Friday, August 7, 2026

P.510 - பறியலூர் - கண்ணில் நீர் வார்தரக்

2020-06-20

P.510 - பறியலூர் (பரசலூர்)

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன்")

(இவை தமிழ்ச்சந்த இலக்கணப்படி அமைந்த பாடல்கள். இதனை ஒத்த அமைப்பை வடமொழியில் ஸ்ரக்விணீ (स्रग्विणी - sragviNI) என்று அழைப்பர். அச்யுதாஷ்டகம் இவ்வமைப்பே)


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்த வடிவம் காட்டப்பட்டுள்ளது. சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையை உணர்க.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை

விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்

வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்

பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


கண்ணில் நீர் வார்தரக் கைதொழும் பத்தரை விண்ணில் ஏற்றும் பரன் - கண்களில் நீர் கசியக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் பரமன்; (கண்ணினீர் - கண்ணின் நீர் / கண்ணில் நீர்); (வார்தல் - ஒழுகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);

வெண்மதிக் கண்ணியான் - வெண்திங்களைக் கண்ணியாக முடியில் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

வண்ணம் ஆர் பூக்களில் மாந்தி வண்டு ஊதிடும் - அழகிய பூக்களில் மது உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற; (வண்ணம் - அழகு); (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);

பண் அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - இனிய இசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


2)

காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை

வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்

நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்

பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


காட்டில் ஆடும் கழல் கைதொழின் வல்வினை வீட்டி வான் நல்குவான் - சுடுகாட்டில் ஆடுகின்ற திருவடியைக் கைதொழும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைக் கொடுப்பான்; (கைதொழின் - கைதொழுதால்); (வீட்டுதல் - அழித்தல்);

வெண்குழைக் காதினன் - காதில் வெண்குழையை அணிந்தவன்;

நாட்டம் ஓர் மூன்றினான் - மூன்று கண்களை உடையவன்; (நாட்டம் - கண்);

நாடி வண்டு ஆர்த்திடும் பாட்டு அறாச் சோலை சூழ் பறியல் வீரட்டனே - தேனை விரும்பி வண்டுகள் ஒலிக்கும் இன்னிசை எப்பொழுதும் கேட்கின்ற சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


3)

உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்

அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்

செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.


உம்பரார் வேண்டவே உன்னிடாது ஐம்மலர் அம்பினால் தாக்கு வேள் அன்று நீறு ஆக்கினான் - தேவர்கள் வேண்டிக்கேட்கவும் சிறிதும் யோசியாமல் ஐந்து மலர்ப்பாணங்களால் தாக்கிய மன்மதனை அப்பொழுது சாம்பல் ஆக்கியவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);

செம்பிரான் - செம்மேனியன்;

வாள்-அரா திங்கள் சேர் சென்னியன் - கொடிய பாம்பையும் சந்திரனையும் திருமுடிமேல் ஒன்றாகச் சேர்த்தவன்; (வாள் - கொடிய);

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல் வீரட்டனே - அழகிய சோலை சூழ்ந்த திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


4)

சங்கரா சம்புவே தாணுவே தாதையே

அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்

பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்

பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.


"சங்கரா, சம்புவே, தாணுவே, தாதையே, அங்கணா" என்பவர்க்கு ஆரருள் செய்பவன் - "சங்கரனே, சம்புவே, ஸ்தாணுவே, தந்தையே, அருட்கண்ணனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு மிகவும் அருள்செய்பவன்; (சங்கரன் - நன்மை செய்பவன்); (சம்பு - சுகத்தைத் தருபவன்); (தாணு - அசைவற்றவன்); (தாதை - தந்தை); (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);

பொங்கு-அராத் தாரினன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;

பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையை உடைய புண்ணியமூர்த்தி;

பைங்கண் ஏறு ஏறினான் - அழகிய கண்களையுடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


5)

வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய

ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்

காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்

பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.


வேலனைப் பெற்றவன் - முருகனுக்குத் தந்தை;

வேதம் நான்கு ஓதிய ஆலன் - நான்கு வேதங்களையும் ஓதிய தட்சிணாமூர்த்தி; (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);

அக்கு ஆரம் ஆம் ஐயன் - எலும்பை மாலையாக அணிந்த தலைவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - ஹாரம் - மாலை);

முக்கண்ணினன் - மூன்று கண்களை உடையவன்;

காலனைக் காலினால் காய்ந்தவன் - காலனைக் காலால் உதைத்தவன்;

கைதொழும் பாலனைக் காத்தவன் - வழிபாடு செய்த மார்க்கண்டேயரைக் காத்துஅருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


6)

பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்

ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்

பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.


பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் - பெருந்துன்பம் தீரவேண்டிப் போற்றும் பக்தர்களைக் காப்பவன்; ("பேணிணார்க் காப்பவன்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - போர் செய்த கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்;

ஊர் இடும் பிச்சையே ஊண் எனக் கொண்டவன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையையே உணவாக உடையவன்; (ஊண் - உணவு);

பாரிடம் சூழ் பரன் - பூதகணங்கள் சூழ்ந்துள்ள பரமன்; (பாரிடம் - பூதம்);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


7)

சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்

தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்

காவலார் முப்புரம் வேவவே நக்கவன்

பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.


சே-அது ஏறும் சிவன் - இடபத்தை வாகனமாக உடைய சிவன்; (சே - எருது);

தெண்புனல் கொக்கு-தன் தூவல் ஆர் சென்னியன் - தெளிந்த நீர்க்கங்கையையும் கொக்கின் இறகையும் முடிமேல் அணிந்தவன்; (தூவல் - இறகு); (கொக்கின் இறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது);

காவல் ஆர் முப்புரம் வேவவே நக்கவன் - காவல் மிக்க முப்புரங்கள் வெந்து அழியும்படி சிரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாவை ஓர் பங்கினன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


8)

தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்

துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்

திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்

பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.


தக்கது ஒன்று ஓர்கிலான் தான் வரைக்கீழ் மிகத் துக்கமுற்று ஆர்த்து அழத் தூ-விரல் வைத்தவன் - செய்யத்-தக்கது ஒன்றையும் எண்ணாதவனான இராவணன் அவன் கயிலைமலைக்கீழே மிகவும் துக்கமடைந்து கத்தி அழும்படி தூய விரல் ஒன்றை ஊன்றியவன்; (ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

திக்கு-எலாம் ஆடை ஆம் சீர்த்தியன் - திக்குகளே ஆடையாகும் பெருமை உடையவன்; திகம்பரன்; (சீர்த்தி - புகழ்);

மேனியில் பக்கம் ஓர் பாவையான் - திருமேனியில் ஒரு பக்கம் உமையைப் பங்காக உடையவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


9)

கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா

அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்

பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.


கந்தம் ஆர் போதனும் கண்ணனும் காண்கிலா அந்தம் இல் சோதியான் - மணம் மிக்க தாமரைமலரில் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் காண ஒண்ணாத எல்லையற்ற ஒளிவடிவினன்; (போது - பூ);

ஐந்தொழில் செய்பவன் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்ரஹம்) என்ற பஞ்சகிருத்தியம் செய்பவன்;

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க்கு அன்பினன் - தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு அன்புடையவன்;

பந்தம் இல் பாங்கினான் - எவ்விதப் பந்தமும் இல்லாதவன்; (பாங்கு - இயல்பு);

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


10)

ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்

பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்

காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்

பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.


ஆய்தலைச் செய்கிலா அந்தகர் - ஆராயாத குருடர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");

நீறு இடாப் பேய்மனப் பிட்டர் சொல் பேணிடேல் - திருநீற்றைப் பூசாதவர்களும் பேய் போன்ற மனம் உடையவர்களுமான பிரஷ்டர்கள் சொல்லை மதிக்கவேண்டா; (பிட்டர் - பிரஷ்டர் - புறம்பானவர்கள்);

காமனைக் காய் பவன் - மன்மதனை எரித்தவனும் பவன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்; (பவன் - என்றும் உள்ளவன்);

தாள்தொழும் பத்தரைக் காப்பவன் - தன் திருவடியை வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

பாய்புலித் தோலினான் - பாயும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


11)

பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்

தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்

மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்

பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.


பூத்திரள் கொண்டு தாள் போற்றிடாத் தக்கனார் தீத்தொழில் செற்றவன் - பூக்களால் திருவடியைப் போற்றாத தக்கன் செய்த அவவேள்வியை அழித்தவன்; (தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி); (செறுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 4.95.4 - "தீத்தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்");

செவ்வணன் - செம்மேனியன்;

மூவரின் மூத்தவன் - மும்மூர்த்திகளினும் முற்பட்டவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

முக்கணன் - நெற்றிக்கண்ணன்;

முன்னம் ஓர் அத்திரம் பார்த்தனுக்கு ஈந்தவன் - முன்பு அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;

பறியல் வீரட்டனே - திருப்பறியல் வீரட்டத்தில் உறைகின்ற பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment