Saturday, August 22, 2026

T.243 - ஒற்றியூர் - செற்றக் குற்ற

2020-07-17

T.243 - ஒற்றியூர் - செற்றக் குற்ற

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சிபுரம்)


செற்றக் குற்றக் .. குணனாகித்

.. திட்டித் துக்கித் .. துழலாமல்

அற்றைப் புட்பத் .. தொடுநாளும்

.. அர்ச்சிக் கக்கற் .. றிடுவேனோ

வெற்றுச் சொற்கட் .. டுரைவீணர்

.. விட்டுப் பத்தர்க் .. கருள்நேயா

ஒற்றிச் செக்கர்ச் .. சடையானே

.. ஒற்றைப் பெற்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

செற்றக் குற்றக் குணன் ஆகித்

.. திட்டித் துக்கித்து உழலாமல்,

அற்றைப் புட்பத்தொடு நாளும்

.. அர்ச்சிக்கக் கற்றிடுவேனோ;

வெற்றுச்சொற் கட்டுரை வீணர்

.. விட்டுப் பத்தர்க்கு அருள் நேயா;

ஒற்றிச் செக்கர்ச் சடையானே;

.. ஒற்றைப் பெற்றப் பெருமானே.


செற்றக் குற்றக் குணன் ஆகித் - கோபம் என்ற குற்றம் உடைய குணத்தை உடையவன் ஆகி; (செற்றம் - சினம்); (குற்றம் - பிழை; பழி); (குணன் - குணமுடையன்);

திட்டித் துக்கித்து உழலாமல் - அதனால் எப்பொழுதும் பிறரை ஏசித் துக்கமுற்று வாடாமல்; (துக்கித்தல் - துக்கப்படுதல்; மனம் வருந்துதல்);

அற்றைப் புட்பத்தொடு நாளும் அர்ச்சிக்கக் கற்றிடுவேனோ - அன்று பூத்த புதுமலர்களால் (நாண்மலரால்) தினமும் உன் திருவடியை அருச்சித்து வழிபடக் கற்பேனோ; அருள்வாயாக; (அற்றை - அன்று); (புட்பம் - புஷ்பம் - பூ); (அப்பர் தேவாரம் - 4.107.1 - "மருட்டுயர் தீர அன்றர்ச்சித்த மாணி");

வெற்றுச்சொற்-கட்டுரை வீணர் விட்டுப் பத்தர்க்கு அருள் நேயா - பொருளற்ற சொற்களால் ஆன பொய்களைப் பேசும் வீணர்களுக்கு அருளாமல் பக்தர்களுக்கு அருள்கின்ற அன்பனே; (வெற்றுச்சொற் கட்டுரை வீணர் - வெற்றுச்சொல் வீணர் & கட்டுரை வீணர் என்று தனித்தனியேவும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்); (வெற்றுச்சொல் - பொருளற்ற சொல்); (கட்டுரை - பொய்); (விடுதல் - நீங்குதல்; தவிர்தல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்

நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்");

ஒற்றிச் செக்கர்ச் சடையானே - திருவொற்றியூரில் உறைகின்ற செஞ்சடையானே; (செக்கர் - சிவப்பு); (பெரியபுராணம் - மூர்த்திநாயனார் புராணம் - 12.15.15 - "செக்கர்ச் சடையார் விடையார்");

ஒற்றைப் பெற்றப் பெருமானே - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (ஒற்றை - ஒப்பின்மை); (பெற்றம் - எருது);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment