2019-10-12
P.485 - முதுகுன்றம் (விருத்தாசலம்)
----------
(சந்தக் கலிவிருத்தம் - தனதன தானா தனதன தானா)
(Sanskrit Meters - "ललल लगुगु ललल लगुगु" என்ற அமைப்பு. வடமொழியில் "குஸுமவிசித்ரா" - कुसुमविचित्रा என்று பெயரிட்டுள்ளனர்)
முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பெற்றுள்ளது. புணர்ச்சியோடு நோக்கிச் சந்த அமைப்பை உணர்க.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
இனமல ராலே இணையடி போற்றித்
தின(ம்)நினை வார்க்குத் திருவருள் எம்மான்
புனலது பாயும் புரிசடை அண்ணல்
சினவிடை யானூர் திருமுது குன்றே.
இனமலராலே இணையடி போற்றித் தினம் நினைவார்க்குத் திரு அருள்- எம்மான் - சிறந்த பூக்களால் இரு-திருவடிகளைத் தினமும் போற்றித் தியானிக்கும் பக்தர்களுக்குத் எல்லா நலங்களையும் அருளும் எம்பெருமான்; (திரு - செல்வம்); (சம்பந்தர் தேவாரம் - 1.40.5 - "இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமானடி சேர்வோம்");
புனல்-அது பாயும் புரி-சடை அண்ணல் - கங்கை பாயும் சுருண்ட சடையை உடைய தலைவன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);
சின-விடையான் ஊர் திருமுதுகுன்றே - கோபம் உடைய எருதை வாகனமாக உடையவன் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (அப்பர் தேவாரம் - 4.68.2 - "சினவிடை யுடையர் போலும்");
2)
நறைமலர் இட்டால் நலிவினை மாய்க்கும்
இறையவன் ஏரார் இளமதி சூடி
கறையணி கண்டன் கருதிய ஊராம்
சிறையளி பாடும் திருமுது குன்றே.
நறைமலர் இட்டால் நலிவினை மாய்க்கும் இறையவன் - வாசமலர்களைத் தூவி வழிபட்டால் நம்மை வருத்தும் வினைகளை அழிக்கும் இறைவன்; (நலிவினை - 1. வருத்தும் வினை; 2. நலிவை); (நலிதல் - வருத்துதல்); (நலிவு - துன்பம்); (மாய்த்தல் - அழித்தல்);
ஏர் ஆர் இளமதி சூடி - அழகிய இளந்திங்களைச் சூடியவன்; (ஏர் - அழகு); (சூடி - சூடியவன்);
கறை அணி-கண்டன் கருதிய ஊர் ஆம் - நீலகண்டனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம் ஆவது;
சிறை-அளி பாடும் திருமுதுகுன்றே - சிறகுகளையுடைய வண்டுகள் பாடுகின்ற சோலை சூழ்ந்த திருமுதுகுன்றம்; (சிறை - சிறகு); (அளி - வண்டு);
3)
அலைகடல் நஞ்சே அமுதென ஆர்ந்தான்
மலைமகள் நாதன் மறைமொழி நாவன்
தலைமிசை ஆற்றன் தடமதில் எய்யும்
சிலையினன் ஊராம் திருமுது குன்றே.
அலைகடல் நஞ்சே அமுது என ஆர்ந்தான் - அலைக்கும் கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதம் போல உண்டு அணிந்தவன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);
மலைமகள்-நாதன் - உமைமணாளன்;
மறை மொழி-நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;
தலைமிசை ஆற்றன் - கங்காதரன்;
தடமதில் எய்யும் சிலையினன் ஊர் ஆம் திருமுதுகுன்றே - பெரிய முப்புரங்களை எய்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் ஆவது திருமுதுகுன்றம்; (சிலை - வில்);
4)
தவமுடை அன்பர் தமையக லாதான்
தவறிய தக்கன் தலையைய ரிந்தான்
எவரினு(ம்) மேலான் எருதமர் ஈசன்
சிவனிட மாம்தென் திருமுது குன்றே.
தவமுடை அன்பர்தமை அகலாதான் - தவம் உடைய பக்தர்களை நீங்காதவன்;
தவறிய தக்கன் தலையை அரிந்தான் - பிழை செய்த தக்கனது தலையை வெட்டியவன்; (அரிதல் - வெட்டுதல்);
எவரினும் மேலான் - எல்லாத் தேவர்களினும் மேலானவன் - பரமன்; (மஹாதேவன்);
எருது அமர் ஈசன் - இடபத்தை வாகனமாக விரும்பிய ஈசன்; (அமர்தல் - விரும்புதல்);
சிவன் இடம் ஆம் தென்-திருமுதுகுன்றே - சிவபெருமான் உறையும் தலம் ஆவது அழகிய திருமுதுகுன்றம்; (தென் - அழகு);
5)
கருமணி கண்டன் கணைசிலை ஏந்தி
ஒருநகை யால்முப் பெருமதில் எய்தான்
அருவமு மாய்ப்பல் லுருவமும் ஆகும்
திருவுடை யானூர் திருமுது குன்றே.
கருமணி-கண்டன் - நீலகண்டன்;
கணை சிலை ஏந்தி ஒரு நகையால் முப்பெருமதில் எய்தான் - கையில் ஒரு கணையையும் வில்லையும் ஏந்தி ஒரு சிரிப்பால் மூன்று பெரிய மதில்களை எய்து எரித்தவன்; (சிலை - வில்); (அப்பர் தேவாரம் - 6.94.9 - "பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி");
அருவமும் ஆய்ப், பல்லுருவமும் ஆகும் - உருவம் அற்றவனும் ஆகிப், பல வடிவங்களையும் ஏற்கின்ற;
திரு உடையான் ஊர் திருமுதுகுன்றே - திருவை உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை");
6)
பரவிய பத்தர் பழவினை தீர்ப்பான்
இரவினில் நட்டம் புரிபவன் எந்தை
அரவரை ஆர்த்தான் அணிசடை தன்னில்
திரையுடை யானூர் திருமுது குன்றே.
பரவிய பத்தர் பழவினை தீர்ப்பான் - துதிக்கின்ற அன்பர்களது பழைய வினைகளைத் தீர்ப்பவன்;
இரவினில் நட்டம் புரிபவன் எந்தை - இருளில் திருக்கூத்து ஆடுபவன், எம் தந்தை; (நட்டம் - கூத்து);
அரவு அரை ஆர்த்தான் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
அணிசடைதன்னில் திரை உடையான் ஊர் திருமுதுகுன்றே - அழகிய சடையில் கங்கையை உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (திரை - அலை; நதி)
7)
அரவமு(ம்) நாறும் குரவமும் ஆறும்
விரவிய வேணிப் பரனடி யார்க்குக்
கரவிலன் ஊண்கொள் கலனென வேதன்
சிரமுடை யானூர் திருமுது குன்றே.
அரவமும் நாறும் குரவமும் ஆறும் விரவிய வேணிப் பரன் - நாகம், மணம் கமழும் குராமலர், கங்கை இவற்றையெல்லாம் சடையில் அணிந்த பரமன்; (நாறுதல் - மணம் கமழ்தல்); (விரவுதல் - பொருந்துதல்); (வேணி - சடை);
அடியார்க்குக் கரவு இலன் - பக்தர்களுக்கு வஞ்சமின்றி வரம் அருள்பவன்; (கரவு - மறைத்தல்; வஞ்சனை);
ஊண் கொள் கலன் என வேதன் சிரம் உடையான் ஊர் திருமுதுகுன்றே - உணவை ஏற்கும் பிச்சைப்பாத்திரமாகப் பிரமனது மண்டையோட்டை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (ஊண் - உணவு);
8)
மலையெறி மூடன் வலிகெட வாய்கள்
அலறிட அன்றோர் அடிவிரல் ஊன்றி
அலைபுர(ம்) நீறாய் அழிவுற எய்த
சிலையினன் ஊர்தென் திருமுது குன்றே.
மலை எறி- மூடன் வலி கெட, வாய்கள் அலறிட, அன்று ஓர் அடிவிரல் ஊன்றி - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவிலியான இராவணனது வலிமை அழியவும், அவனது பத்து வாய்களும் அலறவும் அன்று திருவடி-விரலை ஊன்றியவன்; (வலி - வலிமை); (ஊன்றி - ஊன்றியவன்);
அலைபுர(ம்) நீறாய் அழிவுற எய்த சிலையினன் ஊர் தென்-திருமுதுகுன்றே - எங்கும் திரிந்து எல்லாரையும் துன்புறுத்திய முப்புரங்களும் சாம்பலாகி அழியும்படி கணை எய்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்; (அலைதல் - திரிதல்); (அலைத்தல் - வருத்துதல்); (சிலை - வில்); (தென் - அழகிய);
9)
பிரமனு(ம்) மாலும் பரவிட அன்றோர்
வரையில தாம்தீ வடிவொடு நின்றான்
குரைகழ லால்கூற் றுதையிறை கோத்த
சிரமணி வானூர் திருமுது குன்றே.
பிரமனும் மாலும் பரவிட அன்று ஓர் வரை இலது ஆம் தீ வடிவொடு நின்றான் - நான்முகனும் திருமாலும் வணங்குமாறு முன்பு ஓர் எல்லையற்றதான ஜோதிவடிவில் ஓங்கியவன்; (பரவுதல் - துதித்தல்); (வரை - எல்லை);
குரைகழலால் கூற்று உதை- இறை - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் இயமனை உதைத்த இறைவன்;
கோத்த சிரம் அணிவான் ஊர் திருமுதுகுன்றே - கோக்கப்பட்ட மண்டையோட்டு-மாலையை அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (சிரம் - கபாலம்);
10)
புவிதனில் என்றும் புறனுரை செய்யும்
கவியிருள் நெஞ்சக் கயவரை நீங்கும்
தவிநிலை தீர்க்கும் பவனொரு தோடார்
செவியுடை யானூர் திருமுது குன்றே.
புவிதனில் என்றும் புறனுரை செய்யும் - இவ்வுலகில் ஒயாமல் எந்நாளும் பழிச்சொற்களையும் பயனற்றவைகளையுமே பேசுகின்ற;
கவி-இருள் நெஞ்சக் கயவரை நீங்கும் - இருளால் மூடப்பெற்ற நெஞ்சை உடைய கீழோர்களை விட்டு நீங்குங்கள்; (கவிதல் - மூடுதல்); (இருள் - அறியாமை; குற்றம்);
தவி-நிலை தீர்க்கும் பவன் - தவிக்கின்ற நிலையைத் தீர்த்தருளும் பவன் (= பக்தர்களுக்கு இம்மையில் துன்பத்தைத் தீர்த்து இம்மை மறுமை இன்பங்கள் அருள்பவன்); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் உள்ளவன்);
ஒரு தோடு ஆர் செவி உடையான் ஊர் திருமுதுகுன்றே - ஒரு காதில் தோடு அணிந்த சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்;
11)
உருமணி கார்போல் ஒருமணி கண்டன்
தருநிழல் நால்வர்க் கருமறை ஓதி
மருமலர் அம்பெய்ம் மதனெரி கண்ணன்
பொருவிடை யானூர் திருமுது குன்றே.
உரும் அணி- கார் போல் ஒரு மணி கண்டன் - இடியுடைய மேகம் போல ஒரு கரிய மணியைக் கண்டத்தில் அணிந்தவன்; (உரும் - இடி); (கார் - மேகம்); (ஒரு - ஒப்பற்ற);
தருநிழல் நால்வர்க்கு அருமறை ஓதி - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர்களுக்கு அரிய வேதப்பொருளை உபதேசித்தவன்; (தரு - மரம் - கல்லாலமரம்); (ஓதி - ஓதியவன்);
மருமலர் அம்பு எய்ம் மதன் எரி- கண்ணன் - வாசமலர்க்கணையை எய்த காமனை எரித்த (நெற்றிக்)கண்ணன்; (மரு - வாசனை);
பொரு-விடையான் ஊர் திருமுதுகுன்றே - போர்செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (பொருதல் - போர்செய்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment