2020-07-27
N.061 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2020
-------------
(வண்ணவிருத்தம்;
தத்ததன தானத் .. தனதான)
(இத்தரணி மீதிற் பிறவாதே - திருப்புகழ் - பொது)
முக்கணுடை ஆதிப் .. பெருமானே
.. முப்புரமும் வேவப் .. பொருதோனே
அக்கரவ மாலைத் .. திருமார்பா
.. அக்கமரு ளாஅப் .. பழிசேரும்
சொக்கவென வாடிப் .. புகழ்கூறும்
.. சொற்றமிழை ஓதிக் .. குறைதீர்வார்
அக்கயிலை நாதற் .. கொருதோழர்
.. அப்புனிதர் தாளைப் .. பணிவோமே.
பதம் பிரித்து:
"முக்கணுடை ஆதிப் பெருமானே;
.. முப்புரமும் வேவப் பொருதோனே;
அக்கு அரவ மாலைத் திருமார்பா;
.. அக்கம் அருளா அப்-பழி சேரும்
சொக்க" என வாடிப் புகழ் கூறும்
.. சொற்றமிழை ஓதிக் குறை தீர்வார்;
அக்-கயிலை நாதற்கு ஒரு தோழர்;
.. அப்-புனிதர் தாளைப் பணிவோமே.
"முக்கணுடை ஆதிப் பெருமானே - முக்கண்ணனே, ஆதியான பெருமானே;
முப்புரமும் வேவப் பொருதோனே - முப்புரங்களும் வெந்து சாம்பலாகும்படி போர்செய்தவனே; (பொருதல் - போர்செய்தல்);
அக்கு அரவ மாலைத் திருமார்பா - எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக மார்பில் அணிந்தவனே; (அக்கு - எலும்பு); (அரவம் - பாம்பு);
அக்கம் அருளா அப்-பழி சேரும் சொக்க" என - (என் வலக்)கண்ணை அருளாத அந்தப் பழி உன்னைச் சேரும் அழகனே" என்று; (அக்கம் - அக்ஷம் - கண்); (சொக்கன் - அழகன்; சிவன்); (சுந்தரர் தேவாரம் - 7.95.2 - "எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்"); (சுந்தரர் தேவாரம் - 7.95.11 - "பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்");
வாடிப் புகழ் கூறும் சொற்றமிழை ஓதிக் குறை தீர்வார் - மனம் வருந்தி, ஈசன் புகழைப் பாடும் சொல்மாலையான தேவாரம் பாடி, (இறைவன் அருளால்) தமது குறை நீங்கப்பெற்றவர்; (சொற்றமிழ் - சொல்+தமிழ் - சொற்களால் ஆன தமிழ்ப்பாமாலை);
அக்-கயிலை நாதற்கு ஒரு தோழர் - கயிலைநாதனுக்கு ஒப்பற்ற தோழர்; (அ - பண்டறிசுட்டு); (ஒரு - ஒப்பற்ற);
அப்-புனிதர் தாளைப் பணிவோமே - அந்தத் தூயவரான சுந்தரரது திருவடியை வணங்குவோம்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment