Saturday, July 25, 2026

M.077 - இருமலை - காவும் - மடக்கு

2020-05-21

M.077 - இருமலை - காவும் - மடக்கு

-----------------

இருமலை எய்தாத இன்பருளாய், வில்லா

இருமலை ஏந்திய ஈசா, - இருமலை

காவும் இடும்பனடை கந்தனத்தா, பல்துறையும்

காவும் உறைவாய், கனிந்து.


முற்குறிப்பு : "வில்லா இருமலை ஏந்திய .... உறைவாய் கனிந்து இருமலை எய்தாத இன்பருளாய்" என்று கூட்டிப் பொருள்கொள்க. = "சிவபெருமானே, என்மேல் இரக்கம்கொண்டு எனக்கு நோயற்ற இன்பவாழ்வை அருள்வாயாக".


சொற்பொருள்:

இருமலை - 1. இருமல், ; (- கோழை); 2. பெரிய மலை; (இருமை - பெருமை); 3. இரண்டு மலைகள்;

காவும் - 1. தோளில் சுமக்கும்; (காவுதல் - தோளால் காத்தண்டு சுமத்தல்); 2. கா என்ற பெயருடைய தலங்களிலும்;


இருமல் ஐ எய்தாத இன்பு அருளாய் - இருமலும் கோழையும் அடைந்து நான் வருந்தும் நிலையுறாத இன்பம் அருள்வாயாக; (இன்பு - இன்பம்);

வில்லா இருமலை ஏந்திய ஈசா - வில்லாகப் பெரிய மேருமலையை ஏந்திய ஈசனே;

இருமலை காவும் இடும்பன் அடை கந்தன் அத்தா - இரண்டு மலைகளைத் தண்டில் கட்டிச் சுமந்த இடும்பன் சரணடைந்த முருகனுக்குத் தந்தையே; (அடைதல் - சேர்தல்; சரணடைதல்); (இடும்பன் அடை கந்தன் = "இடும்பன் இருந்த இடத்திற்குச் சென்று அவனுக்கு அருளிய முருகன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (* இடும்பன் சிவனை வழிபட்டதையும் முருகன் அவனோடு விளையாடல் செய்து அருளியதையும் பழனித் தலவரலாற்றில் காண்க);

பல்துறையும் காவும் உறைவாய் கனிந்து - பல துறை, கா என்ற பெயருடைய தலங்களில் உறைகின்றவனே, இரங்கி; (துறை - சோற்றுத்துறை, ஆவடுதுறை, மயிலாடுதுறை முதலியன); (கா - கோலக்கா, நெல்லிக்கா, ஆனைக்கா முதலியன); (சம்பந்தர் தேவாரம் - சேத்திரக்கோவை - 2.39.3 - "அட்டானமென் றோதிய நாலிரண்டும் அழகன்னுறை காவனைத்தும் துறைகள் எட்டாம் திருமூர்த்தியின் காடொன்பதும் குளமூன்றும் களமஞ்சும் பாடிநான்கும்");

இலக்கணக் குறிப்பு: பல்+தொடை = பஃறொடை; அதுபோலப், "பல்+துறை = பஃறுறை" என்று புணரக்கூடும். இவ்விடத்தில் வெண்டளை கருதிக் கூவிளம் என்று அலகிட்டுக்கொள்க;


* பிற்குறிப்புகள்:

* "வருபவர்க ளோலை கொண்டு .... இடும்பன் பழநிதனிலே இருந்த ...... குமரேசா ..." - திருப்புகழ் - கதிர்காமம்;


* இடும்பன் சூரர்களின் போர்ப்பயிற்சிக் குரு. சிவபக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும் காவடியாகத் தூக்கிப் பொதியமலைக்குச் செல்லும்பொழுது முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருகனைத் தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.

https://palani.org/dandayudhapani.ciruppu.htm

தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பனுக்குச் சன்னிதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளைச் சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இடும்பனுக்குப் பூஜை செய்தபின்பே, முருகனுக்குப் பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்குப் பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்குப் பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னிதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.

(பேட்டை துள்ளல் - குரல் எழுப்பியவாறே குதித்து ஆடுதல். இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும்போது எருமேலி என்ற இடத்தில் செய்யக் காணலாம்);


வி. சுப்பிரமணியன்

------------ ------------


No comments:

Post a Comment