Showing posts with label அரிசிற்கரைப் புத்தூர். Show all posts
Showing posts with label அரிசிற்கரைப் புத்தூர். Show all posts

Monday, April 16, 2018

04.28 - அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - பெருவற்கடம்

04.28 - அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - பெருவற்கடம்

2013-11-30

அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்)

---------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

பெருவற்கடம் அதிலும்பணி பிழையாதவர் நாளும்

ஒருபொன்பெற அருள்செய்தவன் ஒலிநீர்சடை உடையான்

கருவண்டினம் இசையார்த்தடை கவினார்பொழில் சூழ்ந்த

பொருவண்டிரை அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


பெரு-வற்கடம் அதிலும் பணி பிழையாதவர் நாளும் ஒரு பொன் பெற அருள்செய்தவன் - பெரிய பஞ்சகாலத்திலும் தொண்டிற் சிறந்து நின்ற புகழ்த்துணை நாயனார்க்குத் தினமும் ஒரு காசு அருளிப் புரந்தவன்; (வற்கடம் - பஞ்சம்); (* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

ஒலி-நீர் சடை உடையான் - ஒலிக்கின்ற கங்கையைச் சடையில் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் -2.18.4 - "ஒலிநீர் சடையிற் கரந்தாய்");

கரு-வண்டினம் இசை ஆர்த்து அடை கவின் ஆர் பொழில் சூழ்ந்த - கரிய வண்டுகள் இசைபாடி அடையும் அழகிய சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பொரு வண்-திரை அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - வளப்பமான அலை மோதுகின்ற அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன். (பொருதல் - மோதுதல்; தாக்குதல்); (வண்மை - வலிமை; வளப்பம்); (திரை - அலை); (பொன் - பொன் போன்றவன்; உவமையாகுபெயர்);


2)

சேதித்தவன் அயனார்சிரம் தினமுந்திரு நாமம்

ஓதித்தவம் செய்ம்மாணியின் உயிர்காத்தருள் செய்தான்

ஆதித்தவன் வடவாலதன் அடியில்மறை நான்கைப்

போதித்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


சேதித்தவன் அயனார் சிரம் - பிரமன் தலையில் ஒன்றை வெட்டியவன்; (சேதித்தல் - வெட்டுதல்); (அப்பர் தேவாரம் - 6.20.1 - "நான்முகத்தி லொன்று ... சேதித்த திருவடியை");

தினமும் திருநாமம் ஓதித் தவம் செய்ம்-மாணியின் உயிர் காத்தருள் செய்தான் - அஞ்செழுத்து ஓதித் தவம் செய்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவன்; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்);

ஆதித்தவன் - ஆதி + தவன் - ஆதியாக இருப்பவன்; தவவடிவினன்; (எதுகைநோக்கி 'த்' மிக்கு வந்தது);

வட ஆல் - கல்லால மரம்;

இலக்கணக் குறிப்பு : செய்+மாணி = செய்ம்மாணி; கை, பை, செய், நெய் போன்ற சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால் அம்மெல்லினம் ஒற்று மிகும். (அப்பர் தேவாரம் - 4.80.5 - "செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்");


3)

ஆரேத்தினும் அருளும்சிவன் அணியாமிட றதனில்

காரேற்றவன் சடைமீதொரு கலையார்மதி கங்கை

நீரேற்றவன் நீற்றைப்புனை நிமலன்மழ வெள்ளைப்

போரேற்றினன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


ஆர் ஏத்தினும் அருளும் சிவன் - தொழுபவர் எத்தகையவரே ஆயினும் அவர்களுக்கு அருள்புரியும் சிவபெருமான்; (ஆர் - யார்);

அணியா மிடறு அதனில் கார் ஏற்றவன் - கண்டத்தில் அணியாகக் கருமையை ஏற்றவன்; (அணியா - அணியாக);

சடைமீது ஒரு கலை ஆர் மதி, கங்கை நீர் ஏற்றவன் - சாபத்தால் தேய்ந்து தேய்ந்து ஒருகலை மட்டுமே இருந்த பிறைச்சந்திரனையும், கங்கையாற்றையும் சடைமேல் ஏற்றவன்;

நீற்றைப் புனை நிமலன் - திருநீறு பூசிய தூயன்;

மழ-வெள்ளைப் போர் ஏற்றினன் - இளமையும் வெண்ணிறமும் உடைய, போர் செய்ய வல்ல, இடபத்தை ஊர்தியாக உடையவன்;

அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.


4)

பனையுற்றகை வேழத்துரி போர்க்கும்பரன் பணிவார்

வினையற்றிட அருள்செய்பவன் வேதன்சிரம் ஏந்தி

மனையுற்றிடு பலிதேர்பவன் மடவாளொரு பங்கன்

புனலெற்றிடும் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


பனை உற்ற கை வேழத்து உரி போர்க்கும் பரன் - பனை போன்ற துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்வையாகக் கொண்ட பரமன்; (உறுதல் - ஒத்தல்);

பணிவார் வினை அற்றிட அருள்செய்பவன் - அடியவர்களை வினையை அழிப்பவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);

வேதன்சிரம் ஏந்தி மனை உற்று இடு-பலி தேர்பவன் - பிரமன் மண்டையோட்டை ஏந்தி இல்லங்களை அடைந்து அவர்கள் இடும் பிச்சை ஏற்பவன்; (உறுதல் - அடைதல்);

புனல் எற்றிடும் - அலை மோதுகின்ற; (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);


5)

அணையாரெயில் ஒருமூன்றையும் அரிகாலெரி சேர்ந்த

கணையாலொரு நொடியிற்சுடு கயிலைக்கிறை நாளும்

துணைநீயென மணமாமலர் தூவித்தொழு வார்க்குப்

புணையானவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


அணையார் எயில் ஒரு மூன்றையும் - பகைவர்களது முப்புரங்களையும்; (அணையார் - பகைவர்); (எயில் - கோட்டை);

அரி கால் எரி = திருமால், வாயு, அக்னி;

கயிலைக்கு இறை - கயிலாய நாதன்;

புணை - தெப்பம்; (பிறவிக்கடலைக் கடக்கத் தெப்பமாக உள்ளவன்);


6)

எழிலார்கழல் இணையில்மலர் இட்டுத்தொழு பத்தர்

சுழலாவணம் வினைதீர்த்துயர் சுகமேஅருள் கின்ற

தொழிலானவன் நறையுண்டளி சுரமேழ்முரல் கின்ற

பொழில்சூழ்கிற அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


எழில் ஆர் கழல்இணையில் மலர் இட்டுத் தொழு பத்தர் சுழலாவணம் - அழகிய இரு-திருவடிகளில் பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்கள் வருந்தாதபடி; (சுழலுதல் - சஞ்சலப்படுதல்; சோர்தல்);

வினை தீர்த்து உயர் சுகமே அருள்கின்ற தொழில் ஆனவன் - வினைகளை அழித்துப் பேரின்பத்தையே அருளும் தொழிலை உடையவன்; (உயர் சுகம் - பேரின்பம்); (சுகமே அருள்கின்ற தொழிலானவன் - சம்பு - [சுகத்தைத் தருபவன்] சிவன்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே");

நறை உண்டு அளி சுரம் ஏழ் முரல்கின்ற - தேனை உண்டு வண்டுகள் ஏழு சுரங்களை ரீங்காரம் செய்கின்ற;


7)

திரியும்புரம் நல்குந்துயர் தீரக்கணை ஒன்றால்

எரியும்படி எய்தான்மழ ஏற்றன்மத யானை

உரியும்புனை ஒருவன்பெயர் ஓதின்மிக நன்மை

புரியும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


மழ ஏற்றன் - இளைய விடையை ஊர்தியாக உடையவன்; (மழ - இளமை); (ஏறு - எருது);

மதயானை உரியும் புனை ஒருவன் - (திங்கள், அரவு, கங்கை, முதலியவற்றோடு) ஆண்யானையின் தோலையும் அணிகின்ற ஒப்பற்றவன்; (உம் - எச்சவும்மை);

பெயர் ஓதின் மிக நன்மை புரியும் பரன் - அவன் திருநாமத்தை ஓதினால் மிகவும் நன்மை செய்யும் மேலானவன்;


8)

கறைமிக்கவன் முடிபத்திறக் கயிலைக்கிரி மீது

நறைமிக்கமென் பாதத்தொரு விரலிட்டவர் நதியைச்

சிறையிட்டவர் அன்பால்புகழ் செப்பிப்பணி வார்க்குப்

பொறைமிக்கவர் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


கறை மிக்கவன் முடி பத்து இறக் கயிலைக்கிரி மீது - கரிய நிறம் மிக்கவனும் குற்றம் மிக்கவனும் ஆன இராவணனுடைய பத்துத்தலைகளும் நெரியும்படி கயிலைமலையின்மேல்; (கறை - குற்றம்; கறுப்பு நிறம்); (இறுதல் - முறிதல்; நெரிதல்);

நறை மிக்க மென்-பாதத்து ஒரு விரல் இட்டவர் - வாசனை மிகுந்த திருப்பாதத்தின் ஒரு விரலை ஊன்றியவர்; (நறை - வாசனை);

நதியைச் சிறை இட்டவர் - கங்கையைச் சடையுள் அடைத்தவர்; (சிறை - அணை); (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.5 - "சிறைபெறா நீர்போல்");

அன்பால் புகழ் செப்பிப் பணிவார்க்குப் பொறை மிக்கவர் - பக்தியோடு ஈசன் புகழைப் பாடிப் பணியும் அன்பர்களுக்கு மிகுந்த தயை உடையவர்; (பொறை - தயை; பொறுமை); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.2 - "என் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே");

அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவர்.


9)

கடிபங்கய மலரானொடு கடல்மேல்துயில் மாலும்

முடியுங்கழல் அறியாவணம் முடிவில்சுடர் ஆனான்

வெடிசெய்துடி ஏந்துங்கரன் விரையார்சர வேளைப்

பொடிசெய்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


கடிபங்கய மலரானொடு கடல்மேல் துயில் மாலும் - வாசத் தாமரைமேல் இருக்கும் பிரமனும் கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும்; (கடி - வாசனை); (பங்கயம் - பங்கஜம் - தாமரை);

முடியும் கழல் அறியாவணம் - தன் திருமுடியையும் திருவடியையும் அறிய ஒண்ணாதபடி; (கழல் - கழலும்; உம் தொக்கது);

முடிவு இல் சுடர் ஆனான் - எல்லை இல்லாத ஜோதி ஆனவன்;

வெடிசெய் துடி ஏந்தும் கரன் - வெடி போல் ஒலிக்கும் உடுக்கையைக் கையில் ஏந்தியவன்; (அப்பர் தேவாரம் - 4.73.6 - "வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல");

விரை ஆர் சர வேளைப் பொடிசெய்தவன் - மணம் பொருந்திய அம்புகளை (மலர்க்கணை) உடைய காமனைச் சாம்பல் ஆக்கியவன்; (விரை - வாசனை); (சரம் - அம்பு ); (வேள் - மன்மதன்);


10)

மாற்றும்வழி என்றேநிதம் வாயில்வரை வந்து

தூற்றும்மொழி சொல்லித்திரி துரிசர்க்கரு ளாதான்

தோற்றம்முடி வில்லாவரன் தொழுவார்துணை உம்பர்

போற்றும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


மாற்றும் வழி - (உம்) நெறியை மாற்றுங்கள்;

துரிசர்க்கு அருளாதான் - குற்றம் உடையவர்களுக்கு அருள் இல்லாதவன்; (துரிசு - குற்றம்);

தோற்றம் முடிவு இல்லா அரன் - ஆதியும் அந்தமும் இல்லாத ஹரன்;

தொழுவார் துணை - தொழுகின்ற அன்பர்களுக்குத் துணைவன்;

உம்பர் போற்றும் பரன் - தேவர்களெல்லாம் வணங்குகின்ற பரமன்;


11)

ஊணும்பலி பெண்ணாணலி உடையும்புலி அதளே

நாணும்பட நாகம்மென நாளும்புகழ் வாரைப்

பேணும்பதி முடிமேற்பிறை சூடாமணி யாகப்

பூணும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.


ஊணும் பலி, பெண் ஆண் அலி, உடையும் புலி அதளே, நாணும் பட நாகம் என - "உணவும் பிச்சை; ஆண் பெண் அலி ஆனவன்; அவனுக்கு உடை ஆவதும் புலித்தோல்; அவன் அரைநாண் படம் உடைய நாகப்பாம்பு" என்று சிவபெருமான் சிறப்புகளைப் பேசி;

நாளும் புகழ்வாரைப் பேணும் பதி - தினந்தோறும் துதிக்கும் பக்தர்களைக் காக்கும் தலைவன்;

முடிமேல் பிறை சூடாமணியாகப் பூணும் பரன் - தலையில் பிறையைச் சூடாமணி போல அணிகின்ற மேலானவன்;

அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------