2019-10-25
P.488 - அதிகை (திருவதிகை)
--------------------
(கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா;
தானனா என்பது தனதனா / தானன / தனதன என்றும் சில சீர்களில் வரும்)
(விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - "முன்னைநான் மறையவை")
(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")
* (x) - புணர்ச்சி பிரித்த வடிவம்;
1)
தாரணி மார்பினில் தையலோர் பங்கினன்
கூரணி மழுவினன் கொல்புலித் தோலினன்
நீரணி சடையினன் நீள்மதில் அவைபட
ஆரழல் மூட்டினான் அதிகைவீ ரட்டனே.
தார் அணி மார்பினில் தையல் ஓர் பங்கினன் - மாலை அணிந்த மார்பில் உமையை ஒரு பங்காக உடையவன்;
கூர் அணி மழுவினன் - கூர்மை பொருந்திய மழுவை உடையவன்;
கொல்புலித் தோலினன் - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;
நீர் அணி சடையினன் - சடையில் கங்கையை அணிந்தவன்;
நீள்மதில் அவை பட ஆரழல் மூட்டினான் - பெரிய முப்புரங்கள் அழியும்படி அவற்றைத் தீப் புகச் செய்தவன்; (படுதல் - அழிதல்);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
2)
இரண்டென ஒன்றென எட்டென ஆயவன்
சரண்புகும் அடியவர் தம்வினை தீர்ப்பவன்
முரண்படும் அசுரர்கள் மூவரின் கூட்டமார்
அரண்பட எய்தவன் அதிகைவீ ரட்டனே.
இரண்டு என ஒன்று என எட்டு என ஆயவன் - ஏகன், சிவம் சக்தி, அட்டமூர்த்தி என்றெல்லாம் வடிவங்கள் உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.42.7 - "உமை பங்கனார் எட்டும் ஒன்றும் இரண்டுமூன் றாயினார்");
சரண்புகும் அடியவர்தம் வினை தீர்ப்பவன் - சரண்புகுந்த பக்தர்களது வினைகளைத் தீர்ப்பவன்;
முரண்படும் அசுரர்கள் மூவரின் கூட்டம் ஆர் அரண் பட எய்தவன் - பகைத்த மூன்று அசுரர்களது கூட்டங்கள் பொருந்திய முப்புரங்களும் அழியும்படி ஒரு கணை எய்தவன்;
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
3)
வம்பவிழ் மலர்கொடு மலரடி போற்றினார்
வெம்பவ நோய்தனை வீட்டிடும் எம்பிரான்
உம்பர்கள் தலைமகன் ஒன்னலர் புரமெரி
அம்பினை எய்தவன் அதிகைவீ ரட்டனே.
வம்பு அவிழ் மலர்கொடு மலரடி போற்றினார் வெம்-பவநோய்தனை வீட்டிடும் எம்பிரான் - வாசனை கமழும் பூக்களால் மலர்த்திருவடியை வழிபட்ட பக்தர்களது கொடிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் எம்பெருமான்; (வம்பு - வாசனை);
உம்பர்கள் தலைமகன் - தேவர்கள் தலைவன்;
ஒன்னலர் புரம் எரி அம்பினை எய்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (ஒன்னலர் - பகைவர்);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
4)
பரவிய அடியவர் படுதுயர் தீர்ப்பவன்
குரவொடு கூவிளம் குஞ்சியிற் சூடினான்
விரவலர் முப்புரம் வெந்தற வில்லினில்
அரவினை ஆர்த்தவன் அதிகைவீ ரட்டனே.
பரவிய அடியவர் படுதுயர் தீர்ப்பவன் - துதிக்கும் அடியார்களது பெருந்துன்பத்தைத் தீர்ப்பவன்; (படுதுயர் - 1. கொடிய துன்பம்; 2. அனுபவிக்கின்ற துன்பம்);
குரவொடு கூவிளம் குஞ்சியில் சூடினான் - தலையில் குராமலர், வில்வம் இவற்றைச் சூடியவன்;
விரவலர் முப்புரம் வெந்து அற வில்லினில் அரவினை ஆர்த்தவன் - பகைவர்களது முப்புரங்கள் வெந்து அழியும்படி வில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்; (விரவலர் - பகைவர்); (ஆர்த்தல் - கட்டுதல்);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
5)
கழலிணை தொழுதவர் கவலைகள் தீர்ப்பவன்
மழவிடை ஊர்தியன் மார்பினில் நூலினன்
குழைதிகழ் காதினன் கூடலர் முப்புரம்
அழல்விழ எய்தவன் அதிகைவீ ரட்டனே.
கழல்இணை தொழுதவர் கவலைகள் தீர்ப்பவன் - இருதிருவடிகளைத் தொழுத அன்பர்களது கவலைகளைத் தீர்ப்பவன்;
மழவிடை ஊர்தியன் - இளைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; (மழ – இளைய);
மார்பினில் நூலினன் - மார்பில் முப்புரிநூலை அணிந்தவன்;
குழை திகழ் காதினன் - காதில் குழையை அணிந்தவன்;
கூடலர் முப்புரம் அழல் விழ எய்தவன் - பகைவர்களது முப்புரங்கள் தீயில் விழும்படி அம்பை எய்தவன்; (கூடலர் - பகைவர்); (அழல் - தீ);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
6)
தொழுதெழும் தொண்டர்தம் துயரினைத் தீர்த்தருள்
தொழிலுடைத் தூயவன் சுடர்மதிச் சடையினன்
உழிதரு முப்புரம் ஒருநொடி அளவினில்
அழிவுற எய்தவன் அதிகைவீ ரட்டனே.
தொழுதெழும் தொண்டர்தம் துயரினைத் தீர்த்தருள் தொழிலுடைத் தூயவன் - தொழும் தொண்டர்களது துயரைத் தீர்த்து அருளும் தொழிலை உடைய தூயன்; (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே");
சுடர்மதிச் சடையினன் - ஒளிவீசும் திங்களைச் சடையில் அணிந்தவன்;
உழிதரு முப்புரம் ஒருநொடி அளவினில் அழிவுற எய்தவன் - எங்கும் அலையும் முப்புரங்கள் ஒருநொடிப்பொழுதில் அழியும்படி கணை எய்தவன்; (உழிதல் - அலைதல்); (தருதல் - ஒரு துணைவினை);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
7)
பத்தரைக் காப்பவன் பழவினை தீர்ப்பவன்
நித்தியன் முத்தியன் நெற்றியில் நேத்திரன்
முத்தலை வேலினன் முப்புரம் வெந்தற
அத்திரம் எய்தவன் அதிகைவீ ரட்டனே.
பத்தரைக் காப்பவன் பழவினை தீர்ப்பவன் - பக்தர்களைக் காத்து அவர்களது பழவினையைத் தீர்ப்பவன்;
நித்தியன் முத்தியன் - அழிவற்றவன், முக்திநிலையில் இருப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.8.2 - "முத்தியர் மூப்பிலர் ஆப்பினுள்ளார்");
நெற்றியில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;
முத்தலை வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்; (பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி - 11.29.17 - "பொரு-முத்தலைவேற் படைக்-கம்பர்");
முப்புரம் வெந்து அற அத்திரம் எய்தவன் - முப்புரங்கள் சாம்பலாகும்படி கணை எய்தவன்;
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
8)
குன்றன தோள்களால் கோன்மலை பேர்த்திடச்
சென்றவன் அழுதிடத் திருவிரல் ஊன்றினான்
ஒன்றலர் மதில்களை ஒருமலை வில்லினால்
அன்றெரி செய்தவன் அதிகைவீ ரட்டனே.
குன்று அன தோள்களால் கோன்மலை பேர்த்திடச் சென்றவன் அழுதிடத் திருவிரல் ஊன்றினான் - மலை போன்ற பெரிய வலிய புஜங்களால் ஈசனது கயிலைமலையைப் பெயர்க்கச் சென்ற இராவணனை அவன் அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கிய பெருமான்;
ஒன்றலர் மதில்களை ஒரு மலைவில்லினால் அன்று எரி செய்தவன் - பகைவர்களது முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி முன்பு எரித்தவன்; (ஒன்றலர் - பகைவர்);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
9)
அம்புயன் அரியிவர் அறிவொணாச் சோதியான்
நம்பிய அன்பரை நண்ணிநின் றருள்பவன்
கொம்பனாள் பங்கினன் கூடலர் புரமெரி
அம்பினை எய்தவன் அதிகைவீ ரட்டனே.
அம்புயன் அரி இவர் அறிவு ஒணாச் சோதியான் - தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன், திருமால் இவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி;
நம்பிய அன்பரை நண்ணிநின்று அருள்பவன் - விரும்பி வழிபடும் பக்தர்களை அருகிருந்து காத்தருள்பவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);
கொம்பு அனாள் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்; (அனாள் - அன்னாள் - போல்பவள்);
கூடலர் புரம் எரி அம்பினை எய்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த அம்பை எய்தவன்; (கூடலர் - பகைவர்);
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
10)
நித்தலும் பொய்யுரை நீசர்சொல் நீங்குமின்
அத்தியின் ஈருரி போர்த்தவன் ஆறணி
வித்தகன் வென்றிவெள் விடையினன் புரமெரி
அத்திரம் எய்தவன் அதிகைவீ ரட்டனே.
நித்தலும் பொய் உரை நீசர் சொல் நீங்குமின் - எந்நாளும் பொய்களையே சொல்லும் கீழோர்களது பேச்சை நீங்குங்கள்; (நீங்குமின் - நீங்குங்கள்);
அத்தியின் ஈர்உரி போர்த்தவன் - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்தவன்; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்); (உரி - தோல்);
ஆறு அணி வித்தகன் - கங்கையைச் சடையில் அணிந்த வல்லவன்;
வென்றி வெள்விடையினன் - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (வென்றி - வெற்றி);
புரம் எரி அத்திரம் எய்தவன் - முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்;
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
11)
சுடுபொடி பூசிய சுந்தரன் பூங்கணை
தொடுமதன் உடலறச் சுட்டவன் உலகினில்
இடுபலிக் குழல்பவன் இகலியார் முப்புரம்
அடுசரம் உய்த்தவன் அதிகைவீ ரட்டனே.
சுடுபொடி பூசிய சுந்தரன் - வெந்த வெண்ணீற்றைப் பூசிய அழகன்;
பூங்கணை தொடு மதன் உடல் அறச் சுட்டவன் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடல் அழியும்படி சுட்டெரித்தவன்;
உலகினில் இடுபலிக்கு உழல்பவன் - உலகில் பிச்சை ஏற்று உழல்பவன்;
இகலியார் முப்புரம் அடு-சரம் உய்த்தவன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த கணையை எய்தவன்; (இகல்தல் - பகைத்தல்; இகலியார் - பகைவர்); (அடுதல் - அழித்தல்); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.25.1 – "இகலியார்புரம் எய்தவன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.24.2 - "சிறவார் புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணை உய்த்தவனே");
அதிகை வீரட்டனே - திருவதிகை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment