2020-08-14
S.153 - சிவன் - கமலம் - சிலேடை
-----------
வண்டார் வடிவேற்கும் மாலையிடம் காணலாம்
கண்டார் மனத்திற் களிப்பேறும் - தண்டேன்
சுரக்கும் இலைநீர்மேல் தோன்றும் கமலம்
இரக்கமிகு முக்கண் இறை.
சொற்பொருள்:
வண்டார் - 1. வண் தார்; 2. வண்டு ஆர்;
தார் - மாலை;
ஆர்தல் - பொருந்துதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
வடிவு - உருவம்; மேனி; அழகு;
மாலையிடம் - 1. திருமாலை இடப்பக்கம்; 2. பூமாலையில்;
கண்டார் - 1. தரிசித்தவர்கள், ஆராய்பவர்கள்; 2. பார்த்தவர்கள்;
தண்மை - குளிர்ச்சி;
தண்-தேன் - 1. இனிமை; ஆகுபெயராகி, இன்பம்; 2. குளிர்ந்த தேன்;
சுரத்தல் - 1. ஊறுதல்; 2. சொரிதல்;
மேல் - 1. தலை; 2. ஏழாம்வேற்றுமை உருபு;
கமலம் (தாமரை):
வண்டு ஆர் வடிவு ஏற்கும்; மாலையிடம் காணலாம்;
கண்டார் மனத்தில் களிப்பு ஏறும்; - தண்-தேன்
சுரக்கும்; இலை நீர்மேல் தோன்றும்; கமலம்,
இரக்கம் மிகு முக்கண் இறை.
வண்டுகள் ஒலிக்கும் அழகிய வடிவம் இருக்கும். பூமாலைகளில் இருக்கும். பார்க்கின்றவர்கள் மனத்தில் மகிழ்ச்சி மிகும். குளிர்ந்த தேன் சொரியும். அதன் இலை நீரின்மேல் காட்சி தரும். தாமரை.
சிவன்:
வண்-தார் வடிவு ஏற்கும்; மாலை இடம் காணலாம்;
கண்டார் மனத்தில் களிப்பு ஏறும், தண்-தேன்
சுரக்கும்; இலை நீர் மேல் தோன்றும்; கமலம்,
இரக்கம் மிகு முக்கண் இறை.
வளப்பமான மாலையைத் திருமேனியில் தாங்குபவன். திருமாலை இடப்பக்கம் பாகமாக உடையவன். அவனைத் தரிசிப்போர் மனத்தில் இன்பம் பெருகும், இன்பத்தேன் ஊறும். அவன் திருமுடிமேல் (வில்வம், வன்னி முதலிய) இலைகளும் கங்கையும் இருக்கும். கருணை மிகுந்த முக்கட்பெருமான்.
(அப்பர் தேவாரம் - 6.96.3 - "மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்");
வி. சுப்பிரமணியன்
------------
No comments:
Post a Comment