Showing posts with label வீழிமிழலை. Show all posts
Showing posts with label வீழிமிழலை. Show all posts

Wednesday, May 6, 2026

T.232 - வீழிமிழலை - திரைமலி கடலில்

2019-08-15

T. 232 - வீழிமிழலை - திரைமலி கடலில்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனன தனதன தனன

தனதன தனன .. தனதான)

(எழுகடல் மணலை - திருப்புகழ் - சிதம்பரம்)


திரைமலி கடலில் மறிகலம் அனைய

.. .. செடியது தருவல் .. வினைதீரச்

.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது

.. .. திருவடி பணியும் .. அறிவீயாய்

அரையினில் அணிகொள் துகிலென உழுவை

.. .. அதன்வரி அதளை .. உடையானே

.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்

.. .. அருநமன் உருள .. உதைகாலா

வரையெனும் அரிய சிலைகொடு பெரிய

.. .. மதிலவை எரிசெய் .. ஒருவீரா

.. மலரடி இணையை வழிபடு மதியம்

.. .. வளர்சடை உலவ .. அருள்வோனே

விரைகமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ

.. .. விலைபெறு படியை .. அணிவீழி

.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த

.. .. விடைதனை உடைய .. பெருமானே.


பதம் பிரித்து:

திரை மலி கடலில் மறி-கலம் அனைய

.. .. செடியது தரு வல்வினை தீரச்,

.. செழுமலர் இனிய தமிழ்கொடு நினது

.. .. திருவடி பணியும் .. அறிவு ஈயாய்;

அரையினில் அணிகொள் துகில் என உழுவை

.. .. அதன் வரி-அதளை .. உடையானே;

.. அடிதொழு(ம்) முனிவர் வெருவிட அடையும்

.. .. அரு-நமன் உருள .. உதை-காலா;

வரையெனும் அரிய சிலைகொடு பெரிய

.. .. மதிலவை எரிசெய் .. ஒரு வீரா;

.. மலரடி-இணையை வழிபடு மதியம்

.. .. வளர்-சடை உலவ .. அருள்வோனே;

விரை கமழ் தமிழ் சொல் கவுணியர் மகிழ

.. .. விலைபெறு படியை .. அணி-வீழி-

.. மிழலையில் அருளும் அழகுடை விகிர்த;

.. .. விடைதனை உடைய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

திரை மலி கடலில் மறி கலம் அனைய செடியது தரு வல் வினை தீரச் - அலை மிகுந்த கடலில் முழுகின்ற படகுபோல் (= அந்தப் படகில் செல்பவர்கள் படுவது போன்ற) துன்பம் தருகின்ற வலியவினை தீருமாறு; (மறிதல் - கீழ்மேலாதல்);

செழுமலர் இனிய தமிழ்கொடு நினது திருவடி பணியும் அறிவு ஈயாய் - சிறந்த பூக்களாலும், இனிய தமிழ்ப்பாமாலைகளாலும் உன் திருவடியை வழிபடும் அறிவை எனக்கு அருள்வாயாக;

அரையினில் அணிகொள் துகில் என உழுவை அதன் வரி-அதளை உடையானே; - அரையில் அழகிய துகில் போலப் புலியின் வரித்தோலைக் கட்டியவனே; (அணி - அழகு); (துகில் - நல்லாடை); (உழுவை - புலி); (அதள் - தோல்);

அடி தொழு(ம்) முனிவர் வெருவிட அடையும் அருநமன் உருள உதை காலா - உன் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயர் அஞ்சுமாறு அவரை நெருங்கிய கொடிய கூற்றுவனைத் தரையில் உருளும்படி உதைத்த காலகாலனே; (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.6 - "ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் எனவும்");

வரைனும் அரிய சிலைகொடு பெரிய மதிலவை எரிசெய் ஒரு வீரா - மேருமலை என்ற அரிய வில்லால் பெரிய முப்புரங்களை எரித்த ஒப்பற்ற வீரனே; (வரை - மலை); (சிலை - வில்); (ஒரு - ஒப்பற்ற);

மலரடி-இணையை வழிபடு மதியம் வளர்சடை உலவ அருள்வோனே - உன் இரு-மலர்த்திருவடிகளை வணங்கிய சந்திரனை வளரும் சடையின்மேல் உலவும்படி அருளியவனே;

விரை கமழ் தமிழ்சொல் கவுணியர் மகிழ விலைபெறு படியை அணி வீழிமிழலையில் அருளும் அழகுடை விகிர்த - மணம் கமழும் தமிழ்ப்பாமாலை பாடிய சம்பந்தர் மகிழும்படி அவருக்கு நல்ல மதிப்புடைய படிக்காசை அழகிய திருவீழிமிழலையில் அருளிய விகிர்தனே; (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (படி - படிக்காசு); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்");

விடைதனை உடைய பெருமானே - இடபவாகனம் உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

2019-08-15

T. 231 - வீழிமிழலை - பெரிய உலகினில்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான)

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - சுவாமிமலை)


பெரிய உலகினில் அடையும் இடர்மிகு

.. .. பிறவி அவைமுடி .. விலவாகப்

.. பிழைகள் புரிவது பிரிய மண(ம்)மலி

.. .. பிணையல் உனதடி .. இடுவேனோ

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழவிடம் .. அமுதேபோல்

.. இனிது பருகிய மிடறு தனிலிருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே

கரிய குழலினில் நறவ மலரணி

.. .. கலவ மயிலன .. உமைபாகா

.. கமல மலரன நயனம் இடுமரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே

விரியு(ம்) மலர்மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணிநகர் .. திருவீழி

.. மிழலை தனிலடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அறவருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு

.. .. பிறவி அவை முடிவு .. இல ஆகப்

.. பிழைகள் புரிவது பிரிய, மண(ம்)மலி

.. .. பிணையல் உனது அடி .. இடுவேனோ?

இரியும் இமையவர் அழுது மலரடி

.. .. இணையில் விழ, விடம் .. அமுதே போல்

.. இனிது பருகிய மிடறுதனில் இருள்

.. .. இலகு மணிதனை .. உடையானே;

கரிய குழலினில் நறவ-மலர் அணி

.. .. கலவ-மயில் அன .. உமைபாகா;

.. கமல-மலர் அன நயனம் இடும் அரி

.. .. கருது திகிரியை .. அருள்வோனே;

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம்

.. .. விரவும் அணி-நகர் .. திருவீழி-

.. மிழலைதனில் அடி பரவும் அடியவர்

.. .. வினைகள் அற அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

பெரிய உலகினில் அடையும் இடர் மிகு பிறவி அவை முடிவு இகப் பிழைகள் புரிவது பிரிய - இந்தப் பெரிய நிலவுலகில் அடைகின்ற துன்பம் மிகுந்த பிறவிகள் முடிவின்றித் தொடரும்படி தீவினை செய்வது நீங்க; (பிரிதல் - நீங்குதல்; விட்டுவிலகுதல்);

மண(ம்) மலி பிணையல் உனது அடி இடுவேனோ - வாசமலர்-மாலைகளை உன் திருவடியில் இடுவேனோ? அப்படி வணங்க அருள்வாயாக; (பிணையல் - மலர்மாலை);

இரியும் இமையவர் அழுது மலரடி-இணையில் விழ, விடம் அமுதே போல் இனிது பருகிய மிடறுதனில் இருள் இலகு மணிதனை உடையானே - அஞ்சி ஓடிய தேவர்கள் அழுது உன் மலர்த்திருவடிகள் இரண்டில் விழுந்து இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை அமுதம்போல் உண்டு, கண்டத்தில் கருமை திகழும் மணியை உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.121.4 - "ஒளிதிகழ் மேனி கருகினாரெல்லாம் கைதொழுதேத்தக் கடலுள் நஞ்சமுதமா வாங்கிப் பருகினார் போலும்");

கரிய குழலினில் நறவ-மலர் அணி கலவ-மயில் அன உமைபாகா - கருங்கூந்தலில் வாசமலர்களை அணிந்த, கலாபமயில் போன்ற உமையை ஒரு பாகமாக உடையவனே; (நறவம் - தேன்; வாசனை); (கலவம் - கலாபம் - தோகை);

கமல-மலர் அன நயனம் இடும் அரி கருது திகிரியை அருள்வோனே - தாமரைமலர் போன்ற கண்ணை இடந்து இட்டு வழிபட்ட திருமால் விரும்பிய சக்கராயுதத்தை அருளியவனே; (திகிரி - சக்கரம்); (* இது திருவீழிமிழலைத் தலவரலாற்றுச் செய்தி);

விரியு(ம்) மலர் மலி பொழிலில் அளியினம் விரவும் அணி நகர் திருவீழிமிழலைதனில் - விரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையில் வண்டினங்கள் பொருந்துகின்ற அழகிய திருவீழிமிழலையில்; (அளி - வண்டு);

டி பரவும் அடியவர் வினைகள் அறருள் பெருமானே - திருவடியைத் துதிக்கும் பக்தர்களது வினைகள் தீர அருள்கின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, May 5, 2026

T.221 - வீழிமிழலை - நீதிநெறி அறியாது

2019-07-11

T. 221 - வீழிமிழலை - நீதிநெறிறியாது

-----------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான)

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


நீதி நெறியறி யாது நில(ம்)மிசை

.. .. நீடு துயரிடை .. உழல்வேனும்

.. நேயர் குழுவினை நாடி வழிபடு

.. .. நீர்மை பெறவருள் .. புரியாயே

ஆதி யினிலரி போது விழியிட

.. .. ஆழி அருளிய .. அழகாநின்

.. ஆக(ம்) மிசையொளி நீறு திகழ்தர

.. .. ஆடை எனவதள் .. உடையானே

மேதி மிசைவரு கால னவனுயிர்

.. .. வீட உதைதரு .. கழலானே

.. மேகம் அணவிடு சோலை வயலணி

.. .. வீழி மிழலையில் .. உறைவோனே

காதில் ஒருகுழை காண இட(ம்)மிகு

.. .. காதல் மலைமகள் .. மகிழ்வோனே

.. காழி மகனுனை ஓத உயர்வுறு

.. .. காசு தினமருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

நீதி-நெறி அறியாது நில(ம்)மிசை

.. .. நீடு துயரிடை .. உழல்வேனும்,

.. நேயர் குழுவினை நாடி வழிபடு

.. .. நீர்மை பெறவருள் .. புரியாயே;

ஆதியினில் அரி போது-விழி இட

.. .. ஆழி அருளிய .. அழகா; நின்

.. ஆக(ம்)மிசை ஒளி-நீறு திகழ்தர

.. .. ஆடை என அதள் .. உடையானே;

மேதிமிசை வரு காலனவன் உயிர்

.. .. வீட உதைதரு .. கழலானே;

.. மேகம் அணவிடு சோலை வயல் அணி

.. .. வீழிமிழலையில் .. உறைவோனே;

காதில் ஒருகுழை காண, இட(ம்) மிகு

.. .. காதல் மலைமகள் .. மகிழ்வோனே;

.. காழி-மகன் உனை ஓத, உயர்வுறு

.. .. காசு தினம் அருள் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

நீதி-நெறிறியாது நில(ம்)மிசை நீடு துயரிடை உழல்வேனும் - நல்ல வழியை அறியாமல் இம்மண்ணின்மேல் நெடுந்துன்பத்தில் உழல்கின்ற நானும்; (நீடு - நெடுங்காலம்);

நேயர்-குழுவினை நாடி வழிபடு நீர்மை பெறருள்புரியாயே - அன்பர்-குழாத்தை அடைந்து வழிபடுகின்ற குணத்தை அடைய அருள்வாயாக; (நேயர் - பக்தர்);

ஆதியினில் அரி போது-விழி ஆழி அருளிய அழகா - முன்பு திருமால் தன் மலர் போன்ற கண்ணைத் தோண்டி ஒரு தாமரைப்பூவாக உன் திருவடியில் இட்டு வழிபாடு செய்யவும் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த அழகனே; (போது - பூ); (* திருமாலுக்குச் சக்கரம் அளித்ததைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க);

நின் ஆக(ம்)மிசை ஒளி-நீறு திகழ்தர ஆடை என அதள் உடையானே; - உன் திருமேனிமேல் ஒளியுடைய திருநீறு விளங்க, ஆடை என்று தோலை அணிந்தவனே; (ஆகம் - மேனி); (தருதல் - ஒரு துணைவினை); (அதள் - தோல்);

மேதிமிசை வரு காலனவன் உயிர் வீட உதைதரு கழலானே - எருமைவாகனத்தின்மேல் வரும் காலனது உயிர் அழியும்படி அவனை உதைத்த திருவடியானே; (மேதி - எருமை); (வீடுதல் - கெடுதல்; ஒழிதல்; சாதல்);

மேகம் அணவிடு சோலை வயல் அணி வீழிமிழலையில் உறைவோனே - மேகத்தை நெருங்கும் உயர்ந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருவீழிமிழலையில் உறைகின்றவனே; (அணவுதல் - அணுகுதல்);

காதில் ஒரு குழை காண இட(ம்) மிகு காதல் மலைமகள் மகிழ்வோனே - ஒரு காதில் குழை திகழ, இடப்பக்கம் மிகுந்த அன்புடைய உமையைக் கூறாக விரும்பியவனே;

காழிமகன் உனை ஓத உயர்வுறு காசு தினம் அருள் பெருமானே - சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் உன்னைப் பாடிப் பரவ அவருக்கு வாசி இல்லாத சிறந்த பொற்காசைத் தினமும் தந்த பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்" - பதிகவரலாற்றைக் காண்க);


வி. சுப்பிரமணியன்

----------- --------------