2020-05-29
M.079 - நாமறை - ஓத - மடக்கு
-----------------
நாமறை எண்ணமு(ம்) நன்கறியு(ம்) ஞானனுக்கு
நாமறை நாமமகிழ் நாதனுக்கு - நாமறை
ஓத வருமிறைக்(கு) ஓரோடே உண்கலன்
ஓத விடமும் உணவு.
சொற்பொருள்:
நாமறை - 1. நா(ம்) மறை; (மறைத்தல் - ஒளித்தல்); 2. நாம் அறை; (அறைதல் - சொல்தல்); 3. நா மறை; (மறை - வேதம்);
ஓத - 1. பாட; (ஓதுதல் - பாடுதல்); 2. கடல்; (ஓதம் - கடல்);
நா(ம்) மறை எண்ணமும் நன்கு அறியும் ஞானனுக்கு - நாம் வெளிப்படுத்தாமல் மறைக்கும் எண்ணங்களையும் முற்றும் அறியும் ஞானவடிவினனுக்கு;
நாம் அறை நாம(ம்) மகிழ் நாதனுக்கு - நாம் (அன்போடு) சொல்லும் திருநாமங்களையும் புகழையும் கேட்டு மகிழ்ந்து அருளும் தலைவனுக்கு; (நாமம் - பெயர்; புகழ்);
நா மறை ஓத வரும் இறைக்கு - திருநாவால் வேதங்களைப் பாடியவண்ணம் (பிச்சையேற்க) வரும் இறைவனுக்கு;
ஓர் ஓடே உண்கலன் - ஒரு மண்டையோடே பிச்சைப்பாத்திரம்; (ஓடு - மண்டையோடு);
ஓத-விடமும் உணவு - கடல்நஞ்சும் உணவு;
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment