2020-06-06
N.059 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2020
----------------
1) --- (சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா) ---
நலிவல் வினைதீர்ந் துலகோர் உயவே
புலியின் னுரியன் புகழைத் தினமும்
பொலியின் தமிழால் புகல்கா ழியர்கோன்
ஒலிசெய் கழலுன் னிடுமென் உளமே.
நலி வல்வினை தீர்ந்து உலகோர் உயவே - வருத்துகின்ற வலிய வினையெல்லாம் தீர்ந்து உலகமக்கள் உய்யும்படி; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்); (உயவே - உய்யவே - இடைக்குறை விகாரம்);
புலியின் உரியன் புகழைத் தினமும் - புலித்தோலை அணிந்த சிவபெருமானது புகழை நாள்தோறும்; (புலியின்னுரியன் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
பொலி இன்-தமிழால் புகல் காழியர்கோன் - அழகிய இனிய தமிழால் பாடியவரும் சீகாழியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்தரது; (புகல்தல் - சொல்தல்);
ஒலிசெய் கழல் உன்னிடும் என் உளமே - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை என் உள்ளம் நினைக்கும்; (உன்னுதல் - எண்ணுதல்);
2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----
கண்ணப்பிக் காளத்திக் கண்ணுதலான் திருவாக்கால்
கண்ணப்பன் எனப்பெற்ற கானத்து வேட்டுவர்சீர்
பண்ணொத்துத் திகழ்பதிகம் பாடியருள் சம்பந்தர்
அண்ணிக்கும் தமிழ்பாடி அவர்கழலைப் பணிவோமே.
கண் அப்பிக் காளத்திக் கண்ணுதலான் திருவாக்கால் கண்ணப்பன் எனப் பெற்ற கானத்து வேட்டுவர் சீர் - நெற்றிக்கண்ணுடைய காளத்திப் பெருமானுக்குத் தம் கண்ணை இடந்து அப்பி, அப்பெருமானால் "கண்ணப்பன்" என்று அழைக்கப்பெற்றவரும் காட்டில் வேடர்குலத்தில் வந்தவருமான கண்ணப்பரது புகழை;
பண் ஒத்துத் திகழ் பதிகம் பாடியருள் சம்பந்தர் - பண்ணும் தாளமும் திகழும் பதிகத்தில் பாடியருளிய சம்பந்தரது; (ஒத்து - தாளவொற்று - தாளம்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம் காய்கணையினால் இடந்தீசனடி கூடு காளத்திமலையே");
அண்ணிக்கும் தமிழ் பாடி அவர் கழலைப் பணிவோமே - தித்திக்கின்ற தேவாரத்தைப் பாடி அவரது திருவடியைப் பணிவோம்; ( அண்ணித்தல் - தித்தித்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment