2019-08-28
P.481 - ஆனைக்கா
--------------------
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")
(சுந்தரர் தேவாரம் - 7.77.1 - "பரவும் பரிசொன் றறியேன்நான்")
1)
கொலையார் கரியை உரிசெய்தான் .. குழுமித் தேவர் குறையிரப்ப
மலையே சிலையா வளைவித்து .. மதில்மூன் றெய்தான் மலரான்றன்
தலையே கலனாப் பலிதேரும் .. தலைவன் வெள்ளை விடையேறி
அலையார் பொன்னிப் புனல்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
கொலை ஆர் கரியை உரிசெய்தான் - கொலை செய்யவல்ல யானையின் தோலை உரித்தவன்;
குழுமித் தேவர் குறையிரப்ப மலையே சிலையா வளைவித்து மதில்மூன்று எய்தான் - தேவர்கள் கூடி வேண்டி வணங்க, இரங்கி மேருமலையையே வில்லாக வளைத்து முப்புரங்களை எய்தவன்; (குறையிரத்தல் - தன்குறைகூறி வேண்டுதல்); (சிலை - வில்; சிலையா - சிலையாக);
மலரான்-தன் தலையே கலனாப் பலி தேரும் தலைவன் - பிரமனது மண்டையோடே உண்கலனாகப் பிச்சை ஏற்கும் தலைவன்;
வெள்ளை-விடை ஏறி - வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்;
அலை ஆர் பொன்னிப் புனல் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - அலை மிக்க காவிரியின் நீர் சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்; (அப்பர் தேவாரம் - 6.29.1 - "அருமணியை ஆரூரில் அம்மான் தன்னை");
2)
உழைமான் மழுவாள் திரிசூலம் .. உடுக்கை ஏந்தும் எண்டோளன்
குழகா ஓலம் என்றிமையோர் .. கூட்டம் கூவ இரங்கியருள்
மழையார் கண்டன் அரவத்தார் .. மார்பில் மின்னார் புரிநூலன்
அழகார் பொன்னிப் புனல்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
உழைமான் மழுவாள் திரிசூலம் உடுக்கை ஏந்தும் எண்தோளன் - மான், மழு, திரிசூலம், உடுக்கை இவற்றைக் கையில் ஏந்தியவன், எட்டுப் புஜங்களை உடையவன்;
"குழகா! ஓலம்" என்று இமையோர் கூட்டம் கூவ இரங்கியருள் மழை ஆர் கண்டன் - "அழகனே! ஓலம்" என்று தேவர்கள் கூட்டம் ஓலமிட அவர்களுக்கு இரங்கியருளிய மேகம் போன்ற கருநிறம் திகழும் கண்டன்; (குழகன் - அழகன்); (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்);
அரவத்-தார் மார்பில் மின்னார் புரிநூலன் - பாம்பை மாலை போல அணிந்த திருமார்பில் மின்னல் போல் ஒளி வீசும் முப்புரிநூல் அணிந்தவன்; (தார் - மாலைவகை); (மின் - 1. ஒளி; 2. மின்னல்); (ஆர்தல் - 1. நிறைதல்; 2. ஒத்தல்); (காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - 11.4.38 - "பூண்டதோர் தாரேறு பாம்புடையான்");
அழகு ஆர் பொன்னிப் புனல் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - அழகிய காவிரியின் நீர் சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
3)
கடிய விடையின் மீதேறும் .. கடவுள் கமழும் சந்தனம்போற்
பொடியை மார்பிற் பூசியவன் .. பூவம் பெய்த அம்மகரக்
கொடியன் உடலை நீறாக்கும் .. கூத்தன் உமையோர் கூறுடையான்
அடியைப் பொன்னிப் புனல்போற்றும் .. ஆனைக் காவில் அம்மானே.
கடிய விடையின்மீது ஏறும் கடவுள் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடைய கடவுள்; (கடி - விரைவு);
கமழும் சந்தனம் போல் பொடியை மார்பில் பூசியவன் - மணக்கின்ற சந்தனம் போலத் திருநீற்றை மார்பில் பூசியவன்;
பூ-அம்பு எய்த அம்-மகரக்-கொடியன் உடலை நீறு ஆக்கும் கூத்தன் - மலர்க்கணை தொடுத்த அந்த அழகிய மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய கூத்தன்; (அ - அந்த; அம் - அழகிய); (மகரக்கொடியன் - கொடியில் மகரமீனைச் சின்னமாக உடைய மன்மதன்);
உமை ஓர் கூறு உடையான் - உமைபங்கன்;
அடியைப் பொன்னிப் புனல் போற்றும் ஆனைக்காவில் அம்மானே - திருவடியைக் காவிரி-நீர் வழிபடும் திருவானைக்காவில் உறையும் பெருமான்;
4)
பிளிறிக் கொண்டு பொரவந்த .. பெரிய கரிய மலைபோன்ற
களிறு தன்னை உரித்தபிரான் .. கல்லால் நீழல் நால்வர்க்குத்
தெளிவைத் தந்த ஒளிவடிவன் .. திங்கள் திகழும் சடைமுடியன்
அளிகள் பாடும் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
பிளிறிக்கொண்டு பொர வந்த பெரிய கரிய மலை போன்ற களிறுதன்னை உரித்த பிரான் - பிளிறியபடி போர்செய்ய வந்தடைந்த பெரிய கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்த தலைவன்;
கல்லால்-நீழல் நால்வர்க்குத் தெளிவைத் தந்த ஒளிவடிவன் - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்த ஒளியுருவன்;
திங்கள் திகழும் சடைமுடியன் - சந்திரனைச் சடைமேல் அணிந்தவன்;
அளிகள் பாடும் பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்; (அளி - வண்டு);
5)
கறையொன் றிலங்கும் கண்டத்தன் .. காவாய் என்று கழல்தொழுத
பிறைநின் றிலங்கும் சடையுடையான் .. பேய்கள் சூழ நடஞ்செய்யும்
இறைவன் அன்பர்க் கொருநாளும் .. இல்லை என்று சொல்லாதான்
அறைவண் டுலவும் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
கறை ஒன்று இலங்கும் கண்டத்தன் - நீலமணி திகழும் கண்டத்தை உடையவன்;
"காவாய்" என்று கழல் தொழுத பிறை நின்று இலங்கும் சடை உடையான் - "காத்தருளாய்" என்று திருவடியைத் தொழுத சந்திரன் நிலையாகத் தங்கி ஒளிவீசுகின்ற சடையை உடையவன்;
பேய்கள் சூழ நடம் செய்யும் இறைவன் - பூதகணங்கள் சூழக் கூத்தாடுபவன்;
அன்பர்க்கு ஒருநாளும் இல்லை என்று சொல்லாதான் - பக்தர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் எப்பொழுதும் கொடுப்பவன்;
அறை-வண்டு உலவும் பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - ஒலிக்கின்ற வண்டுகள் உலவுகின்ற சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்; (அறைதல் - ஒலித்தல்);
6)
நீர்கொண் டேத்தும் ஆனைக்கும் .. நிழலார் பந்தர்ச் சிலந்திக்கும்
பார்கொண் டாட அருள்செய்த .. பரமன் பாயும் புலித்தோலன்
ஓர்வெண் பிறையைச் செஞ்சடைமேல் .. ஒளிர வைத்த அருளாளன்
ஆர்வண் டுலவும் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
நீர்கொண்டு ஏத்தும் ஆனைக்கும் நிழல் ஆர் பந்தர்ச் சிலந்திக்கும் பார் கொண்டாட அருள்செய்த பரமன் - நீர் சொரிந்து வழிபட்ட யானைக்கும், நிழல் தரும் பந்தல் அமைத்து வழிபட்ட சிலந்திக்கும் உலகம் போற்றுமாறு அருளிய பரமன்; (* திருவானைக்காவின் தலவரலாற்றைக் காண்க); (அப்பர் தேவாரம் - 4.49.4 - "சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து");
பாயும் புலித்தோலன் - பாயும் புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்;
ஓர் வெண்பிறையைச் செஞ்சடைமேல் ஒளிர வைத்த அருளாளன் - வெண்பிறையைச் சடையின்மேல் ஒளிவீசும்படி வைத்த அருளாளன்;
ஆர்-வண்டு உலவும் பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - ஒலிக்கின்ற வண்டுகள் உலவுகின்ற சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
7)
செங்கண் உடைய சோழனெனச் .. சிலந்தி தன்னைப் பிறப்பித்தான்
பைங்கண் நாக அரைநாணன் .. பலியை நாடி உழல்செல்வன்
வெங்கண் விடையன் அடியார்தம் .. வினைக ளெல்லாம் தீர்த்தருளும்
அங்கண் அடிகள் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
செங்கண் உடைய சோழன் எனச் சிலந்திதன்னைப் பிறப்பித்தான் - சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறக்கச்செய்தவன்; (* திருவானைக்காவின் தலவரலாற்றைக் காண்க); (கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க); (அப்பர் தேவாரம் - 4.49.4 - "சிலந்தியும் ஆனைக்காவில் .. .. கோச்செங்கணானுமாக... .... பிறப்பித்திட்டார்");
பைங்கண் நாக அரைநாணன் - பசிய கண்ணுடைய (= இளைய) பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (பை - பசுமை; அழகு; இளமை); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.16 - பைங்கண் அரவூர்வான் மேனி");
பலியை நாடி உழல்-செல்வன் - பிச்சையை விரும்பி அலையும் செல்வன்; (பலி - பிச்சை);
வெங்கண் விடையன் - சினக்கின்ற இடபத்தை ஊர்தியாக உடையவன்;
அடியார்தம் வினைகளெல்லாம் தீர்த்தருளும் அங்கண் அடிகள் - பக்தர்களது பழவினைகளைத் தீரத்தருளும் அருட்கண் உடைய இறைவன்;
பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
8)
கத்திக் கயிலை பேர்த்தானைக் .. காலின் விரல்வைத் தழவைத்துப்
பத்தன் ஆக்கி வாய்பத்தும் .. பாடக் கேட்டு வரமீந்தான்
மத்த மலரைச் சூடியவன் .. மயில்போற் சாயல் உமையஞ்ச
அத்தி உரித்தான் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
கத்திக் கயிலை பேர்த்தானைக் காலின் விரல் வைத்து அழவைத்துப் பத்தன் ஆக்கி வாய் பத்தும் பாடக் கேட்டு வரம் ஈந்தான் - இகழ்ந்து கத்திக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதவிரலை ஊன்றி அழச்செய்து, தனக்குப் பக்தன் ஆகும்படி செய்து, அவனது பத்து-வாய்களும் துதிபாடக் கேட்டு இரங்கி வரம் அளித்தவன்;
மத்த-மலரைச் சூடியவன் - ஊமத்தமலரை அணிந்தவன்;
மயில் போல் சாயல் உமை அஞ்ச அத்தி உரித்தான் - மயில் போன்ற சாயலை உடைய உமை அஞ்சுமாறு யானையின் தோலை உரித்தவன்; (அத்தி - ஹஸ்தி - யானை);
பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
9)
கடல்மேல் அரவத் தணையானும் .. கமலத் தானும் கைகூப்பி
உடையாய் அருளென் றடிவாழ்த்த .. ஓங்கி நின்ற ஒளியுருவன்
அடர்கா னிடையே தவஞ்செய்த .. அருச்சு னற்குப் படையீந்தான்
அடலே றுடையான் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
கடல்மேல் அரவத்து-அணையானும் கமலத்தானும் கைகூப்பி "உடையாய் அருள்" என்று அடிவாழ்த்த ஓங்கி நின்ற ஒளியுருவன் - கடலின்மேல் பாம்பைப் படுக்கையாகக்கொண்ட திருமாலும் தாமரையில் உறையும் பிரமனும் கைகூப்பிச், "சுவாமீ, அருள்வாயாக" என்று வணங்கும்படி எல்லையின்றி நீண்டு நின்ற ஜோதிவடிவன்;
அடர்-கானிடையே தவம் செய்த அருச்சுனற்குப் படை ஈந்தான் - அடர்ந்த காட்டில் தவம் செய்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;
அடல்-ஏறு உடையான் - வலிய வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);
பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
10)
இரவும் பகலும் பொய்யுரைக்கும் .. எத்தர்க் கில்லா எம்பெருமான்
கரவில் லாத மனத்தாராய்க் .. கைகள் கூப்பி மலர்தூவிப்
பரவும் அடியார் வினைதீர்க்கும் .. பரமன் வரதன் அரைநாணா
அரவம் ஆர்த்தான் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
இரவும் பகலும் பொய் உரைக்கும் எத்தர்க்கு இல்லா எம்பெருமான் - இராப்பகலாகப் பொய்களே சொல்லும் வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன் எம்பெருமான்;
கரவு இல்லாத மனத்தாராய்க் கைகள் கூப்பி மலர் தூவிப் பரவும் அடியார் வினை தீர்க்கும் பரமன் - வஞ்சமற்ற மனத்தர்கள் ஆகிப் பூக்களைத் தூவிக் கைகூப்பித் துதித்து வழிபடும் அடியவர்களது வினையைத் தீர்க்கும் பரமன்; (கரவு - வஞ்சம்);
வரதன் - வரங்கள் தருபவன்;
அரைநாணா அரவம் ஆர்த்தான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
11)
பிணியும் மூப்பும் இறப்போடு .. பிறப்பும் இல்லாப் பெருமையினான்
பணியும் தாரென் றணிமார்பன் .. பணிசெய் தொண்டர் பவம்தீர்ப்பான்
பணியும் உம்பர் அமுதாரப் .. பரிந்து நஞ்சை மணிபோல
அணியும் கண்டன் பொழில்சூழ்ந்த .. ஆனைக் காவில் அம்மானே.
பிணியும் மூப்பும் இறப்போடு பிறப்பும் இல்லாப் பெருமையினான் - நோய்கள், முதுமை, சாவு, பிறப்பு இவை எதுவும் இல்லாத பெருமையை உடையவன்;
பணியும் தார் என்று அணி-மார்பன் - பாம்பையும் மாலை போல மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்); (தார் - மாலைவகை);
பணிசெய் தொண்டர் பவம் தீர்ப்பான் - திருத்தொண்டு செய்யும் அடியார்களது பிறவிநோயைத் தீர்ப்பவன்; (பவம் - பிறவி);
பணியும் உம்பர் அமுது ஆரப் பரிந்து நஞ்சை மணிபோல அணியும் கண்டன் - (அஞ்சிவந்து திருவடியை) வணங்கிய தேவர்கள் அமுதம் உண்ண, இரங்கி ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் நீலமணி போல அணிந்தவன்;
பொழில் சூழ்ந்த ஆனைக்காவில் அம்மானே - சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறையும் பெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment