Tuesday, August 25, 2026

T.245 - அம்பர் (அம்பல்) - வெஞ்சமரே புரி

2020-07-29

T.245 - அம்பர் (அம்பல்) - வெஞ்சமரே புரி

-------------

(வண்ணவிருத்தம்;

தந்தன தானன .. தனதான)

(அஞ்சன வேல்விழி மடமாதர் - திருப்புகழ் - தஞ்சை)


வெஞ்சம ரேபுரி .. வினையாலே

.. விண்தொடும் ஆசையின் .. விளைவாலே

அஞ்சிடு வேனென .. திடர்தீர

.. அங்கண னேயருள் .. புரியாயே

நஞ்சணி மாமிட .. றுடையானே

.. நங்கையை ஓர்புற(ம்) .. மகிழ்வானே

அஞ்சடை மேலிள .. மதிசூடீ

.. அம்பரில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

வெஞ்சமரே புரி வினையாலே,

.. விண் தொடும் ஆசையின் விளைவாலே,

அஞ்சிடுவேன் எனது இடர் தீர,

.. அங்கணனே, அருள் புரியாயே;

நஞ்சு அணி மா மிடறு உடையானே;

.. நங்கையை ஓர் புற(ம்) மகிழ்வானே;

அஞ்சடைமேல் இளமதி-சூடீ;

.. அம்பரில் மேவிய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

வெஞ்சமரே புரி வினையாலே - கொடிய போரே செய்யும் தீவினையால்; (சமர் - போர்);

விண் தொடும் ஆசையின் விளைவாலே - வானைத் தொடும் அளவு இருக்கும் அளவற்ற ஆசைகளின் விளைவால்; (விண்டொடும் - விண் தொடும்);

அஞ்சிடுவேன் எனது இடர் தீர - அஞ்சுகின்ற எனது துன்பம் தீருமாறு;

அங்கணனே, அருள் புரியாயே - அருள்நோக்கம் உடையவனே, அருள்வாயாக;

நஞ்சு அணி மா மிடறு உடையானே - ஆலகாலத்தை அணிந்த அழகிய கண்டத்தை உடையவனே;

நங்கையை ஓர் புற(ம்) மகிழ்வானே - உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பியவனே;

ஞ்சடைமேல் இளமதி சூடீ - அழகிய சடையின்மேல் இளந்திங்களைச் சூடியவனே; (அம் - அழகிய);

அம்பரில் மேவிய பெருமானே - அம்பர் என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment