2020-07-29
P.511 - நீலக்குடி
--------------
(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்")
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 -"பித்தாபிறை சூடீ");
1)
இகல்வல்வினை இல்லாநிலை ஈவான்நினை மனமே
தகவில்மகம் புரிதக்கனைத் தண்டித்தவன் நாமம்
பகரில்வரம் எல்லாமருள் பரமன்படர் சடையன்
நிகரில்முலை மங்கைக்கிறை நீலக்குடி அரனே.
இகல்-வல்வினை இல்லா நிலை ஈவான் நினை மனமே - தாக்குகின்ற வலிய வினை இல்லாத நிலையை அளிப்பான்; மனமே எண்ணுவாயாக; (இகல்தல் - பகைத்தல்; போர்செய்தல்);
தகவு-இல் மகம் புரி தக்கனைத் தண்டித்தவன் நாமம் - அவவேள்வியைச் செய்த தக்கனைத் தண்டித்த பெருமானது திருநாமத்தை; (தகவு - தகுதி; பெருமை; குணம்); (மகம் - வேள்வி);
பகரில் வரம்-எல்லாம் அருள் பரமன் படர்-சடையன் - சொல்லி வழிபட்டால் எல்லா வரங்களையும் அருளும் பரமன், படரும் சடையை உடையவன்; (பகர்தல் - சொல்லுதல்);
நிகர்-இல் முலை மங்கைக்கு இறை நீலக்குடி அரனே - ஒப்பில்லா முலையுடைய உமைக்குக் கணவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நிகர் - ஒப்பு); (* ஒப்பிலாமுலையம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்; வடமொழியில் "அநுபமஸ்தனி");
2)
மறவாதடி இணைவாழ்த்திடில் மாயும்வினை மனமே
பிறவாதவன் இறவாதவன் நறவார்கணை எய்த
சுறவார்கொடி மதனாருடல் சுடுமுக்கணன் நீல
நிறமார்மிட றுடையான்திரு நீலக்குடி அரனே.
மறவாது அடிஇணை வாழ்த்திடில் மாயும் வினை, மனமே - மனமே, மறத்தல் இன்றி இருதிருவடிகளை வாழ்த்தினால் வினை அழியும்;
பிறவாதவன் இறவாதவன் - பிறப்பு இறப்பு இல்லாதவன்;
நறவு ஆர் கணை எய்த சுறவு ஆர் கொடி மதனார் உடல் சுடு முக்கணன் - வாசனை மிக்க (மலர்) அம்பை எய்தவனும் சுறாக்கொடியை உடையவனுமான மன்மதனது உடலைச் சுட்டெரித்த முக்கண்ணன்; (நறவு - வாசனை); (சுறவு - சுறா); (மதன் - மன்மதன்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");
நீலநிறம் ஆர் மிடறு உடையான் திருநீலக்குடி அரனே - நீலகண்டத்தை உடையவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (மிடறு - கண்டம்);
3)
ஞாலத்தினில் இன்புற்றிட நாடாய்மட நெஞ்சே
சாலத்துயர் உற்றுச்சுரர் தாளைத்தொழ அந்த
ஆலத்தினை அமுதுண்டருள் அருமாமணி கண்டன்
நீலக்குயில் ஆலும்பொழில் நீலக்குடி அரனே.
ஞாலத்தினில் இன்புற்றிட நாடாய் மடநெஞ்சே - பேதைமனமே, இவ்வுலகில் இன்புற நாடுவாயாக;
சாலத் துயர் உற்றுச் சுரர் தாளைத் தொழ - மிகவும் வருந்தித் தேவர்கள் திருவடியை வணங்கவும்;
அந்த ஆலத்தினை அமுதுண்டு அருள் அரு-மா-மணிகண்டன் - அந்த ஆலகாலத்தை உண்டு அருளிய அரிய அழகிய நீலகண்டன்; (அந்த - பண்டறிசுட்டு);
நீலக்குயில் ஆலும் பொழில் நீலக்குடி அரனே - கருங்குயில்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (ஆலுதல் - ஒலித்தல்);
4)
இல்லாநிலை இல்லாநிலை ஈவான்நினை மனமே
பல்லார்தலை ஓடேந்திய பரமன்பெரு வள்ளல்
வில்லாவொரு மலைகொண்டெயில் வேவக்கணை தொட்டான்
நெல்லார்வயல் புடைசூழ்திரு நீலக்குடி அரனே.
இல்லாநிலை இல்லா நிலை ஈவான் நினை, மனமே - மனமே, நீ நினைவாயாக, இல்லையென்ற நிலை இல்லாத நிலையைத் தருவான்;
பல் ஆர் தலை ஓடு ஏந்திய பரமன் பெருவள்ளல் - பற்கள் திகழும் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திய பரமன், பெரிய வள்ளல்; (அப்பர் தேவாரம் - 6.89.7 - "பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்");
வில்லா ஒரு மலைகொண்டு எயில் வேவக் கணை தொட்டான் - மேருமலையை வில்லாகக்கொண்டு முப்புரங்களும் வெந்து அழிய ஒரு கணையை எய்தவன்; (வில்லா - வில்லாக);
நெல் ஆர் வயல் புடைசூழ் திருநீலக்குடி அரனே - நெல் விளையும் வயல் சூழ்ந்த திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;
5)
எய்யாதுயர் இன்பம்பெற எண்ணாய்மட நெஞ்சே
வையார்மழு வாளேந்திறை மதமாவுரி போர்த்தான்
மையாடிய கண்ணாள்தனை வாமம்மகிழ் அண்ணல்
நெய்யாடிய பெருமான்திரு நீலக்குடி அரனே.
எய்யாது உயர்- இன்பம் பெற எண்ணாய் மடநெஞ்சே - வருந்தாமல் பேரின்பம் பெறப் பேதைமனமே எண்ணுவாயாக; (எய்த்தல் - வருந்துதல்; இளைத்தல்);
வை ஆர் மழுவாள் ஏந்து-இறை - கூர்மை மிக்க மழுவாளை ஏந்திய இறைவன்; (வை - கூர்மை);
மதமா உரி போர்த்தான் - மதயானையின் தோலைப் போர்த்தவன்; (உரி - தோல்);
மை ஆடிய கண்ணாள்தனை வாமம் மகிழ் அண்ணல் - மை திகழும் கண்ணியான உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய தலைவன்; (வாமம்மகிழ் - மகரஒற்று விரித்தல் விகாரம்);
நெய் ஆடிய பெருமான் திருநீலக்குடி அரனே - எண்ணெயால் (/ நெய்யால்) அபிஷேகம் பெறும் பெருமான், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நெய் - எண்ணெய்; வெண்ணெயிலிருந்து பெறும் நெய்); (* இத்தலத்தில் மூலவருக்குத் தைலாபிஷேகம் (எண்ணெய் அபிஷேகம்) விசேஷம்);
6)
பற்றித்தொடர் வினையற்றிடப் பரவாய்மட நெஞ்சே
வெற்றிக்கொடி விடைகாட்டிடும் வேந்தன்சடை மேலே
ஒற்றைக்கலை மதிவைத்தவன் உரகம்புனை மார்பன்
நெற்றிக்கணில் அழலன்திரு நீலக்குடி அரனே.
பற்றித் தொடர் வினை அற்றிடப் பரவாய் மடநெஞ்சே - நம்மைப் பற்றித் தொடர்கின்ற வினை தீரப் பேதைமனமே துதிப்பாயாக;
வெற்றிக்கொடி விடை காட்டிடும் வேந்தன் - இடபச்சின்னத்தைக் காட்டும் வெற்றிக்கொடியுடைய மன்னன்;
சடைமேலே ஒற்றைக்கலை மதி வைத்தவன் - ஒருகலையை உடைய சந்திரனைச் சடையின்மீது சூடியவன்;
உரகம் புனை மார்பன் - பாம்பை மாலை போல மார்பில் அணிந்தவன்;
நெற்றிக்கணில் அழலன் திருநீலக்குடி அரனே - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (கணில் - கண்ணில்; இடைக்குறை விகாரம்); (அழல் - நெருப்பு);
7)
சேமத்தினை உறவேஅனு தினமெண்ணிடு மனமே
தூமத்தமும் அரவும்புனை சூலன்கழல் போற்றி
நேமத்தொடு தொழுமால்மலர் போல்நேத்திரம் இடவும்
நேமிப்படை ஈந்தான்திரு நீலக்குடி அரனே.
சேமத்தினை உறவே அனுதினம் எண்ணிடு மனமே - நற்கதி பெற மனமே நாள்தோறும் எண்ணுவாயாக; (சேமம் - க்ஷேமம்);
தூ-மத்தமும் அரவும் புனை சூலன் கழல் போற்றி - தூய ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சூலபாணியது திருவடியைப் போற்றி;
நேமத்தொடு தொழு மால் மலர் போல் நேத்திரம் இடவும் - முறைப்படி தொழுத திருமால் (ஆயிரத்தில் ஒரு தாமரைமலர் குறையக்கண்டு) பூப் போலத் தன் கண்ணைத் தோண்டித் தூவி அர்ச்சிக்கவும் அது கண்டு இரங்கி; (நேமம் - நியமம் - விதிமுறைமை);
நேமிப்படை ஈந்தான் திருநீலக்குடி அரனே - சக்கராயுதத்தை அளித்தவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நேமி - சக்கரம்); (படை - ஆயுதம்);
8)
சீற்றப்பழ வினைதீர்ந்திடச் சிந்தித்தெழு நெஞ்சே
காற்றிற்செலும் தேர்நிற்கவும் கடுகிப்பல வாறு
தூற்றிச்சிலை பேர்த்தான்முடி தோளிற்றிட ஊன்றி
நீற்றைப்புனை நிமலன்திரு நீலக்குடி அரனே.
சீற்றப் பழவினை தீர்ந்திடச் சிந்தித்து-எழு நெஞ்சே - சீற்றம் மிக்க பழவினைகள் தீர, மனமே சிந்திப்பாயாக;
காற்றில் செலும் தேர் நிற்கவும், கடுகிப் பலவாறு தூற்றிச், சிலை பேர்த்தான் முடி தோள் இற்றிட ஊன்றி - பறந்து செல்லும் தன் தேர் ஓடாமல் நின்றதும், விரைந்து சென்று பல புன்மொழிகள் சொல்லி இகழ்ந்து, கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது தலைகளும் புஜங்களும் நசுங்கும்படி ஊன்றியவன்; (கடுகுதல் - விரைதல்); (சிலை - மலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்; தளர்தல்); (ஊன்றி - ஊன்றியவன்);
நீற்றைப் புனை நிமலன் திருநீலக்குடி அரனே - திருநீற்றைப் பூசியவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;
9)
உழலாதுயர் வாழ்வேபெற உள்காய்மட நெஞ்சே
அழலாய்முனம் அயன்மாலிவர் அறியாவகை நீண்டான்
கழலேதொழு மாணிக்கெனக் காலன்றனைக் காய்ந்தான்
நிழலார்மழு உடையான்திரு நீலக்குடி அரனே.
உழலாது உயர் வாழ்வே பெற உள்காய் மடநெஞ்சே - வருந்தி உழலாமல் உயர்ந்த வாழ்வைப் பெறப் பேதைமனமே எண்ணுவாயாக; (உள்குதல் - உள்ளுதல் - நினைத்தல்);
அழலாய் முனம் அயன் மால் இவர் அறியாவகை நீண்டான் - முன்பு பிரமன் திருமால் இவர்களால் அறிய முடியாதபடி ஜோதிவடிவில் நீண்டவன்; (அழல் - தீ);
கழலே தொழு மாணிக்கெனக் காலன்-தனைக் காய்ந்தான் - திருவடியையே வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனைச் சினந்து உதைத்து அழித்தவன்;
நிழல் ஆர் மழு உடையான் திருநீலக்குடி அரனே - ஒளி திகழும் மழுவை ஏந்தியவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நிழல் - ஒளி);
10)
ஆயத்திறன் இல்லார்சொலும் அவவார்த்தையை நீங்கும்
பாயத்திரை சடையேற்றவன் பால்போல்திரு நீற்றன்
சேயைத்தரு கண்ணார்நுதல் சிவனெம்மிறை ஏத்தும்
நேயத்தினர் இடர்தீர்ப்பவன் நீலக்குடி அரனே.
ஆயத் திறன் இல்லார் சொலும் அவ-வார்த்தையை நீங்கும் - ஆராயும் திறன் இல்லாதவர்கள் சொல்லும் அவமொழிகளை நீங்குங்கள்;
பாய் அத்-திரை சடை ஏற்றவன் - பாயும் அந்தக் கங்கையாற்றைச் சடையில் ஏற்றவன்; (திரை - அலை; நதி);
பால் போல் திருநீற்றன் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்;
சேயைத் தரு கண் ஆர் நுதல் சிவன் எம் இறை - முருகனைத் தந்த நெற்றிக்கண்ணன், சிவபெருமான், எம் இறைவன்; (சேய் - மகன்; முருகன்); (நுதல் - நெற்றி);
ஏத்தும் நேயத்தினர் இடர் தீர்ப்பவன் நீலக்குடி அரனே - துதிக்கும் அன்பர்களது துன்பத்தைத் தீர்ப்பவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;
11)
வனவாரணம் உரிசெய்தவன் மணிமார்பினில் நூலன்
கனையார்கடல் உமிழ்நஞ்சது கண்டத்தினில் வைத்தான்
இனமாமலர் மணமார்தமிழ் இவைகொண்டடி போற்றி
நினைவார்வினை தீர்ப்பான்திரு நீலக்குடி அரனே.
வன-வாரணம் உரிசெய்தவன் - காட்டு-யானையின் தோலை உரித்தவன்; (வனம் - காடு); (வாரணம் - யானை);
மணி-மார்பினில் நூலன் - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (மணி - அழகு; பவளம்);
கனை ஆர் கடல் உமிழ் நஞ்சுஅது கண்டத்தினில் வைத்தான் - ஒலிக்கும் பாற்கடல் கக்கிய ஆலகாலத்தைக் கண்டத்தில் வைத்தவன்; (கனை - ஒலி);
இன-மா-மலர், மணம் ஆர் தமிழ், இவைகொண்டு அடி போற்றி நினைவார் வினை தீர்ப்பான் - சிறந்த பூக்களாலும் மணம் கமழும் தமிழ்ப்-பாமாலைகளாலும் திருவடியைப் போற்றி மனத்தில் தியானிப்பவர்களது வினையைத் தீர்ப்பவன்;
திருநீலக்குடி அரனே - திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------