Saturday, August 1, 2026

P.507 - காழி - அவமலி வேள்வியை

2020-06-18

P.507 - காழி (சீகாழி)

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)

(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

அவ(ம்)மலி வேள்வியை அன்றுசெய்து

தவறிழை தக்கனைத் தலையரிந்தான்

கவுணியர்க் கமுதருள் காழிநகர்ச்

சிவனடி இணைதனைச் சிந்திநெஞ்சே.


அவம் மலி வேள்வியை அன்று செய்து தவறு இழை தக்கனைத் தலை அரிந்தான் - முன்பு அவவேள்வி செய்து குற்றம் செய்த தக்கனது தலையை வெட்டித் தண்டித்தவன்; (அரிதல் - அறுத்தல்);

கவுணியர்க்கு அமுது அருள் காழிநகர்ச் சிவனடி இணைதனைச் சிந்தி நெஞ்சே - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை அளித்து அருளியவனும் சீகாழியில் உறைபவனுமான சிவபெருமானது இரு-திருவடிகளை, மனமே நீ எண்ணுவாயாக;


2)

வனமலர் வாளிவன் மதனழிய

அனலுமிழ் கண்ணனை அதிசயனைக்

கனலெரி ஏந்தியைக் காழிநகர்ப்

புனலணி சடையனைப் போற்றுநெஞ்சே.


வன-மலர் வாளி வன்-மதன் அழிய அனல் உமிழ் கண்ணனை - அழகிய மலரம்பை ஏவுகின்ற வலிய மன்மதன் அழியும்படி தீயை உமிழ்ந்த நெற்றிக்கண்ணனை; (வனம் - அழகு); (வாளி - அம்பு); (மதன் - காமன்);

அதிசயனை - அற்புதனை;

கனல்-எரி ஏந்தியைக் - கனல்கின்ற தீயைக் கையில் ஏந்தியவனை;

காழிநகர்ப் புனல் அணி சடையனைப் போற்று நெஞ்சே - சீகாழியில் உறைகின்றவனும் சடையில் கங்கையை அணிந்தவனுமான சிவபெருமானை, மனமே நீ போற்றுவாயாக;


3)

பொடியணி மேனியன் போர்விடையன்

கொடியிடை கூறமர் கொள்கையினான்

கடிமல ரான்தொழு காழிநகர்

அடிகளை அடிதொழ அறுமிடரே.


பொடி அணி மேனியன் - திருநீற்றை மேனிமேல் பூசியவன்;

போர்-விடையன் - போர்செய்யவல்ல இடபத்தை ஊர்தியாக உடையவன்;

கொடியிடை கூறு அமர் கொள்கையினான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

கடி-மலரான் தொழு காழிநகர் அடிகளை அடிதொழ அறும் இடரே - மணம் மிக்க தாமரைமேல் இருக்கும் பிரமனால் வழிபடப்பட்டவனும் சீகாழியில் உறைகின்றவனுமான சிவபெருமானை வணங்கினால் துன்பம் தீரும்; (கடி - வாசனை);


4)

இமையவர் அமுதுண இருள்மிடறன்

அமலையை ஒருபுறம் அமர்பெருமான்

கமலனுக் கருளிய காழிநகர்

விமலனைத் தொழுதெழ வினையறுமே.


இமையவர் அமுது உண இருள்-மிடறன் - தேவர்கள் அமுதம் உண்பதற்காக (நஞ்சை உண்ட) நீலகண்டம் உடையவன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

அமலையை ஒருபுறம் அமர் பெருமான் - தூயவளான உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய பெருமான்; (அமர்தல் - விரும்புதல்);

கமலனுக்கு அருளிய காழிநகர் விமலனைத் தொழுதெழ வினை அறுமே - தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனுக்கு அருளியவனும் சீகாழியில் உறைகின்ற தூயனுமான சிவபெருமானை வணங்கினால் வினைகள் தீரும்; (கமலன் - பிரமன்); (விமலன் - பரிசுத்தன்);


5)

விண்ணவர் தலைவனை வெண்மதியம்

தண்ணதி தாங்கிய சடையிறையைக்

கண்ணமர் நுதலனைக் காழிநகர்

அண்ணலை அடிதொழ அறுமிடரே.


விண்ணவர் தலைவனை - தேவர்கள் தலைவனை;

வெண்மதியம் தண்-தி தாங்கிய சடை இறையைக் - வெண்மையான சந்திரனையும் குளிர்ந்த கங்கையாற்றையும் சடையில் தாங்கிய இறைவனை;

கண் அமர் நுதலனைக் - நெற்றிக்கண்ணனை; (அமர்தல் -இருத்தல்); (நுதல் - நெற்றி);

காழிநகர் அண்ணலை அடிதொழ அறும் இடரே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானை வணங்கினால் துன்பம் தீரும்;


6)

வாரணம் உரிசெய்த மைந்தனருள்

காரணம் கொண்டுருக் காட்டிடுவான்

காரிகை பங்கனைக் காழிநகர்ச்

சீரனை ஏத்திடத் திருவருமே.


வாரணம் உரிசெய்த மைந்தன் - யானையைத் தோலுரித்த வீரன்; (வாரணம் - யானை); (மைந்தன் - வீரன்);

அருள்-காரணம் கொண்டு உருக் காட்டிடுவான் - அருளே காரணமாக பல வடிவங்களை ஏற்று அன்பர்களுக்குக் காட்சிதருபவன்; (அப்பர் தேவாரம் - 4.8.2 - "அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள்காரணத்தில் வருவார்" - அருள் காரணம் - உயிர்கட்கு இம்மை மறுமை வீடுபேறு எய்த அருளும் காரணம்);

காரிகை-பங்கனைக் - (அந்த) உமைபங்கனை; (காரிகை - பெண்);

காழிநகர்ச் சீரனை ஏத்திடத் திரு வருமே - சீகாழியில் உறைகின்றவனும் புகழ்உடையவனுமான சிவபெருமானைப் போற்றினால் திரு வந்தடையும்; (சீரன் - புகழுடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.10 - "ஆர(ம்) நாகமாம் சீரன் ஆலவாய்த்");


7)

மறையணி நாவனை வாளரவம்

பிறையணி சடையுடைப் பிஞ்ஞகனைக்

கறையணி கண்டனைக் காழிநகர்

இறைவனை ஏத்திட இடர்கெடுமே.


மறை அணி நாவனை - வேதங்களைப் பாடியருளியவனை;

வாள்-அரவம் பிறை அணி சடையுடைப் பிஞ்ஞகனைக் - கொடிய பாம்பையும் பிறையையும் சடையில் அணிந்த, பிஞ்ஞகன் என்ற திருநாமம் உடையவனை; (வாள் - கொடிய); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

கறை அணி கண்டனைக் - நீலகண்டனை;

காழிநகர் இறைவனை ஏத்திட இடர் கெடுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்;


8)

தடவரை ஏந்திய தசமுகனைப்

படவிரல் ஊன்றிய படர்சடையன்

கடல்விடம் உண்ணியைக் காழிநகர்க்

கடவுளைக் கைதொழ இடர்கெடுமே.


தட-வரை ஏந்திய தசமுகனைப் பட விரல் ஊன்றிய படர்-சடையன் - பெரிய கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கிய இராவணனை அவன் வருந்தும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய, படர்ந்த சடையை உடைய பெருமானை; (படுதல் - அழிதல்; வாடுதல்; துன்பமடைதல்); (அப்பர் தேவாரம் - 5.56.10 - "மடுத்து மாமலை ஏந்தலுற்றான்றனை அடர்த்து");

கடல்-விடம் உண்ணியைக் - பாற்கடலில் எழுந்த ஆலகாலத்தை உண்டவனை; (உண்ணி - உண்பவன்);

காழிநகர்க் கடவுளைக் கைதொழ இடர் கெடுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்;


9)

வேதனும் விண்டுவு(ம்) நண்ணரிய

பாதனை ஒண்மழுப் படையினனைக்

காதணி தோடனைக் காழிநகர்

நாதனை வாழ்த்திட நலிவறுமே.


வேதனும் விண்டுவும் நண்ணரிய பாதனை - பிரமன் திருமால் இவர்களால் அணுக ஒண்ணாத திருப்பாதம் உடையவனை; (வேதன் - பிரமன்); (விண்டு - விஷ்ணு); (11.32.49 - "விளவைத் தளர்வித்த விண்டுவுந் தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற");

ஒண்மழுப் படையினனைக் - ஒளியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவனை;

காது அணி தோடனைக் - காதில் அழகிய தோடு அணிந்தவனை; (தோடு அணிந்த செவியனை); (=அர்த்தநாரீசனை); (அணி - அழகிய);

காழிநகர் நாதனை வாழ்த்திட நலிவு அறுமே - சீகாழியில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றினால் துன்பம் தீரும்; (நலிவு - துன்பம்);


10)

பொய்யர்கள் மொழியவை பொருளலவே

மெய்யனை வெண்பொடி மேனியனைக்

கையினில் தீயனைக் காழிநகர்

ஐயனை அடிதொழ அறுமிடரே.


பொய்யர்கள் மொழி-அவை பொருள் அலவே - பொய்யுரைக்கும் புன்னெறியாளர் பேச்சுகள் பொருளற்றவை;

மெய்யனை - மெய்ப்பொருள் ஆனவனை;

வெண்பொடி மேனியனைக் - வெண்ணீற்றைப் பூசிய திருமேனி உடையவனை;

கையினில் தீயனைக் - கையில் தீயை ஏந்தியவனை;

காழிநகர் ஐயனை அடிதொழ அறும் இடரே - சீகாழியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் தீரும்;


11)

பவனவன் அடியவர் பரவுவணம்

அவனியில் வருபவன் அன்புருவன்

கவினுறு பொழிலணி காழிநகர்ச்

சிவனடி தொழுதெழத் திருவருமே.


பவன்-அவன் - பவன் என்ற திருநாமம் உடையவன்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);

அடியவர் பரவு-வணம் அவனியில் வருபவன் - பக்தர்கள் எப்படி வழிபடுகின்றார்களோ அப்படித் தோன்றி அருள்பவன்; (அவனி - பூமி); (வணம் - வண்ணம் - விதம்; வகை);

அன்பு-உருவன் - அன்பே வடிவானவன்;

கவினுறு பொழில் அணி காழிநகர்ச் சிவன் அடி தொழுதெழத் திரு வருமே - அழகிய சோலை சூழ்ந்த சீகாழியில் உறைகின்ற சிவபெருமான் திருவடியை வழிபட்டால் திரு வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment