2020-05-29
M.078 - அடைவார் - பணிபல - மடக்கு
-----------------
அடைவார் மதியை அணிந்து நதியை
அடைவார் சடையுடை அண்ணல் - அடைவார்
பணிபல ஏற்றவர் பாவங்கள் தீர்ப்பான்
பணிபல பூண்ட பரன்.
சொற்பொருள்:
அடைவார் - 1. அடைவு ஆர்; 2. அடைத்த வார்; 3. அடைபவர்;
பணி - 1. தொண்டு; 2. நாகம்;
அடைவு ஆர் மதியை அணிந்து, நதியை அடை வார்-சடையுடை அண்ணல் - சரணடைந்த சந்திரனைப் புனைந்து, கங்கையை அடைத்த நீண்ட சடையை உடைய பெருமான்; (வார்தல் - நீள்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.7 - "அடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து");
அடைவார் பணி பல ஏற்று அவர் பாவங்கள் தீர்ப்பான் - தன்னைச் சரணடைந்தவர்கள் (பக்தர்கள்) செய்யும் தொண்டினை ஏற்று மகிழ்ந்து அவர்களது தீவினைகளைத் தீர்ப்பவன்; ("அடைவார் பணி பல ஏற்றவர்" = "அடியார்க்கு அடியார்" என்று பொருள்கொண்டு, "அடியார்க்கு அடியார் ஆனவர்களது பாவங்களைத் தீர்ப்பவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);
பணி பல பூண்ட பரன் - பல நாகங்களை அணிந்த பரமன்;
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment