2019-10-11
M.072 - தொண்டை - அணிமையா - மடக்கு
-----------------
தொண்டை அனவாயாள் பங்கன் சுடுபொடியன்
தொண்டை நினையார்க்குத் தூரத்தான் - தொண்டை
அணிமையா ஏறேறும் ஐயாவென் பார்கட்(கு)
அணிமையா உள்ளான் அவன்.
சொற்பொருள்:
தொண்டை - 1. கொவ்வை; 2. தொண்டு+ஐ - தொண்டினை; 3. மிடறு (கண்டம்);
அணிமையா - 1. அணி மையா (அழகிய மையனே); 2. அணிமையா - அணிமையாக (சமீபமாக);
தொண்டை அன வாயாள் பங்கன் - கொவ்வைக்கனி போன்ற செவ்வாயை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
சுடுபொடியன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன்;
தொண்டை நினையார்க்குத் தூரத்தான் - திருத்தொண்டுகளை எண்ணாதவர்களுக்கு மிகத் தூரத்தே உள்ளவன்; (= திருத்தொண்டுகள் செய்ய நினையாதவர்களால் அடைய ஒண்ணாதவன்);
"தொண்டை அணி மையா - "கண்டத்தில் அழகிய கறுப்பை உடையவனே (நீலகண்டனே); (அணி - அழகு); (மை - கருநிறம்);
ஏறு ஏறும் ஐயா" என்பார்கட்கு அணிமையா உள்ளான் அவன் - இடபவாகனனே" என்று போற்றும் அடியார்களுக்கோ அவன் மிகவும் பக்கத்தில் உள்ளவன்; (என்பார்கட்கு - என்பவர்களுக்கோ; ஓகாரம் தொக்கது);
வி. சுப்பிரமணியன்
------------ ------------
No comments:
Post a Comment