Tuesday, August 11, 2026

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

2020-06-27

T.241 - காழி - அலைமலி ஆழி சூழும்

-------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தான

தனதன தான தான

தனதன தான தான .. தனதான)

(வரிவிழி பூசலாட - திருப்புகழ் - பொது)


அலைமலி ஆழி சூழும் .. அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவில தாகி மாடு .. மனைநாடி

.. அனுதினம் ஓடி ஆடி .. அக(ம்)மிக வாடி ஆயுள்

.. .. அதுமுடி வாகி மாயு(ம்) .. மிடிதீராய்

மலர்மலி சோலை நாடி .. மண(ம்)மிகு போதி னோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை .. புனைமாணி

.. வழிபடு வேளை காலன் .. வரஅவன் மாளு மாறு

.. .. மலரடி வீசு நேய .. சடையானே

இலைமலி வேலி னோடு .. கனல்மழு வாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் .. உடையானே

.. எழில்மட மாத ரார்கள் .. அவர்மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச .. திருவாளா

வலைஞனும் வீர வேடன் .. வடிவமும் வேட மாகு(ம்)

.. .. மறைமுத லேப ராவு .. சுரர்வாழ

.. வரிசிலை யாக மேரு .. வரைகொடு போர்செய் தீர

.. .. மதிலணி காழி மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

அலை மலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை

.. .. அளவு இலது ஆகி, மாடு மனை நாடி,

.. அனுதினம் ஓடி ஆடி, அக(ம்) மிக வாடி, ஆயுள்

.. .. அது முடிவு ஆகி மாயு(ம்) மிடி தீராய்;

மலர் மலி சோலை நாடி மண(ம்) மிகு போதினோடு

.. .. மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி

.. வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு

.. .. மலரடி வீசு நேய; சடையானே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளு(ம்) மானும்

.. .. இலகிடு தீயும் ஏறும் உடையானே;

.. எழில் மட மாதரார்கள் அவர் மனை வாயில் ஏகி

.. .. இடுபலி தேரும் ஈச; திருவாளா;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகு(ம்)

.. .. மறைமுதலே; பராவு சுரர் வாழ

.. வரி-சிலையாக மேரு வரைகொடு போர்செய் தீர;

.. .. மதில் அணி காழி மேய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அலைமலி ஆழி சூழும் அவனியில் வாழ்வில் ஆசை ளவு இலது ஆகி - அலைகள் மிக்க கடல் சூழ்ந்த இவ்வுலக வாழ்க்கையில் கொண்ட ஆசை அளவற்றதாகி; (ஆழி - கடல்); (அவனி - பூமி); (அவனியில் வாழ்வில் - "அவனி இல்வாழ்வில்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்);

மாடு மனை நாடி - பொருள் குடும்பம் இவற்றை விரும்பி; (மாடு - பொன்; செல்வம்); (மனை - வீடு; மனைவி; குடும்பம்);

அனுதினம் ஓடி ஆடி - நாள்தோறும் அலைந்து திரிந்து;

அகம் மிக வாடி - மனம் மிகவும் வாட்டமுற்று;

ஆயுள்அது முடிவு ஆகி மாயும் மிடி தீராய் - வாழ்நாளும் முடிந்து இறந்து அழியும் இத்துன்பத்தை தீர்த்து அருள்வாயாக; (மிடி - துன்பம்);

மலர் மலி சோலை நாடி - மலர்கள் மிக்க சோலையை அடைந்து;

மணம் மிகு போதினோடு மகிழ்வுடன் ஏர்கொள் மாலை புனை மாணி - வாசனை மிகுந்த பூக்களால் மனமகிழ்ந்து அழகிய மாலைகளைத் தொடுத்துத் திருவடியில் புனைந்த மார்க்கண்டேயர்; (போது - பூ); (ஏர் - அழகு); (மாணி - மார்க்கண்டேயர்);

வழிபடு வேளை காலன் வர அவன் மாளுமாறு மலரடி வீசு நேய - வழிபாடு செய்த சமயத்தில் அவரைக் கொல்லக் காலன் வந்தபொழுது அக்காலனே மாளும்படி மலர்ப்பாதத்தால் காலனை உதைத்த அன்பனே; (நேயன் - அன்பன்);

சடையானே - சடையை உடையவனே;

இலை மலி வேலினோடு கனல்-மழுவாளும் மானும் இலகிடு தீயும் ஏறும் உடையானே - திரிசூலம், ஒளிவீசும் மழு, மான், திகழ்கின்ற நெருப்பு, இடபவாகனம் இவற்றையெல்லாம் உடையவனே; (இலகுதல் - விளங்குதல்); (ஏறு - எருது); (சம்பந்தர் தேவாரம் - 1.11.1 - "படையார் மழுவுடையான் பல பூதப்படை யுடையான்");

எழில்-மட-மாதரார்கள் அவர் மனை-வாயில் ஏகி இடுபலி தேரும் ஈச - அழகிய மங்கையர்களது வீட்டு-வாயிலில் சென்று பிச்சையேற்கும் ஈசனே; (ஏகுதல் - போதல்); (இடுபலி - பிச்சை);

திருவாளா - திருவுடையவனே;

வலைஞனும் வீர-வேடன் வடிவமும் வேடம் ஆகும் மறைமுதலே - மீனவன் வடிவமும் வீரமுடைய வேடன் வடிவமும் உன் திருக்கோலமாக ஏற்றவனே, வேதநாயகனே; (வலைஞன் - மீனவன்); (வேடம் - வேஷம் - கோலம்); (* வலைஞன் - திருவிளையாடற்புராணத்தில் 57. வலை வீசின படலம் காண்க); (* வேடன் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளிய சமயத்தில் ஏற்ற கோலம்);

பராவு சுரர் வாழ வரி-சிலையாக மேருவரை-கொடு போர்செய் தீ - போற்றிய தேவர்கள் உய்யும்படி, (நாண்) கட்டிய வில்லாக மேருமலையை ஏந்திப் போர் செய்த வீரனே; (பராவுதல் - புகழ்தல்); (வரித்தல் - கட்டுதல்); (சிலை - வில்); (வரை - மலை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (தீரன் - வீரன்);

மதில் அணி காழி மேய பெருமானே - மதிலால் சூழப்பெற்ற சீகாழியில் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment