Monday, June 15, 2026

T.240 - அன்னியூர் - வெம்மை விரவு

2020-05-10

T. 240 - அன்னியூர் - வெம்மை விரவு

(பொன்னூர்) (மயிலாடுதுறை அருகே உள்ளது)

-----------------

(வண்ணவிருத்தம்;

தன்ன தனன .. தனதான)


வெம்மை விரவு .. வினையாலே

.. விம்மு மிடியின் .. வரவாலே

செம்மை சிறிதும் .. அறியேனும்

.. திண்ண(ம்) நலமும் .. உறுவேனோ

அம்மை எனவும் .. அருளாரும்

.. அண்ணல் எனவும் .. வருவோனே

அம்மை திகழு(ம்) .. மிடறாதென்

.. அன்னி மருவு .. பெருமானே.


பதம் பிரித்து:

வெம்மை விரவு .. வினையாலே,

.. விம்மு மிடியின் .. வரவாலே,

செம்மை சிறிதும் .. அறியேனும்

.. திண்ண(ம்) நலமும் .. உறுவேனோ?

அம்மை எனவும், .. அருள் ஆரும்

.. அண்ணல் எனவும் .. வருவோனே;

அம்-மை திகழு(ம்) .. மிடறா; தென்

.. அன்னி மருவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

வெம்மை விரவு வினையாலே - தகிக்கின்ற வினைகளால்; (வெம்மை - சூடு); (விரவுதல் - பொருந்துதல்);

விம்மு மிடியின் வரவாலே - மிகுந்த துன்பங்கள் வந்தடைதலால்; (விம்முதல் - மிகுதல்); (மிடி - துன்பம்; வறுமை);

செம்மை சிறிதும் அறியேனும் - செம்மை சிறிதும் இல்லாத அடியேனும்; (செம்மை - செவ்வை);

திண்ண(ம்) நலமும் உறுவேனோ - நிச்சயம் நற்கதி அடைவேனோ? அருள்வாயாக; (திண்ணம் - நிச்சயம்);

அம்மை எனவும் அருள் ஆரும் அண்ணல் எனவும் வருவோனே - தாயாகவும் அருளுடைய தந்தையாகவும் வருபவனே; (அண்ணல் - தலைவன்; தந்தை);

அம்-மை திகழு(ம்) மிடறா - (ஆலகாலத்தை உண்டு) அந்த அழகிய இருள் (கருநிறம்) திகழும் கண்டம் உடையவனே; (அம் - அழகு); (- பண்டறிசுட்டு); (மை - கருநிறம்; இருள்); (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");

தென் அன்னி மருவு பெருமானே - அழகிய திரு-அன்னியூரில் உறைகின்ற பெருமானே; (தென் - அழகிய); (அன்னி - அன்னியூர்; வான்மியூர் "வான்மி" என்று சில சமயம் வருவது போல); (சம்பந்தர் தேவாரம் - 3.55.4 - "திருவான்மிதன்னில் அன்பா"); (சம்பந்தர் தேவாரம் - 1.135.10 - "பராய்த்துறை மருவினான்றனை வாழ்த்துமே"); (சம்பந்தர் தேவாரம் - 1.64.1 - "செம்மையோங்கும் தென்-திருப்பூவணமே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment