டேயருக்காகக்; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (மாணிக்கா - மாணிக்காக);

காலன்அவன் உயிர் காலக் கழல் வீசிக் காத்த பிரான் - காலனை அவனது உயிரைக் கக்கும்படி திருவடியால் உதைத்து மார்க்கண்டேயரைக் காத்த பெருமான்; (கால்தல் - கக்குதல்);

மால் அழிய நால்வர்க்கு மறைப்பொருளை விரித்தருளும் ஆலன் இடம் - அறியாமை நீங்குமாறு சனகாதியர் நால்வருக்கு வேதப்பொருளை விளக்கிய தட்சிணாமூர்த்தியான பெருமான் உறையும் தலம்; (ஆலன் - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


5)

மெய்யினில்வெண் ணீறணிந்து விரிசடைமேல் மதிசூடிக்

கையினிலோர் வெண்டலையைக் கலனாக ஏந்தியவன்

மையணியும் கண்ணுமையை வாமத்தில் மகிழ்கின்ற

ஐயனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


மெய்யினில் வெண்ணீறு அணிந்து - திருமேனியில் வெண்ணீற்றைப் பூசி;

விரிசடைமேல் மதிசூடிக் - விரிந்த சடையின்மேல் சந்திரனை அணிந்து;

கையினில் ஓர் வெண்தலையைக் கலனாக ஏந்தியவன் - வெண்மையான பிரம-கபாலத்தைப் பிச்சைப்பாத்திரமாகக் கையில் ஏந்தியவன்;

மை அணியும் கண்-உமையை வாமத்தில் மகிழ்கின்ற ஐயன் இடம் - மை அணிந்த கண்ணையுடைய உமையை இடப்பக்கத்தில் பாகமாக விரும்பிய பெருமான் உறையும் தலம்; (வாமம் - இடப்பக்கம்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


6)

நாடிமலர் பலதூவி நாள்தோறும் நற்றமிழைப்

பாடியடி பணிந்தார்தம் பழவினைகள் பாற்றுமரன்

கூடிமுழ வார்த்துப்பல் கூளிகள் சூழநடம்

ஆடியிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


நாடி மலர் பல தூவி நாள்தோறும் நற்றமிழைப் பாடி அடிபணிந்தார்தம் பழவினைகள் பாற்றும் அரன் - விரும்பிப் பல பூக்களைத் தூவித் தினமும் நல்ல தமிழான தேவாரம் திருவாசகம் பாடித் திருவடியை வணங்கியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கும் ஹரன்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

கூடி முழவு ஆர்த்துப் பல்-கூளிகள் சூழ நடம்-ஆடி இடம் - திரண்டு பல பேய்கள் முழவுகளை முழக்கிச் சூழக், கூத்தாடுகின்ற பெருமான் உறையும் தலம்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கூளி - பேய்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


7)

மழவிடையன் கழலிணையை வழிபட்ட சிலந்திக்குச்

சுழலுடைய காவிரிபாய் சோணாட்டின் அரசளித்தான்

அழலனைய மேனியினான் அரவத்தை அரையார்த்த

அழகனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


மழ-விடையன் கழலிணையை வழிபட்ட சிலந்திக்குச் - இளைய எருதை வாகனமாக உடையவனது திருவடியை வழிபட்ட சிலந்திக்கு;

சுழல் உடைய காவிரி பாய் சோணாட்டின் அரசு அளித்தான் - சுழல்களை உடைய காவிரியாறு பாயும் சோழநாட்டின் அரசுரிமையை அளித்தவன்; (திருவானைக்காவில் வழிபட்ட சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவன்); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

அழல் அனைய மேனியினான் - தீப் போன்ற செம்மேனியை உடையவன்;

அரவத்தை அரை ஆர்த்த அழகன் இடம் - பாம்பை அரைநாணாகக் கட்டிய பெருமான் உறையும் தலம்; (ஆர்த்தல் - கட்டுதல்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


8)

புத்தியிலா அரக்கன்போய்ப் பொன்மலையை எடுத்தக்கால்

பத்துமுடி நெரியவொரு பாதவிரல் ஊன்றியவன்

அத்திரமொன் றருந்தவஞ்செய் அருச்சுனனுக் கருள்புரிந்த

அத்தனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


புத்தி-இலா அரக்கன் போய்ப் பொன்மலையை எடுத்தக்கால் - அறிவற்ற இராவணன் சென்று கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கியபொழுது; (பொன்மலை - அழகிய மலை); (அப்பர் தேவாரம் - 6.82.10 - "இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கஞ்செய்து எடுத்தலுமே");

பத்துமுடி நெரிய ஒரு பாதவிரல் ஊன்றியவன் - அவனது பத்துத்தலைகளும் நசுங்குமாறு ஒரு திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்;

அத்திரம் ஒன்று அருந்-தவம் செய் அருச்சுனனுக்கு அருள்புரிந்த அத்தன் இடம் - ஒப்பற்ற பாசுபதாஸ்திரத்தை அரிய தவம் செய்த அர்ஜுனனுக்கு அருளியவனும் எல்லார்க்கும் தந்தையுமான பெருமான் உறையும் தலம்;

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


9)

வெண்ணெயுண்ட திருமாலும் வேதனு(ம்)முன் அடிமுடியை

நண்ணரிய பரஞ்சோதி நாளுமடி தொழுபத்தர்

எண்ணுருவம் ஏற்றருளும் எம்பெருமான் ஏறமர்ந்த

அண்ணலிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


வெண்ணெய் உண்ட திருமாலும் வேதனும் முன் அடிமுடியை நண்ணரிய பரஞ்சோதி - கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெயை உண்ட திருமாலாலும் பிரமனாலும் முன்பு அடியையும் முடியையும் அடைய ஒண்ணாதபடி உயர்ந்த மேலான ஜோதி; (நண்ணரிய - நண்ண அரிய - தொகுத்தல் விகாரம்);

நாளும் அடிதொழு பத்தர் எண்ணுருவம் ஏற்றருளும் எம்பெருமான் - தினமும் திருவடியை வணங்கும் பக்தர்கள் எண்ணிய வடிவத்தை ஏற்று அவர்களுக்கு அருளும் எம் பெருமான்;

ஏறு அமர்ந்த அண்ணல் இடம் - இடபத்தை வாகனமாக விரும்பிய பெருமான் உறையும் தலம்; (அமர்தல் - விரும்புதல்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


10)

தூற்றுமொழி பேசியுழல் துரிசுடையார் சொல்நீங்கும்

போற்றிசெயும் அன்பர்க்குப் போகங்கள் புரந்தருள்வான்

கீற்றுமதி அணிசடையில் கேழில்லாக் கெங்கையெனும்

ஆற்றனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


தூற்று-மொழி பேசி உழல் துரிசு உடையார் சொல் நீங்கும் - தூற்றுகின்ற பழிமொழிகளைப் பேசித் திரியும் குற்றமுடையவர்களது சொற்களை மதியாமல் நீங்குங்கள்;

போற்றிசெயும் அன்பர்க்குப் போகங்கள் புரந்து-அருள்வான் - போற்றி வணங்கும் பக்தர்களுக்குப் போகங்களை அருள்பவன்; (புரத்தல் - அனுக்கிரகித்தல்);

கீற்று-மதி அணி சடையில் கேழ் இல்லாக் கெங்கை எனும் ஆற்றன் இடம் - பிறையை அணிந்த சடையில் ஒப்பற்ற கங்கை என்ற ஆற்றை உடைய பெருமான் உறையும் தலம்; (கேழ் - ஒப்பு); (கெங்கை - கங்கை); (அப்பர் தேவாரம் - 4.10.6 - "தென்றிசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே");

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


11)

குரவமணி முடிமீது கொக்கிறகும் சூடியவன்

பரவுமரு விடந்தன்னைப் பருகிமுகில் அன்னநிறம்

விரவுமணி மிடறுடையான் வெண்ணூலார் அகலத்தில்

அரவனிடம் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.


குரவம் அணி முடிமீது கொக்கிறகும் சூடியவன் - குராமலரை அணிந்த திருமுடிமேல் கொக்கிறகையும் சூடியவன்; (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

பரவும் அருவிடந்தன்னைப் பருகி முகில் அன்ன நிறம் விரவு மணிமிடறு உடையான் - பரவிய ஆலகாலத்தை உண்டு மேகம் போன்ற நிறம் பொருந்திய நீலமணிகண்டம் உடையவன்; (பருகுதல் - உண்ணுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.10.6 - "கடல் நஞ்சைப் பருகுந்தனை துணிவார்");

வெண்ணூல் ஆர் அகலத்தில் அரவன் இடம் - முப்புரிநூல் பொருந்திய மார்பில் பாம்பை (மாலையாக) அணிந்த பெருமான் உறையும் தலம்; (அகலம் - மார்பு); (அப்பர் தேவாரம் - 6.3.6 - "நீறேற்கப் பூசும் அகலத்தானை"); (அரவன் - பாம்பை அணிந்தவன்);

ஆக்கூரில் தான்தோன்றி மாடமே - ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் என்ற கோயில்;


வி. சுப்பிரமணியன்

-----------


P.520 - பேரளம் - வீழ்புனல் தேக்கிய

2020-09-07

P.520 - பேரளம்

-----------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

வீழ்புனல் தேக்கிய வேணி வெண்மதி

வாழ்பதி செய்திட வல்ல ஈசனைச்

சூழ்பொழிற் பேரளச் சுயம்பு நாதனைத்

தாழ்பவர் தம்வினை சாய்தல் திண்ணமே.


வீழ்-புனல் தேக்கிய வேணி - வானிலிருந்து இழிந்த கங்கையை அடைத்த சடையை; (வேணி - சடை);

வெண்மதி வாழ் பதி செய்திட வல்ல ஈசனைச் - வெண்திங்கள் வாழும் இடம் ஆக்க வல்ல ஈசனை; (பதி - உறைவிடம்; ஊர்);

சூழ்-பொழிற் பேரளச் சுயம்புநாதனைத் - சோலை சூழ்ந்த பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை; (* சுயம்புநாதன் - பேரளத்தில் இறைவன் திருநாமம்);

தாழ்பவர்தம் வினை சாய்தல் திண்ணமே - வணங்கும் பக்தர்களது வினை அழிதல் நிச்சயம்;


2)

பாலனார் அஞ்சிடப் பாசம் வீசிய

காலனார் தமையுதை கருணை வாரியைச்

சோலையார் பேரளச் சுயம்பு நாதனை

ஆலமார் கண்டனை அடைதி நெஞ்சமே.


பாலனார் அஞ்சிடப் பாசம் வீசிய காலனார்தமை உதை கருணை வாரியைச் - மார்க்கண்டேயர் அஞ்சும்படி பாசத்தை வீசிய காலனை உதைத்த கருணைக்கடலை; (வாரி - கடல்);

சோலை ஆர் பேரளச் சுயம்புநாதனை - சோலை நிறைந்த பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

ஆலம் ஆர் கண்டனை அடைதி நெஞ்சமே - ஆலகாலத்தை உண்டு அணிந்த நீலகண்டனை நெஞ்சே அடைவாயாக; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்); (அடைதி - சரண்புகுவாய்; அடைவாய்); (சுந்தரர் தேவாரம் - 7.54.8 - "வாடி நீயிருந்து என் செய்தி மனமே"); (இலக்கணக் குறிப்பு - "இ" - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி; நடத்தி - என்பது நடப்பாய் என்று பொருள்படும்; செய்தி - செய்வாய்; நினைதி - நினைப்பாய்; எண்ணுதி - எண்ணுவாய்);


3)

நன்மையார் திருப்பெயர் நாளும் எண்ணிடும்

தன்மையார்க் கன்பனைச் சாம வேதனைத்

தொன்மையார் பேரளச் சுயம்பு நாதனைப்

புன்மைதீர் போதனைப் போற்று நெஞ்சமே.


நன்மை ஆர் திருப்பெயர் நாளும் எண்ணிடும் தன்மையார்க்கு அன்பனைச் - நன்மை மிக்க திருநாமத்தைத் தினமும் தியானிக்கும் அன்பர்களுக்கு அன்பனை;

சாமவேதனைத் - சாமவேதத்தில் விருப்பமுடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 3.56.2 - "சடையினன் சாமவேதன்");

தொன்மை ஆர் பேரளச் சுயம்புநாதனைப் - பழமை மிக்க பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

புன்மை தீர் போதனைப் - சிறுமைகளைத் தீர்க்கும் ஞானவடிவினனை;

போற்று நெஞ்சமே - நெஞ்சே போற்றுவாயாக;

(* பேரளத் தலக்குறிப்பு நூலில் கூறப்படும் தலவரலாற்றுச் செய்தி: கார்ஷணாஜினி என்ற முனிவர் ஈசனது எல்லா நாமங்களையும் சொல்லி வழிபட எண்ணி இத்தலத்தில் தவம்செய்தார். ஈசன் அவ்வண்ணமே அருள்செய்தான். அதன் காரணமாகப், "பெயர்களுக்கு இருப்பிடம்" என்ற தலப்பெயர். (பேரளம் = பேர் + அளம்));


4)

இணையடி பணிசுரர்க் கிரங்கி வெந்நுனைக்

கணைதொடு வீரனைக் கம்பம் தீர்த்தருள்

துணைவனைப் பேரளச் சுயம்பு நாதனைப்

பிணைமலர் கொடுதொழப் பெருகும் இன்பமே.


இணையடி பணி சுரர்க்கு இரங்கி வெந்-நுனைக் கணை தொடு வீரனைக் - இருதிருவடிகளைப் பணிந்த தேவர்களுக்கு இரங்கி, (முப்புரங்களை எரிக்க) நுனியில் தீயை உடைய கணையை எய்த வீரனை; (வெம்மை - சூடு); (நுனை - முனை; நுனி);

கம்பம் தீர்த்தருள் துணைவனைப் - நடுக்கத்தைத் தீர்த்து அருளும் துணைவனை; (கம்பம் - நடுக்கம் - அச்சம்);

பேரளச் சுயம்புநாதனைப் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

பிணைமலர்கொடு தொழப் பெருகும் இன்பமே - தொடுத்த மலரால் தொழுதால் இன்பம் பெருகும்;


5)

குழையணி காதனைக் கோதில் சீருடைப்

பழையனைப் பணிந்தவர் பாவம் தீர்த்திடும்

தொழிலனைப் பேரளச் சுயம்பு நாதனை

அழலினை ஏந்தியை அடைதி நெஞ்சமே.


குழை அணி காதனைக் - காதில் குழையை அணிந்தவனை;

கோது-இல் சீருடைப் பழையனைப் - குற்றமற்ற புகழை உடைய தொன்மையானவனை;

பணிந்தவர் பாவம் தீர்த்திடும் தொழிலனைப் - வணங்கியவர்களது பாவத்தைத் தீர்க்கும் தொழிலை உடையவனை; (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே");

பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

அழலினை ஏந்தியை - கையில் நெருப்பை ஏந்தியவனை;

அடைதி நெஞ்சமே - நெஞ்சே, அடைவாயாக;


6)

திவாகரர் கோடியிற் றேசன் தாள்தொழு(து)

அவாவினை அறுத்தவர்க்(கு) அபயம் நல்கிடும்

சுவாமியைப் பேரளச் சுயம்பு நாதனைப்

பவானிதன் கொழுநனைப் பரவி வாழ்மினே.


திவாகரர் கோடியின் தேசன் தாள் தொழுது - கோடி சூரியரினும் ஒளி மிக்கவனது திருவடியைத் தொழுது; (திவாகரன் - சூரியன்); (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு); (தேசன் - ஒளிவடிவினன்); (கோடியிற்றேசன் = கோடியின் தேசன் - கோடியைவிட ஒளியுடையவன்);

அவாவினை அறுத்தவர்க்கு அபயம் நல்கிடும் சுவாமியைப் - தங்கள் ஆசைகளைத் துறந்தவர்களுக்கு (பற்றுகளை அறுத்தவர்களுக்கு) அபயம் அருளும் சுவாமியை; (அவா - ஆசை);

பேரளச் சுயம்புநாதனைப் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

பவானிதன் கொழுநனைப் - பவானி என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனை; (* பவானி - இத்தலத்து இறைவி திருநாமம்);

பரவி வாழ்மினே - துதித்து உய்யுங்கள்; (மின் - முன்னிலைப் பன்மை ஏவல் விகுதி);


7)

வண்டமர் கணைதொடு மதனை நீறுசெய்

அண்டனை ஆதியை அரனை வெண்டிங்கள்

துண்டணி பேரளச் சுயம்பு நாதனைத்

தெண்டிரைச் சடையனைச் சிந்தி நெஞ்சமே.


வண்டு அமர் கணைதொடு மதனை நீறுசெய் அண்டனை - வண்டுகள் விரும்பும் மலர்க்கணையை ஏவிய மன்மதனைச் சாம்பலாக்கிய கடவுளை; (அண்டன் - எல்லா அண்டங்களுக்கும் தலைவன்);

ஆதியை - முதல்வனை;

அரனை - ஹரனை;

வெண்திங்கள்-துண்டு அணி - திருமுடிமேல் வெண்பிறையை அணிந்த; (திங்கட்டுண்டு - திங்கள்+துண்டு);

பேரளச் சுயம்புநாதனைத் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

தெண்திரைச் சடையனைச் சிந்தி நெஞ்சமே - தெளிந்த அலைகளையுடைய கங்கையைச் சடையில் உடையவனை, நெஞ்சே, சிந்திப்பாயாக;


8)

கத்திட அரக்கனைக் கயிலைக் கீழ்முடி

பத்தடர் பரமனைப் பால்வெண் ணீறணி

சுத்தனைப் பேரளச் சுயம்பு நாதனை

நித்தனை நாள்தொறும் நினைதி நெஞ்சமே.


கத்திட அரக்கனைக் கயிலைக்கீழ் முடி பத்து அடர் பரமனைப் - ஓலமிட்டு அழும்படி இராவணனைக் கயிலைமலையின்கீழ் அவனது பத்து-முடிகளையும் நசுக்கிய பரமனை; (அடர்த்தல் - நசுக்குதல்);

பால்-வெண்ணீறு அணி சுத்தனைப் - பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய தூயனை;

பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

நித்தனை - அழிவற்றவனை; (நித்தன் - நித்தியன் - என்றும் உள்ளவன்);

நாள்தொறும் நினைதி நெஞ்சமே - நெஞ்சே நீ தினந்தோறும் நினைவாயாக;


9)

தேன்றிகழ் மலரணி தேவ தேவனைக்

கோன்றனை அரியயன் குறுகொ ணாதுயர்

தோன்றலைப் பேரளச் சுயம்பு நாதனை

மான்றனை ஏந்தியை வாழ்த்தி வாழ்மினே.


தேன் திகழ் மலர் அணி தேவதேவனைக் - தேன் திகழும் மலர்களை அணிந்த தேவதேவனை; (தேன்றிகழ் = தேன்+திகழ்);

கோன்-தனை - தலைவனை;

அரி அயன் குறுகொணாது உயர் தோன்றலைப் - திருமால் பிரமன் இவர்களால் அடைய இயலாதபடி எல்லையின்றி நீண்ட தலைவனை; (குறுகொணாது - குறுக ஒணாது - ஈற்றகரம் தொக்கது); (குறுகுதல் - அணுகுதல்); (ஒண்ணுதல் - இயலுதல்); (தோன்றல் - தலைவன்);

பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

மான்-தனை ஏந்தியை வாழ்த்தி வாழ்மினே - கையில் மானை ஏந்திய பெருமானை வாழ்த்தி உய்யுங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);


10)

குறையறி வுடையவர் குற்றக் கொள்கையர்

அறைவன பொருளல அரனை ஆவடு

துறையனைச் பேரளச் சுயம்பு நாதனைப்

பிறையணி இறைவனைப் பேணி உய்ம்மினே.


குறையறிவு உடையவர் குற்றக்-கொள்கையர் அறைவன பொருள் அல - தெளிந்த அறிவு இல்லாதவர்களும் குற்றமுடைய கொள்கைகளை உடையவர்களும் சொல்லும் பொய்ம்மொழிகள் பொருளற்றவை; (அறைதல் - சொல்லுதல்);

அரனை - ஹரனை;

ஆவடுதுறையனைச் - திருவாவடுதுறையில் உறைபவனை;

பேரளச் சுயம்புநாதனை - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

பிறை அணி இறைவனைப் பேணி உய்ம்மினே - பிறையை அணிந்த இறைவனைப் போற்றி உய்யுங்கள்;


11)

சாலநைந் திமையவர் சங்க ராவென

வேலனைப் பயந்தருள் விமல னைப்புலித்

தோலனைப் பேரளச் சுயம்பு நாதனைச்

சூலனைத் துதிசெயத் துன்பம் நீங்குமே.


சால நைந்து இமையவர் "சங்கரா" என - (சூரபத்மனின் துன்புறுத்தலால்) மிகவும் வாடி வருந்திய தேவர்கள், "சங்கரனே! அருளாய்" என்று இறைஞ்ச; (நைதல் - வாடுதல்; மனம் வருந்துதல்);

வேலனைப் பயந்து-அருள் விமலனைப் - அவர்களுக்கு இரங்கி, வேலை ஏந்தும் முருகனைப் பெற்றருளிய தூயனை; (பயத்தல் - மகப் பெறுதல்);

புலித்தோலனைப் - புலித்தோலை ஆடையாகக் கட்டியவனை;

பேரளச் சுயம்புநாதனைச் - பேரளத்தில் எழுந்தருளிய சுயம்புநாதனை;

சூலனைத் துதிசெயத் துன்பம் நீங்குமே - சூலபாணியைத் துதித்தால் நம் துன்பம் தீரும்;


வி. சுப்பிரமணியன்

-----------