Sunday, June 28, 2026

M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

2020-05-21

M.075 - செய்யானை - வண்டார் - மடக்கு

-----------------

செய்யானை நாகமதி சேர்த்தானை வந்துபோர்

செய்யானை செற்றானைத் தீமையொன்றும் - செய்யானை

வண்டார் குழல்மாதை வாம(ம்) மகிழ்ந்தானை

வண்டார் புனைந்தானை வாழ்த்து.


சொற்பொருள்:

செய்யானை - 1. செம்மேனியனை; 2. செய் ஆனை; 3. செய்யாதவனை;

வண்டார் - 1. வண்டு ஆர்; 2. வண் தார்;


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

செய்யானை - செம்மேனியனை; (செய் - செம்மை நிறம்);

நாக(ம்) மதி சேர்த்தானை - (திருமுடிமேல்) நாகத்தையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்த்தவனை;

வந்து போர் செய்-ஆனை செற்றானைத் - வந்து போரிட்ட யானையை அழித்தவனை; (செய்தல் - பண்ணுதல்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்);

தீமையொன்றும் செய்யானை - ஒரு தீமையும் செய்யாதவனை - புண்ணியனை; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை"); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

வண்டு ஆர் குழல் மாதை வாம(ம்) மகிழ்ந்தானை - வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வண்-தார் புனைந்தானை வாழ்த்து - அழகிய (கொன்றை)மாலை அணிந்தவனை வாழ்த்துவாயாக; (வண்மை - அழகு; வளப்பம்); (தார் - மாலை);


வி. சுப்பிரமணியன்

------------ ------------


No comments:

Post a Comment