2019-08-28
T.237 - ஆலவாய் (மதுரை) - காமம் ஏவ மாவாதை
-----------------
(வண்ணவிருத்தம்;
தான தான தானான தானத் .. தனதான)
(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)
காமம் ஏவ மாவாதை யேயுற் .. றுழலாது
.. காது காலன் மேல்வீசு தாளைக் .. கருதேனோ
தேம றாத பூவாளி வேளைச் .. சுடுவோனே
.. தேடும் ஆழி யான்வேத னார்கட் .. கரியானே
சாமம் ஓது நாவாவ ராவைக் .. கவினாரும்
.. தார தாக மார்மீது பூண்முத் .. தலைவேலா
நாம வேடு சூடேறு தீயிற் .. பொலிவேற
.. ஞான பாலர் சீர்பாடு கூடற் .. பெருமானே.
பதம் பிரித்து:
காமம் ஏவ மா-வாதையே உற்று உழலாது,
.. காது காலன்மேல் வீசு தாளைக் கருதேனோ?
தேம் அறாத பூ-வாளி வேளைச் சுடுவோனே;
.. தேடும் ஆழியான் வேதனார்கட்கு அரியானே;
சாமம் ஓது நாவா; அராவைக் கவின் ஆரும்
.. தாரதாக மார்மீது பூண்-முத்தலைவேலா;
நாம-ஏடு சூடு ஏறு தீயிற் பொலிவு ஏற
.. ஞானபாலர் சீர் பாடு கூடற் பெருமானே.
காமம் ஏவ மா-வாதையே உற்று உழலாது - ஆசைகள் உந்தப் பெருந்துன்பமே அடைந்து உழலாமல்; (வாதை - துன்பம்);
காது காலன்மேல் வீசு தாளைக் கருதேனோ - கொல்லும் காலன்மேல் வீசிய உன் திருவடியை விரும்பித் தியானிக்கும்படி அருள்வாயாக; (காதுதல் - கொல்லுதல்); (கருதுதல் - விரும்புதல்; எண்ணுதல்);
தேம் அறாத பூ-வாளி வேளைச் சுடுவோனே - வாசனை குன்றாத மலரம்பை உடைய மன்மதனைச் சுட்டெரித்தவனே; (தேம் - வாசனை); (அறாத - குன்றாத; தீராத); (வாளி - அம்பு);
தேடும் ஆழியான் வேதனார்கட்கு அரியானே - தேடிய திருமால் பிரமன் இவர்களால் அடையப்படாதவனே; (ஆழியான் - பாற்கடல்மேல் துயிலும் திருமால்);
சாமம் ஓது நாவா - சாமவேதத்தை ஓதியவனே;
அராவைக் கவின் ஆரும் தார்அது ஆக மார்மீது பூண்-முத்தலைவேலா - பாம்பை அழகிய மாலையாகத் திருமார்பின்மேல் அணிந்த, திரிசூலம் ஏந்தியவனே; (கவின் - அழகு); (தார் - மாலை); (முத்தலைவேல் - திரிசூலம்);
நாம-ஏடு சூடு ஏறு தீயிற் பொலிவு ஏற ஞானபாலர் சீர் பாடு கூடற்-பெருமானே - உன் திருநாமத்தைத் தாங்கிய திருப்பதிக-ஏடு நெருப்பில் சாம்பலாகாமல் இன்னும் பொலிவு கூடும்படி (ஞானப்பாலை உண்ட, ஞானச்சிறுவரான) திருஞான சம்பந்தர் உன் புகழ் பாடிய மதுரையில் எழுந்தருளிய பெருமானே; (ஞான பாலர் - 1. ஞானச்சிறுவர்; 2. "ஞானப் பாலர்" - ஞானப்பாலை உண்டவர்; ஓசை கருதி, "ப்" மிகாது வந்தது); (சீர் - புகழ்; பெருமை); (கூடல் - மதுரை);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment