2020-06-22
N.060 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2020
-------------
1) --- (சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா) ---
கடைபாற் கடலின் விடமுண் மிடறன்
சடையிற் புனலன் தனையே குருவா
அடையும் புகழார் அருள்வா சக(ம்)நற்
படைநம் பழவல் வினைபாற் றிடுமே.
கடை பாற்கடலின் விடம் உண் மிடறன் - தேவர்கள் கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்ட கண்டன்; (மிடறு - கண்டம்);
சடையில் புனலன்-தனையே குருவா அடையும் புகழார் - சடையில் கங்கையை அணிந்த பெருமானையே குருவாக அடைந்த புகழை உடையவரான மாணிக்கவாசகர்; (புனல் - நீர்); (குருவா - குருவாக);
அருள்-வாசகம் நற்படை நம் பழ-வல்வினை பாற்றிடுமே - அருளிய திருவாசகம் நல்ல ஆயுதமாகி நம் பழைய வலிய வினைகளை அழிக்கும்; (படை - ஆயுதம்); (பாற்றுதல் - அழித்தல்);
2) --- (சந்த வஞ்சித்துறை - தனாதனா தனாதனா) ---
பெருந்துறைக் குருந்தடி
இருந்தரன் புரிந்தருள்
அருந்தவர் மொழிந்தன
மருந்துயிர்க் கருந்துமே.
பெருந்துறைக் குருந்து-அடி - திருப்பெருந்துறையில் குருந்தமரத்தின்கீழ்;
இருந்து அரன் புரிந்து அருள் - வீற்றிருந்து சிவபெருமான் விரும்பி அருளிய;
அரும்-தவர் மொழிந்தன - அரிய தவமுனிவரான மாணிக்கவாசகர் மொழிந்தனவான திருவாசகப் பாடல்கள்;
மருந்து உயிர்க்கு அருந்துமே - நம் உயிருக்கு அமுதம் ஆகும்; அருந்துங்கள் (திருவாசகத்தை ஓதி உய்யுங்கள்); (மருந்து - அமுதம்);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment