2019-08-03
N.057 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2019
----------------
1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----
ஆவண மொன்றால் ஆரூர்த்
தீவண னுக்கடி யவரொரு சீர்திகழ் தோழர்
நாவல ஊரர் மணமார்
சேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே.
ஆவணம் ஒன்றால் ஆரூர்த் தீவணனுக்கு அடியவர் - தீப் போன்ற செம்மேனியை உடைய திருவாரூர்ப் பெருமானுக்கு ஓர் ஓலையால் அடிமை ஆனவர்; (ஆவணம் - உரிமைப்பத்திரம்);
ஒரு சீர் திகழ் தோழர் - ஒப்பற்ற புகழ் திகழும் தம்பிரான் தோழர்;
(குறிப்பு : இப்பாடலில் அடி-2-இல் 4, 5-ஆம் சீர்கள் புணர்ச்சியோடு நோக்கின், "சீர்திக டோழர்" என்று அமைந்து கந்தபத்ய இலக்கணத்தை மீறாமல் வரும். "சீர்திக டோழர் = சீர் திகழ் தோழர்"; சம்பந்தர் தேவாரம் - 3.86.10 - "முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி
திகடரு சடைமுடி" என்ற சொற்றொடரில் "முகிடரு - முகிழ்தரு", "திகடரு - திகழ்தரு" என்ற இடங்களில் இப்புணர்ச்சியைக் காணலாம்);
நாவல ஊரர் - திருநாவலூரில் அவதரித்தவர்;
மணம் ஆர் சேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே - சுந்தரமூர்த்தி நாயனாரது மணம் பொருந்திய சிவந்த திருவடியை வழிபட்டால் நம் வினைகள் தீர்வது நிச்சயம்;
2) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----
செங்கல் செம்பொன் னாகிட
அங்கட் பெருமான் அருளிட அகமகி ழன்பர்
துங்கத் தமிழுரை சுந்தர
ரங்கழ லிணைதனை வழிபட அருவினை அறுமே.
செங்கல் செம்பொன் ஆகிட அங்கட் பெருமான் அருளிட அக(ம்)மகிழ் அன்பர் - திருப்புகலூரில் செங்கல் செம்பொற்கல் ஆகுமாறு அங்கண் உடைய பெருமான் அருள்புரியவும் உள்ளம் மகிழ்ந்த அன்பர்; (சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்" - என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
துங்கத்-தமிழ் உரை சுந்தரர் அம்-கழலிணைதனை வழிபட அருவினை அறுமே - தூய உயர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடியருளிய சுந்தரமூர்த்தி நாயனாரது அழகிய இரு-திருவடிகளை வணங்கினால் தீவினைகள் அழியும்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment