2020-06-19
P.508 - மயிலாடுதுறை
--------------
(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)
(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")
1)
முதிரா மதிசேர் முடியிற் புனலார்
நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்
மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்
பதியே பழவல் வினைதீர்த் தருளே.
முதிரா மதி சேர் முடியில் புனல் ஆர் நதியாய் - இளந்திங்களை அணிந்த திருமுடியில் நீர் மிகுந்த கங்கையையும் தரித்தவனே;
நரை-வெள்-விடை ஊர்தியினாய் - மிகவெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");
மதில் சூழ்ந்து அழகு ஆர் மயிலாடுதுறைப் பதியே - மதிலால் சூழப்பெற்ற அழகிய மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே;
பழ வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;
2)
அணியா அரவம் புனைவாய் அடியைப்
பணிவா னவருக் கருளும் பரமா
மணிகோ புரமார் மயிலா டுதுறைத்
துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.
அணியா அரவம் புனைவாய் - ஆபரணமாகப் பாம்பை அணிந்தவனே; யாரும் அணியாத பாம்பை அணிந்தவனே; (அணியா - 1. அணியாக; 2. அணியாத);
அடியைப் பணி வானவருக்கு அருளும் பரமா - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு அருளிய பரமனே;
மணி-கோபுரம் ஆர் மயிலாடுதுறைத் - அழகிய கோபுரம் பொருந்திய மயிலாடுதுறையில் உறைகின்ற; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 6.16.5 - "மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின்றாரும்");
துணி-மா மதியாய் - அழகிய பிறையைச் சூடியவனே; (துணி - துண்டம்);
துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;
3)
வளைமே ருவிலால் மதிலெய் தவனே
தளரா முலையாள் தழுவும் தலைவா
வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை
இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.
வளை-மேரு-விலால் மதில் எய்தவனே - வளைத்த மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (விலால் - வில்லால்);
தளரா-முலையாள் தழுவும் தலைவா - தளராத முலைகளையுடைய உமாதேவி தழுவும் கணவனே;
வளம் ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை - வளம் மிக்க சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற;
இள-மால்-விடையாய் - இளைய பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே; (மால் - பெரிய);
இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
4)
அழலார் சடையாய் அதளா டையினாய்
குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்
மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்
குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.
அழல் ஆர் சடையாய் - தீப் போலும் செஞ்சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
அதள்-ஆடையினாய் - தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்);
குழை ஆர் செவியாய் - காதில் குழையை அணிந்தவனே;
கொடிமேல் விடையாய் - இடபக்கொடியை உடையவனே;
மழை சேர் பொழில் சூழ் மயிலாடுதுறைக் குழகா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற குழகனே; (மழை - மேகம்); (குழகன் - இளையோன்; அழகன்);
தொழுதேன் குறை தீர்த்து அருளே - உன்னை வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;
5)
பெண்டங் கியமே னியுடைப் பெருமான்
அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்
வண்டின் னிசைசெய்ம் மயிலா டுதுறைக்
கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.
பெண் தங்கிய மேனியுடைப் பெருமான் - உமை ஒருபக்கத்தில் தங்கிய திருமேனியை உடைய பெருமானே; (பெண்டங்கிய - பெண் தங்கிய);
அண்டம் பல ஆக்கி ஒடுக்கிடுவாய் - பல அண்டங்களையும் படைத்து ஒடுக்குபவனே;
வண்டு இன்னிசைசெய்ம் மயிலாடுதுறைக் - வண்டுகள் இன்னிசை பாடுகின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற;
கண்டம் கரியாய் - நீலகண்டனே;
கலி தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்);
6)
திரியும் புரமூன் றெரிசெய் தவனே
எரிவன் கருநஞ் சமுதுண் டவனே
வரிவண் டறையும் மயிலா டுதுறைப்
புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.
திரியும் புரம் மூன்று எரிசெய்தவனே - திரிந்த முப்புரங்களை எரித்தவனே;
எரி-வன்-கருநஞ்சு அமுது உண்டவனே - கொதிக்கின்ற (/ சுட்டெரிக்கும்) கொடிய கரிய ஆலகாலத்தை அமுதாக உண்டவனே;
வரிவண்டு அறையும் மயிலாடுதுறைப் - வரியுடைய வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற; (அறைதல் - ஒலித்தல்);
புரி-செஞ்சடையாய் - முறுக்கிய சிவந்த சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
புகல் தந்து அருளே - எனக்கு அடைக்கலம் தந்து அருள்வாயாக;
7)
நறையார் மலர்தூ வியமா ணிநலம்
உறவே நமன்மார் பிலுதைத் தவனே
மறைநா வினனே மயிலா டுதுறை
இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.
நறை ஆர் மலர் தூவிய மாணி நலம் உறவே நமன் மார்பில் உதைத்தவனே - வாசமலர்களைத் தூவி வழிபடு செய்த மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி இன்புறும்படி காலனை மார்பில் உதைத்தவனே; (நறை - வாசனை; தேன்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);
மறை-நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே; (வேதநாவா);
மயிலாடுதுறை இறைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற இறைவனே;
அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;
8)
மலைபேர் தசமா முகனார்த் தழவே
மலரார் கழலோர் விரலூன் றியருள்
மலையான் மருகா மயிலா டுதுறைத்
தலைவா துணைவா தமியேற் கருளே.
மலை பேர் தசமாமுகன் ஆர்த்து அழவே - கயிலைமலையைப் பெயர்த்த பத்துத்தலை இராவணன் அலறி அழும்படி; (ஆர்த்தல் - ஒலித்தல்);
மலர் ஆர் கழல் ஓர் விரல் ஊன்றியருள் - மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியருளிய; (ஆர்தல் - ஒத்தல்);
மலையான் மருகா - இமவானுக்கு மருகனே;
மயிலாடுதுறைத் தலைவா துணைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே, துணைவனே;
தமியேற்கு அருளே - கதியற்ற எனக்கு அருள்வாயாக;
9)
செழுமா மலரான் திருமாற் கரிதாய்
எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்
மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்
தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.
செழு-மா-மலரான் திருமாற்கு அரிது-ஆய் எழு சோதியனே - செழுமையான தாமரைமலரில் இருக்கு பிரமனுக்கும் திருமாலுக்குக் காண அரியதான ஜோதிவடிவில் உயர்ந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.120.9 - "கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்");
இடும் ஊண் மகிழ்வாய் - (பிச்சையாக) இடும் உணவை விரும்பியவனே;
மழுவாட் படையாய் - மழுவாளை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);
மயிலாடுதுறைத் தொழுவார்க்கு இனியாய் - மயிலாடுதுறையில் உறைகின்றவனும் அன்பர்க்கு அன்பனும் ஆனவனே;
துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;
10)
இதமற் றதைநன் றெனவந் துரைசெய்
அதமர்க் கருளா தவனே அரனே
மதமா உரியாய் மயிலா டுதுறை
முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.
இதம் அற்றதை நன்று என வந்து உரைசெய் அதமர்க்கு அருளாதவனே - நன்மையற்றதை நல்ல நெறி என்று வீடுவீடாகச் சென்று உரைக்கின்ற கீழோர்க்கு அருள் இல்லாதவனே;
அரனே - ஹரனே;
மதமா உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "கரியுரியாய் காலகாலா");
மயிலாடுதுறை முதல்வா - மயிலாடுதுறையில் உறைகின்ற முதல்வனே;
முனை வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (முனை - முன்னை);
11)
நஞ்சார் மிடறா நசியா முதலே
பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா
மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை
மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.
நஞ்சு ஆர் மிடறா - ஆலகாலத்தை உண்டு அணிந்த கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);
நசியா முதலே - அழிவு இல்லாத முதற்பொருளே; (நசித்தல் - அழிதல்; சாதல்);
பஞ்சு ஏர் அடியாள் பிரியாப் பரமா - பஞ்சு போன்ற மென்மையான பாதம் உடைய உமை பிரியாத பரமனே; (ஏர்தல் - ஒத்தல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.10 - "பஞ்சேர் அடியாள் பாகத் தொருவா"); (திருவாசகம் - வாழாப்பத்து - 8.28.6 - "பஞ்சின் மெல்லடியாள் பங்க");
மஞ்சு ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை மஞ்சா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற வீரனே; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (திருவாசகம்-போற்றித் திருவகவல் - 8.4 - அடி-183- "மஞ்சா போற்றி மணாளா போற்றி");
பழ-வல்வினை மாய்த்து அருளே - என் பழைய வலிய வினையை அழித்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment