Showing posts with label புடைமருதூர். Show all posts
Showing posts with label புடைமருதூர். Show all posts

Sunday, April 20, 2025

P.396 - புடைமருதூர் - பொருநையின் தென்கரை

2017-05-13

P.396 - புடைமருதூர்

---------------------------------

(திருமுக்கால் அமைப்பு)

(தானன தானன தானன தானன

தானன தானன தானா)

(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி")

* (திருப்புடைமருதூர் - தாமிரபரணி-நதிக்கரைத் தலம்)


1)

பொருநையின் தென்கரைப் புடைமரு தூருறை

கருமணி மிடறுடை யீரே

கருமணி மிடறுடை யீரும கழல்தொழத்

திருமலி நிலையது திடனே.


பொருநையின் தென்கரைப் புடைமருதூர் உறை, கரு-மணி மிடறுடையீரே - தாமிரபரணிநதியின் தென்கரையில் உள்ள திருப்புடைமருதூரில் உறைகின்ற, நீலமணிகண்டம் உடையவரே; (பொருநை - தாமிரபரணியாறு);

கரு-மணி மிடறுடையீர் உம கழல் தொழத், திரு மலி நிலையது திடனே - நீலமணிகண்டம் உடையவரே, உமது திருவடியை தொழுதால், (அவ்வன்பர்களுக்குத்) திரு மிகுகின்ற நிலை நிச்சயம்; (உம = உம்+= உம்முடைய; - ஆறாம்வேற்றுமை உருபு);


2)

புள்ளொலி பொழிலணி புடைமரு தூருறை

கள்ளுகு கொன்றையி னீரே

கள்ளுகு கொன்றையி னீரும கழலிணை

உள்ளிட இருவினை ஒழிவே.


புள்லி பொழில் அணி புடைமருதூர் உறை, கள்கு கொன்றையினீரே - பறவைகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே; (புள் - பறவை); (கள் - தேன்); (உகுத்தல் - சொரிதல்);

கள்கு கொன்றையினீர் உம கழலிணை உள்ளிட இருவினை ஒழிவே - தேன் சொரியும் கொன்றைமலரை அணிந்தவரே, உமது இரு-திருவடிகளைத் தியானித்தால் (/ மனத்தில் தரித்தால்), இருவினை தீரும்; (உம - உமது); (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் தரித்தல்);


3)

பொழிலிடைக் குயில்பயில் புடைமரு தூருறை

சுழிநதிச் சடைமுடி யீரே

சுழிநதிச் சடைமுடி யீருமைத் தொழுதெழ

அழிவது பழவினை அதுவே.


பொழிலிடைக் குயில் பயில் புடைமருதூர் உறை, சுழி-நதிச் சடை-முடியீரே - சோலையில் குயில்கள் ஒலிக்கின்ற திருப்புடைமருதூரில் உறைகின்ற, சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே; (பயில்தல் - ஒலித்தல்); (சுழி - நீர்ச்சுழல்);

சுழி-நதிச் சடை-முடியீர் உமைத் தொழுதெழ, அழிவது பழவினை அதுவே - சுழிகள் மிக்க கங்கையைச் சடைமுடியில் உடையவரே, உம்மைத் தொழுதால் பழவினை அழியும்;


4)

பொலிமலர்ப் பொழிலணி புடைமரு தூருறை

புலியுரி உடையுடை யீரே.

புலியுரி உடையுடை யீருமைப் போற்றிட

மலிவது நெஞ்சினில் மகிழ்வே.


பொலி-மலர்ப் பொழில் அணி புடைமருதூர் உறை, புலி-உரி உடை உடையீரே - அழகிய மலர்ச்சோலை சூழ்ந்த திருப்புடைமருதூரில் உறைகின்ற, புலித்தோலை உடையாக (/ புலித்தோலாடை) உடையவரே; (உரி - தோல்); (உடை - ஆடை); (சம்பந்தர் தேவாரம் - 1.19.3 - "வரியுறு புலியத ளுடையினன்");

புலியதன் அதள் அணிவீர் உமைப் போற்றிட, மலிவது நெஞ்சினில் மகிழ்வே - புலித்தோலாடை உடையவரே, உம்மைப் போற்றினால், மனத்தில் மகிழ்ச்சி நிறையும்;


5)

புனலிடைக் கயலுகள் புடைமரு தூருறை

கனலுமிழ் கண்ணுடை யீரே

கனலுமிழ் கண்ணுடை யீரும கழலிணை

நினைபவர் அடைவது நிறைவே.


புனலிடைக் கயல் உகள் புடைமருதூர் உறை, கனல் உமிழ் கண்டையீரே - நீரில் கயல்மீன்கள் பாயும் திருப்புடைமருதூரில் உறைகின்ற, தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே;

கனல் உமிழ் கண்டையீர், ம கழலிணை நினைபவர் அடைவது நிறைவே - தீ உமிழும் நெற்றிக்கண் உடையவரே, உமது இரு-திருவடிகளைத் தியானிப்பவர் (குறைகள் நீங்கி) நிறைவு பெறுவர்; (நிறைவு - மகிழ்ச்சி; பூரணம்; திருப்தி);


6)

புரமெரி செய்தணி புடைமரு தூருறை

கரமொரு மானுடை யீரே

கரமொரு மானுடை யீரும கழலிணை

உரைசெய நல்லன உறுமே.


புரம் எரிசெய்து அணி புடைமருதூர் உறை, கரம் ஒரு மான் உடையீரே - முப்புரங்களை எரித்து, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் மானை ஏந்தியவரே; (அணி - அழகிய);

கரம் ஒரு மான் உடையீர் உம கழலிணை உரைசெய நல்லன உறுமே - கையில் மானை ஏந்தியவரே, உமது இரு-திருவடிகளைத் துதித்தால் நன்மை வந்தடையும்; (உரைசெய்தல் - புகழ்தல்; துதித்தல்);


7)

பொடியணிந் தழகிய புடைமரு தூருறை

துடியமர் கரமுடை யீரே

துடியமர் கரமுடை யீருமைத் தொழுதெழும்

அடியவர் அருவினை அறுமே.


பொடிணிந்து அழகிய புடைமருதூர் உறை, துடிமர் கரம் உடையீரே - திருநீற்றைப் பூசி, அழகிய திருப்புடைமருதூரில் உறைகின்ற, கையில் உடுக்கை ஏந்தியவரே; (பொடி - திருநீறு); (துடி - உடுக்கு);

துடி அமர் கரம் உடையீர் உமைத் தொழுதெழும் அடியவர் அருவினை அறுமே - கையில் உடுக்கை ஏந்தியவரே உம்மை வழிபடும் அடியார்களது அரிய வினையெல்லாம் அழியும்;


8)

புடையொரு பெண்ணுடன் புடைமரு தூருறை

அடலரக் கனைநெரித் தீரே

அடலரக் கனைநெரித் தீரும தடிதொழத்

தொடர்வினை தொலைவது துணிவே.


புடைரு பெண்ணுடன் புடைமருதூர் உறை, அடல்-ரக்கனை நெரித்தீரே - உமைபங்கராகித் திருப்புடைமருதூரில் உறைகின்ற, வலிய இராவணனை நசுக்கியவரே; (புடை - பக்கம்); (அடல் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);

அடல்-ரக்கனை நெரித்தீர் உது அடிதொழத் தொடர்-வினை தொலைவது துணிவே - வலிய இராவணனை நசுக்கியவரே, உமது திருவடியைத் தொழுதால், தொடர்கின்ற வினையெல்லாம் அழிவது நிச்சயம்; (துணிவு - நிச்சயம்);


9)

பூவினன் அரிதொழப் புடைமரு தூருறை

ஆவினில் அஞ்சுகந் தீரே

ஆவினில் அஞ்சுகந் தீரும துயர்பெயர்

நாவினில் அணிவது நலமே.


பூவினன் அரி தொழப் புடைமருதூர் உறை, ஆவினில் அஞ்சுகந்தீரே - தாமரையில் உறையும் பிரமன், திருமால் இருவரும் (அடிமுடி தேடிக் காணாது) தொழத், திருப்புடைமருதூரில் உறைகின்ற, பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே; (ஆவினில் அஞ்சு - பஞ்சகவ்வியம்);

ஆவினில் அஞ்சு உகந்தீர் உமது உயர்-பெயர் நாவினில் அணிவது நலமே - பஞ்சகவ்விய அபிஷேகம் விரும்பியவரே, உமது உயர்ந்த நாமத்தை நாவில் அணிவது நன்மையைத் தரும்;


10)

புகழ்பவர் மருவிடும் புடைமரு தூருறை

இகழ்பவர்க் கருளகி லீரே

இகழ்பவர்க் கருளகி லீருமை ஏத்திட

இகல்வினை இடரிலை இனியே.


புகழ்பவர் மருவிடும் புடைமருதூர் உறை, இகழ்பவர்க்கு அருளகிலீரே - புகழும் பக்தர்கள் பொருந்துகின்ற (/அடைகின்ற) திருப்புடைமருதூரில் உறைகின்ற, போற்றாதவர்களுக்கு அருளாதவரே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்");

இகழ்பவர்க்கு அருளகிலீர் உமை ஏத்திட இகல்-வினை இடர் இலை இனியே - போற்றாதவர்களுக்கு அருளாதவரே, உம்மைத் துதித்தால் பகைக்கின்ற வினைத்துன்பம் இனி இல்லை; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்); (வினை இடர் - வினையும் துன்பமும் - என்று உம்மைத்தொகையாகவும் பொருள்கொள்ளல் ஆம்);


11)

பூமலி பொழிலணி புடைமரு தூரினில்

கோமதி யுடனுறை வீரே

கோமதி யுடனுறை வீருமைக் கும்பிட

மாமதி வரும்வினை மாய்வே.


பூ மலி பொழில் அணி புடைமருதூரினில் கோமதியுடன் உறைவீரே - மலர்கள் மிகுந்த சோலை திகழும் திருப்புடைமருதூரில் கோமதியுடன் உறைகின்றவரே; (* கோமதியம்பாள் - திருப்புடைமருதூரில் இறைவி திருநாமம்);

கோமதியுடன் உறைவீர் உமைக் கும்பிட மா-மதி வரும், வினை மாய்வே - கோமதியுடன் உறைகின்றவரே, உம்மை வணங்கினால் ஞானம் வரும், வினைகள் அழியும்; (மா மதி - நல்லறிவு); (மாய்வு - அழிவு);


பிற்குறிப்பு யாப்புக் குறிப்பு:

தானன தானன தானன தானன

தானன தானன தானா

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவைஇவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறைஎன்று கருதலாம்முதலடியும் மூன்றாம் அடியும் அளவடிஇரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடிதானன என்ற சீர்கள் தனதன என்றும் வரலாம்தானன தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்தானா என்ற சீர்கள் தனனா என்றும் வரலாம்; 2-ஆம் அடி 3-ஆம் அடியில் மடங்கி (= திரும்பவும்வரும்;

உதாரணம் சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி";


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, September 17, 2018

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

2014-03-01

4.52 - புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)

----------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சொற்சுவை யோடு பொருட்சுவை மிக்க

.. தொடைபல கொண்டடி போற்றும்

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு

.. நலமெலாம் நல்கிடும் நம்பன்

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக்

.. கடிமதில் மூன்றையும் எய்த

பொற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


சொற்சுவையோடு பொருட்சுவை மிக்க தொடை பல கொண்டு அடி போற்றும் - சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த பாமாலைகளால் திருவடியை வழிபடும்; (தொடை - மாலை);

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு நலமெலாம் நல்கிடும் நம்பன் - நல்ல சுவையை அறிந்த நாவுடைய அன்பர்க்கு எல்லா நலங்களையும் அருளும் நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக் கடி-மதில் மூன்றையும் எய்த பொற்சடையான் ஊர் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்த, பொன் போன்ற சடையுடைய ஈசன் உறையும் தலம்; (கல் - மலை; சிலை - வில்); (கடி - காவல்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில் சோலைகள் சூழ்ந்த திருப்புடைமருதூர்; (பொருநை - தாமிரபரணி ஆறு);


2)

துரிசடை யாத தூயம னத்தர்

.. துணையடி தோத்திரம் செய்யும்

பரிசுடை யார்தம் பழவினை தீர்த்துப்

.. பரகதி கொடுத்தருள் பரமன்

விரிசடை யாய்வெள் விடையினாய் என்று

.. வேண்டிய பகீரதற் கருள்செய்

புரிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


துரிசு அடையாத தூய மனத்தர், துணையடி தோத்திரம் செய்யும் பரிசு உடையார்தம் பழவினை தீர்த்துப் பரகதி கொடுத்து அருள் பரமன் - ; (துரிசு - குற்றம்); (துணையடி - இரு திருவடிகள்; துணையாக உள்ள திருவடி என்றும் கொள்ளலாம்); (பரிசு - குணம்; தன்மை);

"விரி-சடையாய்! வெள்-விடையினாய்!" என்று வேண்டிய பகீரதற்கு அருள்செய் புரி-சடையான் ஊர் - ; (விரிசடையாய் - விரிந்த சடையை உடையவனே); (இங்கே கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டுவருவதற்காகப் பகீரதன் வேண்டுவதால், "சடையானே, அதை விரிப்பாயாக" என்றும் பொருள்கொள்ளாலாம்); (விடையினாய் - இடபவாகனனே); (புரிசடையான் - முறுக்கிய சடையினன்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - ;


3)

முன்சிறு நகையால் முப்புரம் எரித்த

.. முக்கணன் தன்திரு நாம

இன்சுவை அறிந்த நாவுடை யார்தம்

.. இருவினை தீர்த்தருள் ஈசன்

மென்சிறை வண்டு முரல்நறுங் கொன்றை

.. வெறிகமழ் கூவிளம் விரவும்

புன்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மென்-சிறை வண்டு - மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள்; முரல்தல் - ஒலித்தல்; பாடுதல்; வெறி கமழ் கூவிளம் - மணம் வீசும் வில்வம்; புன்சடை - செஞ்சடை;


4)

கலியிடை மலையை மத்தென நாட்டிக்

.. கடைந்திடும் போதெழு நஞ்சால்

மெலிவடை உம்பர் ஒலிகழல் போற்ற

.. மிடற்றினில் வைத்தருள் விமலன்

பலிகடை தோறும் சென்றிரந் துண்ணும்

.. பண்பினன் பணிந்தெழு திங்கள்

பொலிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கலி - கடல்; நாட்டுதல் - ஸ்தாபித்தல்; நடுதல்; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "கோல மால்வரை மத்தென நாட்டிக்"); மெலிவு அடைதல் - துன்புறுதல்; உம்பர் - தேவர்கள்: ஒலி-கழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி; பலி கடைதோறும் சென்று இரந்து உண்ணும் - பிச்சையை வீட்டுவாயில்கள்தோறும் சென்று யாசித்து உண்கின்ற; (அப்பர் தேவாரம் - 6.79.7 - "கடைதோறும் பலிகொள்வானை"); திங்கள் பொலிசடையான் - சந்திரன் திகழ்கின்ற சடையை உடையவன்;


5)

தனக்கிணை இல்லான் தாயினும் நல்லான்

.. தடவரை யான்மகள் தலைவன்

பனைக்கர வேழம் படவுரி செய்து

.. பாரிடம் சூழந டிப்பான்

முனர்ச்சலந் தரனைத் தடிந்தசக் கரத்தை

.. முளரிபோற் கண்ணனுக் கீந்த

புனற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தட-வரையான் மகள் தலைவன் - மலைமகளுக்குத் தலைவன்; (தட-வரை - பெரிய மலை); பனைக்கர வேழம் பட உரி செய்து - பனை போன்ற துதிக்கையை உடைய யானையைக் கொன்று தோலை உரித்து; (படுதல் - சாதல்); பாரிடம் - பூதம்; நடித்தல் - கூத்தாடுதல்; நடம்செய்தல்; முனர் - முன்னர் - இடைக்குறை விகாரம்; தடிதல் - வெட்டுதல்; அழித்தல்; முளரி போல் கண்ணன் - தாமரை போன்ற கண் உடையவன் - திருமால்; (முளரி - தாமரை); (சுந்தரர் தேவாரம் - 7.16.2 - "செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி");


6)

மருவுடை மலரை வாளியாக் கொண்ட

.. மன்மதன் மதியில னாகி

அருகடை நாளில் அழலுமிழ் கண்ணால்

.. அவனழ குடல்தனைக் காய்ந்தான்

திருவுடை யான்ஓர் சிரத்தினில் ஐயம்

.. தேர்பவன் அடியவர்க் கரணாம்

பொருவிடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மரு - வாசனை; வாளி - அம்பு; அவன் அழகு உடல்தனைக் காய்ந்தான் - மன்மதனின் அழகிய உடலை எரித்துச் சாம்பலாக்கியவன்; திரு - செல்வம்; நன்மை; விபூதி/திருநீறு; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை..."); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே"); ஐயம் - பிச்சை; அடியவர்க்கு அரண் ஆம் பொரு-விடையான் - பக்தர்களுக்குக் காவலாக இருக்கும், போர்செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும்");


7)

கனைகடல் கக்கு கருவிடந் தன்னைக்

.. கருணையொ டுண்டிருள் கண்டன்

புனலடை சடையான் கொடியிடை உடையாள்

.. புரிகுழற் கோமதி நாதன்

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன்

.. நீறொளிர் மார்பினில் அரவம்

புனைபெரு மானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கனைகடல் கக்கு கருவிடம் தன்னைக் கருணையொடு உண்டு இருள் கண்டன் - ஒலிக்கின்ற கடல் உமிழ்ந்த கரிய நஞ்சைக் கருணையினால் உண்டு கறுத்த கண்டத்தை உடையவன்;

புனல் அடை சடையான் - கங்கையைச் சடையில் அடைத்தவன்;

கொடியிடை உடையாள் புரி-குழல் கோமதி நாதன் - கொடி போன்ற இடையும் சுருண்ட கூந்தலும் உடைய கோமதிக்குத் தலைவன்; (புரிதல் - சுருள்தல்); (* கோமதி - இத்தலத்து இறைவி திருநாமம்);

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன் - எண்ணி வழிபடும் பக்தர்கள் நெஞ்சிள் தங்கும் தூயவன்;

நீறு ஒளிர் மார்பினில் அரவம் புனை பெருமான் ஊர் - திருநீற்றைப் பூசிய மார்பில் பாம்பை மாலையாக அணிந்த பெருமான் உறையும் ஊர்;

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில், சோலை சூழ்ந்த திருப்புடைமருதூர் ஆகும்;


8)

தேர்விடத் தடையோ இம்மலை என்று

.. சின(ம்)மிகு மனத்தனாய் அதனைப்

பேர்மட அரக்கன் வலிகெட ஊன்றிப்

.. பின்னவன் பெரிதழு தேத்தப்

பேர்கொடுத் தருள்செய் பிஞ்ஞகப் பித்தன்

.. பேதையோர் பங்கினன் வெள்ளைப்

போர்விடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


பேர் மட அரக்கன் வலி கெட ஊன்றிப் - கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற, மடமை மிக்க தசமுகனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி; (வலி - வலிமை);

பின் அவன் பெரிது அழுது ஏத்தப், பேர் கொடுத்து அருள்செய் - பிறகு அவன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது துதிக்க, அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற பெயரும் கொடுத்து அருள்செய்த; (அப்பர் தேவாரம் - 6.79.10 - "பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனை" - இராவணன் - அழுதவன்);

பிஞ்ஞகப் பித்தன் - தலைக் கோலமும், பேரருளும் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பிஞ்ஞகப் பித்தனை");

பேதைர் பங்கினன் - உமையொருபங்கன்;


9)

மருப்பொசி மாலும் மலர்மிசை அயனும்

.. மலரடி மணிமுடி காணா

நெருப்புரு வாகி நின்றவன் இன்று

.. நேற்றொடு நாளையும் ஆகி

இருப்பவன் அன்பர் விருப்பவன் உம்பர்

.. இடர்கெட எயில்களை எரித்த

பொருப்புவில் லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மருப்பு ஒசி மாலும் - குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்த திருமாலும்; (மருப்பு - யானைக்கொம்பு; தந்தம்); (ஒசித்தல் - ஒடித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்"); மலர்மிசை அயனும் - தாமரைமேல் இருக்கும் பிரமனும்; விருப்பவன் - விருப்பமாய் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 6.90.9 - "தக்கோர் சிந்தை விருப்பவனை"); பொருப்பு வில் - மேருமலை வில்;


10)

சேர்வழி அறியாக் கார்மலி நெஞ்சர்

.. செப்பிடும் சிறுமொழி கொள்ளேல்

ஓர்வழி உண்மை நேர்வழி எளிதில்

.. உய்வழி நீறணி பத்தர்

சார்வழி ஆன சங்கரன் கங்கைச்

.. சடையினன் கடகரி உரிவைப்

போர்வையி னானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


வழி - நெறி; கார் - கருமை; இருள்; அறிவுமயக்கம்; மலிதல் - மிகுதல்; சிறுமொழி - புன்மொழி; சிறுசொல்; அற்ப வார்த்தைகள்; கொள்ளேல் - மதிக்கவேண்டா; ஓர் வழி - ஒப்பற்ற நெறி; உண்மை நேர்வழி - உண்மைவழி, நேர்வழி - மெய்ந்நெறி, செவ்வையான வழி; எளிதில் உய் வழி - எளிதில் உய்யும் நெறி; நீறு அணி பத்தர் சார் வழி - திருநீறு பூசிய பக்தர்கள் சாரும் நெறி; (சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்துதல்); கட-கரி உரிவைப் போர்வையினான் - மதயானையின் தோலைப் போர்வையாக அணிந்தவன்; (கடம் - யானை மதம்); (கரி - யானை); (உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "கடகரி யுரியர் போலும்");


11)

தீங்கரும் பன்ன இன்மொழி பேசும்

.. தேவியோர் பங்கனே சிவனே

தாங்கருந் துன்பம் தருவினை தீராய்

.. சம்புவே என்றடி தொழுவார்க்(கு)

ஈங்கருந் துணையாய் இன்பம ருள்வான்

.. இரக்கமில் காலனை உதைத்த

பூங்கழ லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தீங்-கரும்பு அன்ன இன்மொழி - இனிய கரும்பு போன்ற இன்மொழி; தாங்கருந்துன்பம் - தாங்க அரும் துன்பம் - தரிக்க ஒண்ணாத துன்பம்; (தாங்கரும் - தாங்க அரும்; தொகுத்தல் விகாரம்); துன்பம் தருவினை தீராய் - துன்பத்தைத் தரும் வினைகளைத் தீர்ப்பாயாக; சம்பு - சிவன் திருநாமம் - இன்பத்தை ஆக்குபவன்; சுகத்தைத் தருபவன்; ஈங்கு அரும் துணையாய் - இங்கே (இப்பிறப்பில், இவ்வுலகில்) அரிய துணை ஆகி; இரக்கம் இல் காலனை - இரக்கமற்ற எமனை; பூங்கழலான் - பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------