Tuesday, May 12, 2026

T.236 - ஆடானை - ஆரவார மாவாரி

2019-08-24

T.236 - ஆடானை - ஆரவார மாவாரி

-----------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான)

(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)


ஆர வார மாவாரி சூழிப் .. புவிவாழ்வில்

.. ஆசை யாகி நான்நீடு வாடிச் .. சுழலாது

வாரம் ஆர நாடோறும் ஓதிப் .. பணிதூயர்

.. மாடு நாடி மாவானில் ஏறற் .. கருளாயே

நீரின் ஓசை ஓயாத கோலச் .. சடைமீது

.. நீணி லாவ ராவோடு போதைப் .. புனைவோனே

சூரன் வீழ வேலேவு வேளைத் .. தருவோனே

.. சோலை சூழும் ஆடானை ஆடற் .. பெருமானே


பதம் பிரித்து:

ஆரவார மா-வாரி சூழ் இப்-புவி-வாழ்வில்

.. ஆசையாகி நான் நீடு வாடிச் சுழலாது,

வாரம் ஆர நாள்தோறும் ஓதிப் பணி தூயர்

.. மாடு நாடி, மா-வானில் ஏறற்கு அருளாயே;

நீரின் ஓசை ஓயாத கோலச் சடைமீது

.. நீள்நிலா அராவோடு போதைப் புனைவோனே;

சூரன் வீழ வேல் ஏவு வேளைத் தருவோனே;

.. சோலை சூழும் ஆடானை ஆடற்பெருமானே.


ஆரவார மா வாரி சூழ் இப்-புவி-வாழ்வில் ஆசையாகி நான் நீடு வாடிச் சுழலாது - பேரொலி உடைய பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்து-வாழ்வில் ஆசைகொண்டு நான் பன்னாள் வருந்தி மனம்கலங்கிப் பிறவிகளில் சுழலாதபடி; (நீடு - நெடுங்காலம்); (சுழல்தல் - சஞ்சலப்படுதல்; சுற்றுதல்);

வாரம் ஆர நாள்தோறும் ஓதிப் பணி தூயர் மாடு நாடி, மா வானில் ஏறற்கு அருளாயே - அன்பு மிகத் தினமும் உன்னைப் போற்றி வணங்கும் தூயவர்கள் இடம் நாடி உய்ந்து சிவலோகம் சேர அருள்வாயாக; (வாரம் - அன்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (மாடு - பக்கம்; செல்வம்); (நாடுதல் - அடைதல்; விரும்புதல்); ("தூயர் மாடு நாடி" - 1. தூயோர்களான அடியார்-குழாத்தை அடைந்து; 2. அடியார்-குழாம் என்ற செல்வத்தை விரும்பி);

நீரின் ஓசை ஓயாத கோலச் சடைமீது நீள்நிலா அராவோடு போதைப் புனைவோனே - கங்கை என்றும் ஒலிக்கும் அழகிய சடையின்மேல் பிறை, பாம்பு, மலர்கள் இவற்றை அணிபவனே; (அரா - பாம்பு); (போது - பூ);

சூரன் வீழ வேல் ஏவு வேளைத் தருவோனே - சூரபதுமன் அழியும்படி வேலை ஏவிய முருகனைப் ஈன்றருளியவனே;

சோலை சூழும் ஆடானை ஆடற்பெருமானே - சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment