Wednesday, May 6, 2026

T.233 - பொது - மாமணப் பதங்கள்

2019-08-20

T. 233 - பொது - மாமணப் பதங்கள்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தனந்த .. தனதான)

(காமியத் தழுந்தி - திருப்புகழ் - சுவாமிமலை)


மாமணப் பதங்கள் .. திகழ்கோல

.. மாலையைப் பகர்ந்து .. பொடிபூசித்

தாமரைப் பதங்கள் .. மறவாது

.. சார்பவர்க் கிரங்கும் .. அருளாளன்

சோமனைப் புனைந்த .. சடைநாதன்

.. தோகையைப் புரைந்த .. உமைபாகன்

காமனைச் சினந்த .. கயிலாயன்

.. காலனைக் கடிந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மா-மணப்-பதங்கள் திகழ் கோல-

.. மாலையைப் பகர்ந்து, பொடி பூசித்,

தாமரைப்-பதங்கள் மறவாது

.. சார்பவர்க்கு இரங்கும் அருளாளன்;

சோமனைப் புனைந்த சடை-நாதன்;

.. தோகையைப் புரைந்த உமை-பாகன்;

காமனைச் சினந்த கயிலாயன்;

.. காலனைக் கடிந்த பெருமானே.


மாமணப் பதங்கள் திகழ் கோல- மாலையைப் பகர்ந்து, பொடி பூசித் - மிகவும் மணம் கமழும் சொற்கள் திகழும் அழகிய பாமாலைகளைச் சொல்லித், திருநீற்றை உடல்மேல் பூசி; (பதம் - சொல்); (பகர்தல் - சொல்தல்);

தாமரைப்-பதங்கள் மறவாது சார்பவர்க்கு இரங்கும் அருளாளன் - தாமரைமலர் போன்ற திருவடிகளை எந்நாளும் மறவாமல் புகலடைந்த பக்தர்களுக்கு இரங்கி அருள்பவன்; (பதம் - பாதம்); (சார்தல் - புகலடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.113.5 - "சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவன்");

சோமனைப் புனைந்த சடை-நாதன் - சந்திரனைச் சடைமேல் சூடிய நாதன்; (சோமன் - சந்திரன்); (புனைதல் - அணிதல்);

தோகையைப் புரைந்த உமை-பாகன் - மயில் போன்ற உமையை ஒரு பாகமாக உடையவன்; (தோகை - மயில்); (புரைதல் - ஒத்தல்);

காமனைச் சினந்த கயிலாயன் - மன்மதனைக் கோபித்து எரித்த கயிலைமலையான்;

காலனைக் கடிந்த பெருமானே - காலனை உதைத்து அழித்த பெருமான்; (கடிதல் - தண்டித்தல்; அழித்தல்); (- ஈற்றசை); (அப்பர் தேவாரம் - 4.63.10 - "காலனைக் கடிந்த எம்மான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment