Saturday, August 22, 2026

T.242 - சிக்கல் - பொத்தற்கட்டு

2020-07-16

T.242 - சிக்கல் - பொத்தற்கட்டு

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சிபுரம்)


பொத்தற் கட்டிக் .. குடிலாசைப்

.. பொக்கத் திற்பட் .. டழியாமல்

பத்திப் பொற்புற் .. றுனையோதிப்

.. பற்றைச் செற்றுச் .. சுகியேனோ

எத்தர்க் கெட்டற் .. கரியானே

.. இட்டர்க் கிச்சித் .. தனவீவாய்

முத்துப் பற்சத் .. தியொர்கூறா

.. முக்கட் சிக்கற் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொத்தற்-கட்டு இக் குடில்-ஆசைப்

.. பொக்கத்திற் பட்டு அழியாமல்

பத்திப் பொற்பு உற்று உனை ஓதிப்

.. பற்றைச் செற்றுச் சுகியேனோ;

எத்தர்க்கு எட்டற்கு அரியானே;

.. இட்டர்க்கு இச்சித்தன ஈவாய்;

முத்துப்பற்-சத்தி ஒர் கூறா;

.. முக்கட்-சிக்கற் பெருமானே.


பொத்தற்-கட்டு இக்-குடில்-ஆசைப் பொக்கத்திற் பட்டு அழியாமல் - ஓட்டை மாடமான இந்த உடம்பின்மேல் ஆசை என்ற பொய்யில் சிக்கி அழியாமுன்; (பொத்தல் - துவாரம்; ஓட்டை); (கட்டு - கட்டடம்); (குடில் - குடிசை - ஆகுபெயராக உடம்பைக் குறித்தது); (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (படுதல் - அகப்படுதல்; புகுதல்; துன்புறுதல்);

பத்திப்-பொற்பு உற்று உனை ஓதிப் பற்றைச் செற்றுச் சுகியேனோ - பக்திப்பண்பை அடைந்து உன்னைப் பாடி வழிபட்டு, என் பந்தங்களை வென்று இன்புற அருள்வாயாக; (பொற்பு - தன்மை); (பற்று - பந்தம்; அகப்பற்றும் புறப்பற்றும்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்); (சுகித்தல் - உன்புறுதல்);

எத்தர்க்கு எட்டற்கு அரியானே - வஞ்சகர்களால் அடையப்படாதவனே; (எத்தர் - வஞ்சகர்);

இட்டர்க்கு இச்சித்தன ஈவாய் - அன்பர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் கொடுப்பவனே; (இட்டர் - இஷ்டர் - அன்பர்; பக்தர்); (இச்சித்தல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்");

முத்துப்பற்-சத்தி ஒர் கூறா - முத்துப் போன்ற பற்களையுடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (சத்தி - சக்தி - உமை); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.72.5 - "முத்தேர் நகையாள் இடமாக"); ("முத்துப்பற்-சத்தி ஒர் கூறு ஆம் முக்கட்-சிக்கற் பெருமானே" - என்றும் பொருள்கொள்ளலாம்);

முக்கட்-சிக்கற் பெருமானே - முக்கட்பெருமானே (முக்கண்ணனே) & சிக்கல் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment