Wednesday, May 6, 2026

T.223 - வலிவலம் - அறவினை ஏதும்

2019-07-16

T.223 - வலிவலம் - அறவினை ஏதும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான)

(இருமலு ரோக - திருப்புகழ் - திருத்தணிகை)

(அகரமு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


அறவினை ஏது(ம்) நினைதலி லாமல்

.. .. அனுதினம் ஆடி .. அதனாலே

.. அவனியில் நாளும் இடர்மிக வாடி

.. .. அருவினை கூடி .. வயதாகி

மறலியு(ம்) மேதி அதன்மிசை ஏறி

.. .. வலிமிகு பாசம் .. எறியாமுன்

.. மலரவை தூவி உனதிரு பாதம்

.. .. வழிபடு ஞானம் .. அருளாயே

கறையணி கோல மிடறுடை ஈச

.. .. கனவிடை ஊர்தி .. உடையானே

.. கருதலர் ஊர்கள் அழிதரு மாறு

.. .. கணைதனை ஏவு .. சிலையானே

மறையவை நாலும் உரைசெயு(ம்) நாத

.. .. வரியர வேறு(ம்) .. மணிமார்பா

.. மண(ம்)மலி சோலை வளவயல் ஆரும்

.. .. வலிவல(ம்) மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

அறவினை ஏது(ம்) நினைதல் இலாமல்

.. .. அனுதினம் ஆடி .. அதனாலே

.. அவனியில் நாளும் இடர் மிக வாடி,

.. .. அருவினை கூடி, .. வயதாகி,

மறலியு(ம்) மேதி அதன்மிசை ஏறி

.. .. வலிமிகு பாசம் .. எறியாமுன்,

.. மலரவை தூவி உனது இரு-பாதம்

.. .. வழிபடு ஞானம் .. அருளாயே;

கறை அணி கோல மிடறுடை ஈச;

.. .. கன-விடை ஊர்தி .. உடையானே;

.. கருதலர் ஊர்கள் அழிதருமாறு

.. .. கணைதனை ஏவு .. சிலையானே;

மறையவை நாலும் உரைசெயு(ம்) நாத;

.. .. வரியரவு ஏறு(ம்) .. மணிமார்பா;

.. மண(ம்)மலி சோலை வளவயல் ஆரும்

.. .. வலிவல(ம்) மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

அறவினை ஏதும் நினைதல் இலாமல் அனுதினம் ஆடி அதனாலே - நற்செயல் எதுவும் செய்ய எண்ணாமல் என்றும் வீணே செயல்கள் செய்து, அதனால்;

அவனியில் நாளும் இடர் மிக, வாடி, அருவினை கூடி, வயதாகி - பூமியில் (இந்தப் பிறவியில்) என்றும் துன்பமே மிக, வருந்தித், தீர்த்தற்கு அரிய வினைகள் பெருகி, முதுமையடைந்து;

மறலியும் மேதி அதன்மிசை ஏறி வலி மிகு பாசம் எறியாமுன் - காலனும் எருமைமேல் ஏறி (என்னை நெருங்கி) வலிமை மிகுந்த பாசத்தை வீசுவதன் முன்பே;

மலரவை தூவி உனது இரு-பாதம் வழிபடு ஞானம் அருளாயே - பூக்கள் தூவி உன் இரு-திருவடிகளை வழிபடும் அறிவை அருள்வாயாக;

கறை அணி கோல மிடறுடை ஈச - கறையை அணிந்த அழகிய கண்டம் உடைய ஈசனே;

கனவிடை ஊர்தி உடையானே - பெரிய இடபவாகனம் உடையவனே;

கருதலர் ஊர்கள் அழிதருமாறு கணைதனை ஏவு சிலையானே - பகைவர்களது முப்புரங்களும் அழியும்படி ஒரு கணையை எய்த வில்லை ஏந்தியவனே; (கருதலர் - பகைவர்); (தருதல் - ஒரு துணைவினை); (சிலை - வில்);

மறையவை நாலும் உரைசெயும் நாத - நான்மறைகளைப் பாடியருளிய நாதனே; நால்வேதங்களும் போற்றும் தலைவனே;

வரியரவு ஏறு(ம்) மணிமார்பா - வரிகள் திகழும் பாம்பைப் பவளம் போன்ற மார்பில் அணிந்தவனே; (மணி - பவளம்; அழகு);

மண(ம்) மலி சோலை வளவயல் ஆரும் வலிவலம் மேய பெருமானே - வாசனை மிகுந்த சோலையும் வளம் மிகுந்த வயலும் சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment