2020-05-20
M.074 - காயாத - அப்பனை - மடக்கு
-----------------
காயாத வேணியனைக் கல்லெறிந்து போற்றிடினும்
காயாத கண்ணுதலை ஓத்தூரில் - காயாத
அப்பனை எல்லாம் அருங்குலை ஈனவருள்
அப்பனை நெஞ்சே அடை.
சொற்பொருள்:
காயாத - 1. உலராத; 2. கோபித்துக்கொள்ளாத; 3. காய்த்தல் இல்லாத;
காய்தல் - உலர்தல்; கோபித்தல்; எரித்தல்;
காய்த்தல் - மரம் முதலியன காய்களை உண்டாக்குதல்;
அப்பனை - 1. அந்தப் பனைமரங்கள்; 2. தந்தையை;
காயாத வேணியனைக் - வற்றாத கங்கை என்றும் தங்கிய சடையை உடையவனை; (வேணி - சடை; நதி);
கல் எறிந்து போற்றிடினும் காயாத கண்ணுதலை - கல்லை எறிந்து வழிபாடு செய்தாலும் அப்படித் தொழும் அன்பரைக் கோபித்துக்கொள்ளாமல் ( / சுட்டெரித்திட்டாமல்) அன்போடு அருள்கின்ற நெற்றிக்கண்ணனை; (* சாக்கிய நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
ஓத்தூரில் காயாத அப்-பனை எல்லாம் அரும்-குலை ஈன அருள் அப்பனை - திருவோத்தூரில் காய்த்தலற்ற அந்த ஆண்பனைகள் எல்லாம் உடனே அரிய குலைகளை ஈனுமாறு அருள்செய்த தந்தையை; (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை"; இந்தத் திருவோத்தூர்ப் பதிகத்தின் வரலாற்றைச் சம்பந்தர் புராணத்தில் பெரியபுராணத்தில் காண்க);
நெஞ்சே அடை - மனமே நீ அடைவாயாக;
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment