2020-07-19
T.244 - முட்டம் - எப்பற்றும் ஏறி
(கோயம்புத்தூரின் மேற்கே 25 கிமீ தொலைவில் உள்ளது)
-------------
(வண்ணவிருத்தம்;
தத்தத்த தான .. தனதான)
(தத்தத் தனான தனதான - என்ற சந்தத்தை ஒத்தது. - பட்டுப் படாத மதனாலும் - திருப்புகழ் - பொது)
எப்பற்றும் ஏறி .. வரைமீறும்
.. இச்சைக்கு நாளும் .. உழலாமல்
பொய்ப்பற்று மாறி .. உனையோதும்
.. பொற்புற்று வாழ .. அருளாயே
எய்ப்புற்ற தேவர் .. அமுதார
.. இட்டத்தொ டாலம் .. அயில்நாதா
முப்பத்து மூவர் .. முதலானாய்
.. முட்டத்து மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
எப்பற்றும் ஏறி வரை மீறும்
.. இச்சைக்கு நாளும் உழலாமல்,
பொய்ப்பற்று மாறி, உனை ஓதும்
.. பொற்பு உற்று வாழ அருளாயே;
எய்ப்பு உற்ற தேவர் அமுது ஆர,
.. இட்டத்தொடு ஆலம் அயில்-நாதா;
முப்பத்துமூவர் முதல் ஆனாய்;
.. முட்டத்து மேய பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
எப்பற்றும் ஏறி வரை மீறும் இச்சைக்கு நாளும் உழலாமல் - எல்லாவிதமான பற்றுகளும் கூடி, எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்காகத் தினமும் உழன்று வருந்தாமல்; (பற்று - அபிமானம்; பந்தம்); (வரை - எல்லை; அளவு);
பொய்ப்பற்று மாறி, உனை ஓதும் பொற்பு உற்று வாழ அருளாயே - (விஷய-சுகங்களின்மேல் வைத்த பற்றான) இந்தப் பொய்ப்பற்றுகளெல்லாம் நீங்கி, உன்னை வழிபடும் பண்பு பெற்று வாழுமாறு எனக்கு அருள்வாயாக; (பொய்ப்பற்று - விஷய-சுகங்களின்மேல் வைத்த பற்று); (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (பொற்பு - தன்மை; அழகு); (உறுதல் - அடைதல்);
எய்ப்பு உற்ற தேவர் அமுது ஆர, இட்டத்தொடு ஆலம் அயில்-நாதா - மிகவும் வருந்திய தேவர்கள் அமுதை உண்ண, ஆலகாலத்தை விரும்பி உண்டருளிய தலைவனே; (எய்ப்பு - இளைப்பு; வருந்துதல்); (ஆர்தல் - உண்ணுதல்); (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (ஆலம் - ஆலகாலம்); (அயில்தல் - உண்தல்); (அப்பர் தேவாரம் - 6.1.7 - "அலைகடல்நஞ் சயின்றான் தன்னை");
முப்பத்துமூவர் முதல் ஆனாய் - முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் முதல்வனே; (முதல் - ஆதி; முதல்வன்);
முட்டத்து மேய பெருமானே - முட்டம் என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே; (முட்டம் - தலத்தின் பெயர்); ("முட்டத்து மேய" - இதனை ஒத்த பிரயோகம் - அப்பர் தேவாரம் - 6.85.1 - "திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன்");
பிற்குறிப்பு - தலக்குறிப்பு:
முட்டம் - முத்துவாளி அம்மன் சமேத நாகேஸ்வரர் கோயில். இத்தலம் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 25 கிமீ தூரத்தில், செம்மேடு என்ற ஊரின் அருகே உள்ளது. வெள்ளியங்கிரிமலை அடிவாரத்தில் இத்தலம் உள்ளது.
https://temple.dinamalar.com/New.php?id=2061 )
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment