Saturday, August 1, 2026

P.505 - நாரையூர் - வேதம் ஓதிய

2020-06-16

P.505 - நாரையூர்

-----------------

(வஞ்சித்துறை - தான தானன - சந்தம்) (திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")

முற்குறிப்பு -

1. இப்பாடல்களில் 4 சிறிய அடிகள். அடியின் சிறுமை கருதி, இங்கே, ஒவ்வொரு வரியிலும் 2 அடிகள் இடப்பட்டுள்ளன.

2. படிப்போர்-வசதி கருதிச், சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;


1)

வேதம் ஓதிய .. நாதன் நாரையூர்ப்

போதன் தாள்தொழ .. ஏதம் இல்லையே.


வேதம் ஓதிய நாதன் - வேதங்களைப் பாடியருளிய தலைவன்;

நாரையூர்ப் போதன் - திருநாரையூரில் உறைகின்ற ஞானவடிவினன்; (போதன் - ஞானி);

தாள் தொழ ஏதம் இல்லையே - அப்பெருமானது திருவடியை வழிபட்டால் துன்பம் தீரும்; (ஏதம் - துன்பம்);


2)

உம்பர் ஏத்திடு(ம்) .. நம்பன் நாரையூர்

இன்பன் அன்பர்தம் .. துன்ப(ம்) நீங்குமே.


உம்பர் ஏத்திடும் நம்பன் - தேவர்களால் தொழப்படும் சிவபெருமான்;

நாரையூர் இன்பன் - திருநாரையூரில் உறைகின்ற இன்ப-வடிவினன்;

அன்பர்தம் துன்பம் நீங்குமே - அப்பெருமானது பக்தர்களது துன்பம் தீரும்;


3)

கானில் ஆடிடும் .. ஞானன் நாரையூர்

மானன் னாம(ம்)நம் .. ஊன(ம்) நீக்குமே.


கானில் ஆடிடும் ஞானன் - சுடுகாட்டில் ஆடுகின்ற ஞானவடிவினன்;

நாரையூர் மான் நன்னாமம் நம் ஊனம் நீக்குமே - திருநாரையூரில் உறைகின்ற பெருமானது நல்ல திருநாமம் நம் குற்றங்களையும் வினைகளையும் தீர்க்கும்; (மான் - பெரியோன்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்");


4)

நீறு பூசிபூ .. நாறு நாரையூர்

ஆறு சூடிபேர் .. கூறும் இன்பமே.


நீறு-பூசி - திருநீற்றைப் பூசியவன்;

பூ நாறு நாரையூர் - பூக்கள் மணம் வீசுகின்ற திருநாரையூரில் உறைகின்ற;

ஆறு-சூடி பேர் கூறும் - கங்காதரனது திருப்பெயரைச் சொல்லுங்கள்;

இன்பமே - இன்பம் வந்தடையும்; ("இன்பமே" என்பதை இருமுறை இயைத்துத், "திருநாமத்தைக் கூறும் இன்பமே இன்பம்" என்றும் பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "சிற்றம்பல(ம்) மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே");


5)

எல்லை அற்றவன் .. நல்லன் நாரையூர்ச்

செல்வன் நாமமே .. சொல்ல இன்பமே.


எல்லை அற்றவன் - அளவில்லாதவன்; அழிவற்றவன்;

நல்லன் - நன்மை செய்பவன்;

நாரையூர்ச் செல்வன் நாமமே சொல்ல இன்பமே - திருநாரையூரில் உறைகின்ற செல்வனான சிவபெருமானது திருப்பெயரைச் சொன்னால் இன்பமே வந்தடையும்;


6)

செக்கர் மேனியன் .. நக்கன் நாரையூர்

முக்கண் மூர்த்திபேர் .. துக்க(ம்) நீக்குமே.


செக்கர் மேனியன் - செம்மேனியன்; (செக்கர் - சிவப்பு);

நக்கன் - திகம்பரன்;

நாரையூர் முக்கண் மூர்த்தி பேர் துக்கம் நீக்குமே - திருநாரையூரில் உறைகின்ற முக்கட்பெருமானது திருநாமம் நம் துக்கத்தைத் தீர்க்கும்;


7)

மதியன் வேணியில் .. நதியன் நாரையூர்ப்

பதிநன் னாமமே .. துதிமின் நன்மையே.


மதியன் வேணியில் நதியன் - சடையில் கங்கையையும் சந்திரனையும் அணிந்தவன்; ("வேணியில்" - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது);

நாரையூர்ப் பதி நன்னாமமே துதிமின் - திருநாரையூரில் உறைகின்ற தலைவனது நல்ல திருப்பெயரையே துதியுங்கள்; (பதி - தலைவன்);

நன்மையே - நன்மையே வந்தடையும்;


8)

வரையி டந்தவன் .. சிரமொர் பத்தடர்

அரவன் நாரையூர் .. பரவி உய்ம்மினே.


வரை இடந்தவன் சிரம் ஒர் பத்து அடர் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது தலைகள் பத்தையும் நசுக்கியவனும்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்); (அடர்த்தல் - நசுக்குதல்);

அரவன் நாரையூர் பரவி உய்ம்மினே - பாம்புகளை அணிந்தவனுமான சிவபெருமானது திருநாரையூரைப் போற்றி உய்யுங்கள்;


9)

வேதன் மால்தொழு .. பாதன் ஏறமர்

நாதன் நாரையூர் .. ஓதி உய்ம்மினே


வேதன் மால் தொழு பாதன் - பிரமனும் திருமாலும் தொழுகின்ற திருப்பாதன்;

ஏறு அமர் நாதன் - இடபத்தை வாகனமாக விரும்பிய தலைவன்;

நாரையூர் ஓதி உய்ம்மினே - அப்பெருமான் உறையும் திருநாரையூரைப் போற்றி உய்யுங்கள்;


10)

பொய்யர் சொல்விடும் .. செய்யன் நாரையூர்

ஐயன் நாமமே .. உய்வு நல்குமே.


பொய்யர் சொல் விடும் - பொய்யர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்;

செய்யன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);

நாரையூர் ஐயன் நாமமே உய்வு நல்குமே - திருநாரையூரிள் உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருநாமமே உய்தியை அளிக்கும்;


11)

மணிமி டற்றினன் .. அணிகொள் நாரையூர்

பணியும் அன்பர்தம் .. பிணிகள் நீங்குமே


மணி மிடற்றினன் - நீலமணி போல் திகழும் கண்டத்தை உடையவன்;

அணிகொள் நாரையூர் - அப்பெருமான் உறைகின்ற அழகிய திருநாரையூரை;

பணியும் அன்பர்தம் பிணிகள் நீங்குமே - வழிபடும் பக்தர்களது பிணிகளெல்லாம் நீங்கும்; (பிணி - வினை; நோய்; பற்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment