Showing posts with label வலிதாயம் (பாடி). Show all posts
Showing posts with label வலிதாயம் (பாடி). Show all posts

Wednesday, July 9, 2025

V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - இலிங்கபந்தம்

2018-01-24

V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - (இலிங்கபந்தம்)

---------------------------------

(ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பாடலைப் படிக்கும் முறை: கீழ்வரிசையில் இடம் வலமாகத் தொடங்கிச் சுற்றிச்சுற்றிக் கீழிருந்து மேலேறிப் பின் நடுக்கட்டங்கள் வழியாக மேலிருந்து நேரே கீழே இறங்கவேண்டும்.

Reading the letters in the cells in the picture:

Like in the game of snakes and ladders - பரமபத விளையாட்டு ( https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8c/Game_of_chance_PARAMA_PATHAM.jpg ) - start at the left-most cell in the bottom row - and keep reading cell by cell in that row and go up row by row to the top - and then come down the middle column.

That is the sequence in which the letters appear in the 6 lines of this verse.


நலிந்தடியே நம்பியடை பிறையையணி நாதனே

மெலிந்த மருங்குலுமை மாதுகூ றானமெய்யா

ஒலிவெடியை நிகர்க்குமொரு துடியுடை அங்கணனே

புலியுரி புனையமலா பூரணா பிதாவே

பலியையுவந் தீர்செந்தீப் போலிய வாகனே

கலிதீர் வலிதாயங் குடியான மாமணியே.


பதம் பிரித்து:

நலிந்து அடியே நம்பி அடை பிறையை அணி நாதனே;

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா;

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே;

புலி-உரி புனை அமலா; பூரணா; பிதாவே;

பலியை உவந்தீர்; செந்தீப் போலிய வாகனே;

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே.


நலிந்து அடியே நம்பிடை பிறையைணி நாதனே - சாபத்தால் தேய்ந்து வாடித் திருவடியே புகல் என்று அடைந்த சந்திரனை அணிந்த தலைவனே; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா - சிற்றிடையை உடைய உமைமங்கையை ஒரு கூறாக உடைய திருமேனியனே, மெய்ப்பொருளே; (மருங்குல் - இடை); (மெய்யன் - மேனியை உடையவன்; மெய்ப்பொருள்);

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே - வெடி போல ஒலிக்கும் உடுக்கையை உடைய அருட்கண்ணனே; (துடி - உடுக்கை);

புலி-ரி புனை அமலா - புலித்தோலை அணிந்த தூயனே; (உரி - தோல்); (அமலன் - மாசற்றவன்);

பூரணா - குறைவற்றவனே;

பிதாவே - தந்தையே;

பலியைவந்தீர் - பிச்சையை மகிழ்ந்தவரே; (பலி - பிச்சை); (உவந்தாய் என்று ஒருமையில் கூறாமல் உவந்தீர் என்றது - யாப்புக் கருதி வந்த ஒருமைபன்மை மயக்கம்);

செந்தீப் போலிய வாகனே - செந்தழல் போன்ற நிறமுடைய மேனியனே / அழகனே; (போலியவாகனே = போலிய வாகனே / போலிய ஆகனே); (போலிய - போன்ற); (ஆகம் - மேனி; மார்பு); (வாகன் - அழகுள்ளவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.34.3 - "வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர் புரிநூலர் இடம் என்பர்"); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதினீறது பூசிடு மாகனே");

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே - திருவலிதாயத்தில் நீங்காமல் உறைகின்ற மாமணியே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்); (திருவலிதாயம் - சென்னைப் புறநகரில் உள்ள பாடி என்ற இடத்தில் உள்ள கோயில்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Sunday, June 23, 2019

04.66 - வலிதாயம் (பாடி) - வேடன் உருவில்

04.66 - வலிதாயம் (பாடி) - வேடன் உருவில்

2014-06-02

வலிதாயம் (பாடி)

(சென்னைப் புறநகரில் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயில்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")


1)

வேடன் உருவிற் சென்றன்று .. விசய னுக்குப் படையீந்தான்

காட ரங்காக் கனலேந்திக் .. கணங்கள் சூழ நடஞ்செய்வான்

வாடல் தலையைக் கையேந்தி .. மனைகள் தோறும் பலிக்குழல்வான்

மாடம் சூழ்ந்த வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


வேடன் உருவில் சென்று அன்று விசயனுக்குப் படை ஈந்தான் - முன்பு ஒரு வேடன் வடிவத்தில் போய் அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்தவன்;

காடு அரங்காக் கனல் ஏந்திக் கணங்கள் சூழ நடம் செய்வான் - சுடுகாடே கூத்தாடும் அரங்கமாகத் தீயை ஏந்திப் பூதகணங்கள் சூழ ஆடுபவன்;

வாடல் தலையைக் கையேந்தி மனைகள்-தோறும் பலிக்கு உழல்வான் - உலர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களில் பிச்சைக்குத் திரிபவனான சிவபெருமான் உறைகின்ற; (2.112.2 - "வாடல் வெண்டலை அங்கை ஏந்தி");

மாடம் சூழ்ந்த வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - மாடிவீடுகள் சூழ்ந்த, திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்; ("பாடி" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

(மாடம் - மாடி உள்ள வீடு); (பெரிய புராணம் - 12.28.447 - திருஞானசம்பந்தர் புராணம் - "மாதர் மடப்பிடி பாடி வணங்கினார்");


2)

கலைமான் மழுவாள் ஏந்தியவன் .. கருதார் புரங்கள் மூன்றுசெற்ற

சிலையான் சீறு பாம்போடு .. திரையார் நதியும் திகழ்கின்ற

தலையான் வலிய சலந்தரனைச் .. சக்க ரத்தால் தடிந்தஅரன்

மலையான் மருகன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


கலைமான் மழுவாள் ஏந்தியவன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்;

கருதார் புரங்கள் மூன்று செற்ற சிலையான் - பகைவர்களது முப்புரங்களை அழித்த மேருமலை வில்லை உடையவன்; (கருதார் - பகைவர்); (செறுதல் – அழித்தல்); (சிலை - மலை; வில்);

சீறு பாம்போடு திரை ஆர் நதியும் திகழ்கின்ற தலையான் - சீறுகின்ற பாம்பையும் அலை மிக்க கங்கையையும் தலையில் அணிந்தவன்;

வலிய சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்த அரன் - வலிமை மிக்க ஜலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்த ஹரன்; (தடிதல் - அழித்தல்);

மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன் உறைகின்ற; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய்");

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


3)

அறையார் கடலில் அன்றெழுந்த .. ஆலம் தன்னை அமுதுசெய்த

கறையார் கண்டன் நெற்றியிலோர் .. கண்ணி லங்கு கடவுளென்றும்

மறையான் பிறையான் செம்பவள .. வண்ண அண்ணல் திருவாயால்

மறைநான் கோதி வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


அறை ஆர் கடலில் அன்று எழுந்த ஆலம்-தன்னை அமுதுசெய்த கறை ஆர் கண்டன் - ஒலிக்கின்ற கடலில் முன்பு தோன்றிய ஆலகாலத்தை உண்ட கறையைக் கழுத்தில் உடையவன்;

நெற்றியில் ஓர் கண் இலங்கு கடவுள் - நெற்றிக்கண் உடைய கடவுள்;

என்றும் மறையான் - எப்போதும் அழிவின்றி இருப்பவன்;

பிறையான் - பிறைசூடி;

செம்பவள வண்ண அண்ணல் - செம்பவளம் போல் செம்மேனி உடைய தலைவன்;

திருவாயால் மறை-நான்கு ஓதி - திருவாயால் நால்வேதங்களை ஓதியவன் உறைகின்ற;

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


4)

பொய்யா மறைகள் புகழ்நாதன் .. பூதப் படையான் ஆவின்பால்

நெய்யால் ஆட்டு மகிழ்பெம்மான் .. நிழலார் மழுவன் மான்மறிசேர்

கையான் அமரர் தமக்கிரங்கிக் .. கடலின் நஞ்சைக் கரந்திட்ட

மையார் கண்டன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


பொய்யா மறைகள் புகழ் நாதன் - என்றும் பொய்த்தல் இல்லாத வேதங்களால் துதிக்கப்படும் தலைவன்;

பூதப் படையான் - பூதகணப்படையை உடையவன்;

ஆவின் பால் நெய்யால் ஆட்டு மகிழ் பெம்மான் - பசுவின் பால், நெய் இவற்றால் அபிஷேகம் விரும்பும் பெருமான்; (ஆட்டு - அபிஷேகம்); (அப்பர் தேவாரம் - 6.95.2 - "ஆன்அஞ்சும் ஆட்டுகந்த செம்பவள வண்ணர்");

நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுவை ஏந்தியவன்; ( நிழல் - ஒளி);

மான்மறி சேர் கையான் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன்;

அமரர-தமக்கு இரங்கிக் கடலின் நஞ்சைக் கரந்திட்ட மை ஆர் கண்டன் - தேவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை ஒளித்த நீலகண்டத்தை உடையவன் உறைகின்ற; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்); (மை - கருமை);

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


5)

சரங்கள் ஓரைந் துடைமதனைத் .. தழலார் நுதலால் பொடிசெய்தான்

சிரங்கள் கோத்த மாலையணி .. சென்னிப் பரமன் சிவபெருமான்

கரங்கள் குவித்துக் கழலிணையைக் .. கருதும் அன்பர் விரும்புகின்ற

வரங்கள் அருள்வான் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


சரங்கள் ஓர் ஐந்து-உடை மதனைத் தழல் ஆர் நுதலால் பொடிசெய்தான் - அம்புகள் ஐந்து உடைய மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சாம்பலாக்கியவன்; (தழல் - நெருப்பு); (நுதல் - நெற்றி);

சிரங்கள் கோத்த மாலை அணி சென்னிப் பரமன் சிவபெருமான் - தலைக்குத் தலைமாலை அணிந்த பரமன் சிவபெருமான்;

கரங்கள் குவித்துக் கழலிணையைக் கருதும் அன்பர் விரும்புகின்ற வரங்கள் அருள்வான் - கைகூப்பி இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருள்பவன் உறைகின்ற;

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


6)

அளத்த லாகாப் பெருமையினான் .. அணியாம் கண்டக் கருமையினான்

உளத்துக் கோயில் மகிழ்சூலன் .. உமைம டந்தை ஒருபாலன்

கிளத்தல் செய்யற் களவில்லாக் .. கீர்த்தி உடையான் மேருவில்லா

வளைத்த மைந்தன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


குறிப்பு: முதல் மூன்று அடிகளிலும் அரையடி ஈற்றில் இயைபுத்தொடை அமைந்த பாடல்.

அளத்தல் ஆகாப் பெருமையினான் - அளக்க ஒண்ணாத பெரியவன்;

அணி ஆம் கண்டக் கருமையினான் - அழகிய நீலமணிகண்டன்; (அணி - அழகு; ஆபரணம்);

உளத்துக் கோயில் மகிழ் சூலன் - மனக்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கும் சூலபாணி; (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார் வரலாறுகளைக் காண்க);

உமை மடந்தை ஒரு பாலன் - உமாதேவியை ஒரு பக்கத்தில் உடையவன்; (பால் - பகுதி; பக்கம்);

கிளத்தல் செய்யற்கு அளவு இல்லாக் கீர்த்தி உடையான் - சொல்லொணாத புகழ் உடையவன்; (கிளத்தல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.54.4 - "ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா");

மேரு வில்லா வளைத்த மைந்தன் - மேருமலையை வில்லாக வளைத்த வீரன் உறைகின்ற; (வில்லா - வில்லாக; கடைக்குறை விகாரம்);

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


7)

அழகன் அமலன் அருளாளன் .. அழிவில் ஒருவன் கண்டத்தில்

மழையன் என்று நாமங்கள் .. மறவா தேத்தும் அடியார்தம்

பழவல் வினைகள் தீர்த்தருள்வான் .. பால்வெண் ணீறு திகழ்மார்பன்

மழவெள் ளேற்றன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


அழகன் அமலன் அருளாளன் - சுந்தரன், தூயவன், அருளின் உறைவிடம்;

அழிவு-இல் ஒருவன், கண்டத்தில் மழையன் - இறவாதவன், கண்டத்தில் மேகம் போன்ற கறையை உடையவன்; (மழை - மேகம்);

என்று நாமங்கள் மறவாது ஏத்தும் அடியார்தம் பழ-வல்-வினைகள் தீர்த்தருள்வான் - என்று திருநாமங்களை மறத்தல் இன்றித் தினமும் சொல்லித் துதிக்கின்ற பக்தர்களது பழைய வலிய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்பவன்; (என்று நாமங்கள் - 1. என்று நாமங்கள்; 2. என்றும் நாமங்கள்);

பால்-வெண்ணீறு திகழ் மார்பன் - பால் போன்ற வெண்மை திகழும் திருநீற்றை மார்பில் பூசியவன்;

மழ-வெள்-ஏற்றன் - இளைய வெண்ணிற எருதை வாகனமாக உடையவன் உறைகின்ற;

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


8)

கடந்து போகாத் தேர்கண்டு .. கைகள் நாலஞ் சாற்கயிலை

இடந்து வீச முனைந்தானை .. எண்ணில் காலம் அம்மலைக்கீழ்க்

கிடந்து வாட விரலூன்றிக் .. கீதம் கேட்டு வாளீந்தான்

மடந்தை பாகன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


கடந்து போகாத் தேர் கண்டு - வானில் கயிலையைக் கடந்து செல்லாது கீழே இறங்கிவிட்ட தேரைக் கண்டு;

கைகள் நாலஞ்சால் கயிலை இடந்து வீச முனைந்தானை - இருபது கரங்களால் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை; (இடத்தல் - பெயர்த்தல்);

எண்-இல் காலம் அம்மலைக்கீழ்க் கிடந்து வாட விரல் ஊன்றிக் - நெடுநாள்கள் அந்த மலையின்கீழ் அவன் கிடந்து வாடும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி;

கீதம் கேட்டு வாள் ஈந்தான் - பின் அவன் பாடிய கீதத்தைக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருள்செய்தவன்;

மடந்தை பாகன் - உமைபங்கன் உறைகின்ற;

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


9)

பங்க யத்தில் உறைஅயனும் .. பாம்பின் மீது துயில்மாலும்

எங்கும் நேடி அடிமுடியை .. எய்தற் கொண்ணா எரியுருவன்

வெங்கண் உழுவைத் தோலரையில் .. வீக்கும் பெருமான் வெற்பரையன்

மங்கை பங்கன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


பங்கயத்தில் உறை அயனும் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்;

பாம்பின்மீது துயில் மாலும் - பாம்பணைமேல் படுத்திருக்கும் திருமாலும்;

எங்கும் நேடி அடிமுடியை எய்தற்கு ஒண்ணா எரி உருவன் - எங்கும் தேடியும் அடிமுடியை அடைய இயலாத ஜோதி வடிவினன்; (நேடுதல் - தேடுதல்);

வெங்கண் உழுவைத்-தோல் அரையில் வீக்கும் பெருமான் - சினம் மிக்க கண்களையுடைய புலியின் தோலை அரையில் கட்டும் பெருமான்;

வெற்பு-அரையன் மங்கை பங்கன் - இமவான் மகளான உமையை ஒரு பங்கில் உடையவன் உறைகின்ற; (வெற்பு - மலை); (அரையன் - அரசன்);

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


10)

உரையில் உண்மை ஒன்றில்லார் .. உயர்தத் துவமும் தாமறியார்

கரையில் இடும்பைக் கடலாழ்த்தும் .. கட்டுக் கதைகள் விட்டுவம்மின்

அரையில் அரவக் கச்சார்த்தான் .. அடங்கார் புரங்கள் மூன்றெரித்த

வரைவில் லேந்தி வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


உரையில் உண்மை ஒன்றில்லார் - பேச்சில் சற்றும் உண்மை இல்லாதவர்கள்;

உயர்-தத்துவமும் தாம் அறியார் - உயர்ந்த தத்துவங்களை அறியாதவர்கள்; (தத்துவம் - உண்மைப்பொருள்);

கரை-இல் இடும்பைக்-கடல் ஆழ்த்தும் கட்டுக்கதைகள் விட்டு வம்மின்- அளவில்லாத துன்பக்கடலில் மூழ்கச்செய்யும் அவர்களது பொய்க்கதைகளை நீங்கி வாருங்கள்; (கரை - எல்லை); (இடும்பை - துன்பம்); (வம்மின் - வாருங்கள்; வருவீராக); (மின் - முன்னிலை ஏவற் பன்மை விகுதி);

அரையில் அரவக்-கச்சு ஆர்த்தான் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்; (அப்பர் தேவாரம் - 6.31.7 - "புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்");

அடங்கார் புரங்கள் மூன்று எரித்த வரை-வில் ஏந்தி - பகைவர்களாகிய அசுரர்களது முப்புரங்களை எரித்த மேருமலைவில்லை ஏந்தியவன் உறைகின்ற; (அடங்கார் - பகைவர்); (வரை - மலை);

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


11)

பணியோ டிளவெண் மதியத்தைப் .. பாங்கா முடிமேற் பயிலவைத்தான்

பணியே மேவி நாள்தோறும் .. பாதம் பணிவார்க் கருள்புரிந்து

தணியாப் பிறவி நோய்தீர்ப்பான் .. தனியன் இனியன் அணியான

மணியார் கண்டன் வலிதாயம் .. பாடி வணங்கி மகிழ்வோமே.


பணியோடு இள-வெண்-மதியத்தைப் பாங்கா முடிமேல் பயில வைத்தான் - பாம்பையும் இளவெண் திங்களையும் அழகுற நெருங்கி இருக்கும்படி திருமுடிமேல் வாழவைத்தான்; (பணி - நாகப்பாம்பு); (பாங்கா - பாங்காக; பாங்கு - அழகு; பக்கம்); (பயில்தல் - தங்குதல்);

பணியே மேவி நாள்தோறும் பாதம் பணிவார்க்கு அருள்புரிந்து - திருத்தொண்டே செய்து தினமும் திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து; (பணி - தொண்டு);

தணியாப் பிறவிநோய் தீர்ப்பான் - அவர்களுடைய நீங்காத பிறவிப்பிணியைத் தீர்ப்பவன்;

தனியன், இனியன் - தனித்து இருப்பவன், ஒப்பற்றவன், இனியவன்;

அணி ஆன மணி ஆர் கண்டன் - ஆபரணம் ஆன (/ அழகான) நீலமணி பொருந்திய கண்டத்தை உடையவன் உறைகின்ற;

வலிதாயம் பாடி வணங்கி மகிழ்வோமே - திருவலிதாயம் என்றும், பாடி என்றும் வழங்கப்பெறும் தலத்தைப் பாடி வழிபட்டு இன்புறுவோம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Friday, June 21, 2019

04.65 - வலிதாயம் (பாடி) - பிறையன் பேதை பிரியா

04.65 - வலிதாயம் (பாடி) - பிறையன் பேதை பிரியா

2014-06-01

வலிதாயம் (பாடி)

(சென்னைப் புறநகரில் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயில்)

----------------------------------

(ஆசிரிய இணைக்குறட்டுறை. யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க.)

(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்)


1)

பிறையன் பேதை பிரியாப் பெருமையன்

மறையன் மேய வலிதாயம்

நறையம் போதொடு நாடி வணங்கிடப்

பறையும் பாவம் பழிகளே.


பிறையன், பேதை பிரியாப் பெருமையன் - சந்திரசேகரன், உமையொரு பங்கன்;

மறையன் மேய வலிதாயம் - வேதமுதல்வன் உறையும் திருவலிதாயத்தை;

நறை-அம்-போதொடு நாடி வணங்கிடப் - அழகிய வாசமலர்களால் விரும்பி வழிபட்டால்; (நறை - தேன்; வாசனை); (அம் - அழகு); (போது - பூ);

பறையும் பாவம் பழிகளே - பாவங்கள் பழிகள் எல்லாம் அழியும்; (பறைதல் - அழிதல்);


2)

பித்தன் பேய்க்கணம் சூழ நடம்புரி

மத்தன் மேய வலிதாயம்

சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும்

பத்தர் வல்வினை பாறுமே.


பித்தன் - பேரன்பு உடையவன்;

பேய்க்கணம் சூழ நடம் புரி மத்தன் மேய வலிதாயம் - பூதகணங்கள் சூழத் திருநடம் செய்பவனும் ஊமத்தமலரை அணிந்தவனுமான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தில்;

சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும் - மனம் ஒன்றித் திருவடியை வணங்கும்;

பத்தர் வல்வினை பாறுமே - பக்தர்களது வலிய வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்);


3)

அண்ணல் ஆறணி வேணியன் ஆரழல்

வண்ணன் மேய வலிதாயம்

நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல்

மண்ணில் வாரா வழிதானே.


அண்ணல், ஆறு அணி வேணியன் - தலைவன், கங்கைச்சடையன்;

ஆர்-அழல் வண்ணன் மேய வலிதாயம் - தீவண்ணன் உறையும் திருவலிதாயத்தை;

நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல் - அடைந்து புதிய மலர்களைத் தூவி வலம்வருதல்;

மண்ணில் வாரா வழிதானே - பிறவாநிலையைப் பெறும் உபாயம்;


4)

பொறிய ராவணி புண்ணியன் கையில்மான்

மறியன் மேய வலிதாயம்

வெறியி லங்கு மலரிட்டு வேண்டுவார்

உறுவி னைத்தொடர் ஓயுமே.


பொறி-அரா அணி புண்ணியன் - புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்த புண்ணியமுர்த்தி; (பொறி - பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள்);

கையில் மான்மறியன் மேய வலிதாயம் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன் உறையும் திருவலிதாயத்தை;

வெறி இலங்கு மலர் இட்டு வேண்டுவார் - வாசனை கமழும் பூக்களைத் தூவி இறைஞ்சும் அடியவர்களது; (வெறி - வாசனை);

உறு-வினைத்தொடர் ஓயுமே - மிகுந்த பழவினைப் பந்தமானது அழியும்;


5)

ஆனஞ் சாடும் அடிகள் விடையேறி

வானன் மேய வலிதாயம்

தேனன் மாமலர் சேவடித் தூவிட

ஈன மாயின இல்லையே.


ஆன்-அஞ்சு ஆடும் அடிகள் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறும் இறைவன்; (ஆன் அஞ்சு - பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய் முதலிய ஐந்து பொருள்கள்);

விடையேறி - இடபவாகனன்;

வானன் மேய வலிதாயம் - சிவலோகன் உறையும் திருவலிதாயத்தில்; (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய");

தேன்-நன் மா-மலர் சேவடித் தூவிட- தேனும் வாசனையும் பொருந்திய சிறந்த அழகிய பூக்களைச் சிவந்த திருவடியில் தூவி வழிபட்டால்;

ஈனமாயின இல்லையே - குறைகள் (/ குற்றங்கள்) தீரும்;


6)

நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை

மதியன் மேய வலிதாயம்

புதிய பூவொடு போற்றிசெய் வாரருள்

நிதியர் ஆவது நேருமே.


நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை மதியன் மேய வலிதாயம் - கங்காதரன் சடையில் பாம்பு, வாசமலர்க்கொன்றை, பிறைச்சந்திரன் இவற்றைச் சூடிய பெருமான் உறையும் திருவலிதாயத்தை; (வேணியில் - இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது);

புதிய பூவொடு போற்றிசெய்வார் - அன்று பூத்த பூக்களால் வழிபடும் பக்தர்கள்;

அருள் நிதியர் ஆவது நேரும் - அருள்நிதியைப் பெற்றவர்கள் ஆவது நிகழும்; (நேர்தல் - நிகழ்தல்);


7)

உரகத் தாரினன் என்றும் ஒளிப்பிலா

வரதன் மேய வலிதாயம்

பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை

விரவி டாவல் வினைகளே.


உரகத் தாரினன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);

என்றும் ஒளிப்பு இலா வரதன் மேய வலிதாயம் - எப்பொழுதும் வஞ்சனையின்றி வரங்களை வாரி வழங்கும் பெருமான் உறையும் திருவலிதாயத்தை;

பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை - போற்றித் துதித்து வணங்கும் பக்தர்களை;

விரவிடா வல்வினைகளே - வல்வினைகள் நெருங்கமாட்டா; (விரவுதல் - அடைதல்);


8)

அஞ்சொ டஞ்சு தலையை அடர்த்தருள்

மஞ்சன் மேய வலிதாயம்

நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட

வஞ்ச வல்வினை மாயுமே.


அஞ்சொடு அஞ்சு தலையை அடர்த்து அருள் - பத்துத்தலைகளை உடைய இராவணனை நசுக்கி அருள்செய்த; (அடர்த்தல் - நசுக்குதல்);

மஞ்சன் மேய வலிதாயம் - வீரனான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);

நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட - மனத்தில் பக்தியோடு தியானித்தால்;

வஞ்ச வல்வினை மாயுமே - தீய வலிய வினைகள் அழியும்;


9)

அன்னம் பன்றி அறிவொணாச் சோதியாம்

மன்னன் மேய வலிதாயம்

உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர்

முன்னை வல்வினை முஞ்சுமே.


அன்னம் பன்றி அறிவு ஒணாச் சோதியாம் - பிரமன் திருமால் இவர்களால் அறிய இயலாத ஜோதி ஆன;

மன்னன் மேய வலிதாயம் - தலைவன் உறையும் திருவலிதாயத்தை;

உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர் - தியானிக்கும் நெஞ்சு உடைய பக்தர்களது; (உன்னுதல் - தியானித்தல்; எண்ணுதல்);

முன்னை வல்வினை முஞ்சுமே - பழவினை அழியும்; (முஞ்சுதல் - சாதல்); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 19 - "அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்");


10)

கள்ளம் பேசும் கயவர்சொல் நீங்குமின்

வள்ளல் மேய வலிதாயம்

உள்ளம் ஒன்றி உகந்துரை செய்திட

விள்ளும் தொல்லை வினைகளே.


கள்ளம் பேசும் கயவர் சொல் நீங்குமின் - வஞ்சனை பேசும் தீயவர்களது சொற்களை நீங்குங்கள்;

வள்ளல் மேய வலிதாயம் - வள்ளலான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை;

உள்ளம் ஒன்றி உகந்து உரை செய்திட - மனம் ஒன்றி மகிழ்ந்து துதித்தால்; (உகத்தல் - விரும்புதல்);

விள்ளும் தொல்லை வினைகளே - பழவினைகள் நீங்கும்; (விள்ளுதல் - நீங்குதல்); (தொல்லை - பழைய);


11)

ஐயன் தேவர்க் கருள்புரி கண்டத்தில்

மையன் மேய வலிதாயம்

நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ

வெய்ய வல்வினை வீடுமே.


ஐயன் - தலைவன்;

தேவர்க்கு அருள்புரி கண்டத்தில் மையன் மேய வலிதாயம் - தேவருக்கு அருள்புரிந்த நீலகண்டன் உறையும் திருவலிதாயத்தை;

நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ - மனம் உருகித் தினமும் வழிபட்டால்;

வெய்ய வல்வினை வீடுமே - கொடிய வினைகள் அழியும்; (வெய்ய - கொடிய); (வீடுதல் - விடுதல்; அழிதல்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3-ஆம் அடிகள் - அளவடி. 2, 4-ஆம் அடிகள்: சிந்தடி.

அடி 1 & 3 : தான தானன தானன தானன

அடி 2 & 4 : தான தானன தானானா

ஒவ்வோர் அடியிலும்:

  • 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.

  • 2, 3, 4-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடியின் ஈற்றுச்சீரைத் தவிர மற்றச் சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.

அதாவது:

  • 1, 3-ஆம் அடிகள் - திருக்குறுந்தொகை அமைப்பு; 2, 3, 4-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்குப் 11 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்குப் 12 எழுத்து.

  • 2, 4-ஆம் அடிகள் - அதே போல் - 2, 3-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்கு 8 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்கு 9 எழுத்து.


உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.56.1 -

காரார் கொன்றை கலந்த முடியினர்

சீரார் சிந்தை செலச்செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

ஆரா ராதி முதல்வரே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------