2010-11-02
S.152 - சிவன் - சுந்தரர் - சிலேடை
-------------
பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர
மகிழ மரமடை வாக்குப் - புகலுங்கால்
என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்
குன்றவில்லி நாவலர் கோன்.
சொற்பொருள்:
பகிரங்கம் - 1. வெளிப்படை; 2. பகிர் அங்கம்;
பகிர் - பங்கு; பகிர்தல் - பங்கிடுதல்;
அங்கம் - உடல்;
பாவை - பெண்;
இடம் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. இடப்பக்கம்;
அடைதல் - சேர்தல்; அடைத்தல் - ஒளித்துவைத்தல் (hide);
வாக்கு - வாக்குத்தத்தம் (Promise);
பார் - 1. அறி; காண்; 2. உலகம்;
பரவை - 1. பரவைநாச்சியார் (சுந்தரரின் முதல்மனைவி); / 2. பரவு ஐ;
பரவுதல் - போற்றுதல்;
ஐ - தலைவன்;
இன் - 1. சாரியை / வேற்றுமை உருபு; / 2. இனிய;
துணைவன் - 1. கணவன்; / 2. உதவி செய்பவன்;
சுந்தரர்:
பகிரங்கமாக ஓர் பாவையிடம் சேர, "மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால்" என்றவர் பார் - சங்கிலியாரை ஊரறியத் திருமணம் செய்துகொள்ளவேண்டி, "நான் சத்தியம் செய்யும்பொழுது (சிவபெருமானே நீ) மகிழமரத்தில் போய் இரு" என்று சொன்னவர் காண்;
பரவையின் துணைவர் - பரவையாரின் கணவர்;
நாவலர்கோன் - திருநாவலூராளியான சுந்தரர்;
சிவன்:
பகிர்-அங்கமாக ஓர் பாவை இடம் சேர - பகிர்ந்துகொண்ட திருமேனியாகப் பார்வதி இடப்பக்கம் பொருந்த; (சம்பந்தர் தேவாரம் - 1.90.4 - அங்க(ம்) மாதுசேர் பங்கம் ஆயவன்);
(ஓர் பாவையிடம் சேர) மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால் என்றவர் = ஓர் பாவையிடம், "மகிழமரம் அடை, சேர வாக்குப் புகலுங்கால்" என்றவர் - சங்கிலியாரிடம் (அவர் கனவில் சென்று), "(சுந்தரர்) உன்னைச் சேரச் சத்தியம் செய்யும்பொழுது மகிழமரத்தை அடை" என்று சொன்னவர்; ("ஓர் பாவையிடம் சேர" - இந்தச் சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இப்படி இயைத்துப் பொருள்கொள்க);
பார் பரவு ஐ - உலகோர் எல்லாம் போற்றும் தலைவர்;
இன் துணைவர் - (அவ்வாறு போற்றும் பக்தர்களுக்கு) இனிய துணையாக இருப்பவர்;
ஒற்றி அமர் குன்றவில்லி - திருவொற்றியூரில் எழுந்தருளிய, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானார்; (ஒற்றி - திருவொற்றியூர்); (அமர்தல் - விரும்புதல்; உறைதல்); (குன்றவில்லி - மலையை வில்லாக உடையவன் - சிவபெருமான்);
பிற்குறிப்பு:
* சுந்தரர் தேவாரம் - 7.89.9
பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.
வி. சுப்பிரமணியன்
------------
No comments:
Post a Comment