2020-05-21
M.076 - மானார் - கரவன் - மடக்கு
-----------------
மானார் விழியாள் மணவாளன் ஏறேறு
மானார் தொழினும் வரமருள்வான் - மானார்
கரவன் கமழ்சடையிற் கங்கையினான் நாலும்
கரவன் கரியுரித்தான் காண்.
சொற்பொருள்:
மான் ஆர் - 1. மான் போன்ற; 2. பெரியோன் யார்; 3. மான் பொருந்திய;
மான் - 1. மான் என்ற விலங்கு; 2. பெரியோன்;
ஆர்தல் - 1. ஒத்தல்; 2. பொருந்துதல்;
கரவன் - 1. கையை உடையவன்; 2. (கர வன் =) கரத்தையுடைய வலிய கொடிய;
மான் ஆர் விழியாள் மணவாளன் - மான் போன்ற விழியுடைய உமைக்குக் கணவன்;
ஏறு ஏறு மான் - இடபத்தின்மேல் ஏறுகின்ற பெரியோன்; (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரமபுரத்துறை பெம்மா னெம்மான்")
ஆர் தொழினும் வரம் அருள்வான் - எத்தகையவராயினும் (அன்போடு) வணங்கினால் அவர்களுக்கு வரம் அருள்பவன்; (ஆர் - யார்);
மான் ஆர் கரவன் - கையில் மானை ஏந்தியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா உமையாள் கணவா");
கமழ்-சடையில் கங்கையினான் - மணம் கமழும் சடையில் கங்கையைத் தரித்தவன்;
நாலும் கர-வன்-கரி உரித்தான் காண் - தொங்கும் கையை உடைய கொடிய யானையின் தோலை உரித்தவன்; (நால்தல் - தொங்குதல்); (காண் - பார்; அறி; முன்னிலை அசைச்சொல்); (அப்பர் தேவாரம் - 6.64.8 - "முடித்தவன்காண் வன்கூற்றை");
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment