Tuesday, May 26, 2026

P.489 - வியலூர் - மறியொரு கையில்

2019-10-26

P.489 - வியலூர் (திருவிசநல்லூர்)

---------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தான தான தனதானா;

முதற்சீர் தானன என்றும் வரலாம்)

(வடமொழியில் இதனை ஒத்த அமைப்பு - Sanskrit Meter – நவமாலினி / நவமாலிகா - नवमालिनी / नवमालिका - லலல லகுல குலல லகுகு - ललल लगुल गुलल लगुगु )


முற்குறிப்புகள்:

* தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின-ஒற்றோ மெல்லின-ஒற்றோ சந்தம் கெடாது வரக்கூடும். வடமொழியில் அத்தகைய கருத்து இல்லை. இப்பதிகப் பாடல்கள் தமிழ்ச் சந்தப்பாடல்கள்.

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்.


1)

மறியொரு கையில் ஏந்து மழுவாளன்

பொறிதிகழ் நாக மாலை புனைமார்பன்

அறிவுரு வான ஐயன் அமர்கோயில்

வெறிகமழ் சோலை சூழ்ந்த வியலூரே.


மறி ஒரு கையில் ஏந்து மழுவாளன் - மான்கன்றை ஒரு கையில் ஏந்தியவன், மழுவை ஏந்தியவன்; (மறி - மான்கன்று);

பொறி திகழ் நாக-மாலை புனைமார்பன் - புள்ளி திகழும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவன்; (பொறி - புள்ளி);

அறிவுரு ஆன ஐயன் அமர் கோயில் - சித்ஸ்வரூபியான தலைவன் விரும்பி உறையும் கோயில்;

வெறி கமழ் சோலை சூழ்ந்த வியலூரே - வாசனை கமழும் பொழில் சூழ்ந்த திருவியலூர் ஆகும்; (வெறி - வாசனை);


2)

பெண்ணொரு பங்கன் அன்று பெருவில்லால்

திண்ணிய கோட்டை மூன்று செறுவீரன்

தண்ணியல் ஆற ணிந்த சடையானூர்

விண்ணுயர் சோலை சூழ்ந்த வியலூரே.


பெண் ஒரு பங்கன் - உமைபங்கன்;

அன்று பெருவில்லால் திண்ணிய கோட்டை மூன்று செறு- வீரன் - முன்னம் மேருமலை என்ற பெரிய வில்லால் வலிய முப்புரங்களை அழித்த வீரன்; (செறுதல் - அழித்தல்);

தண் இயல் ஆறு அணிந்த சடையான் ஊர் - குளிர்ந்த கங்கையைச் சடையில் அணிந்தவன் ஊர் ஆவது; (தண் - குளிர்ச்சி);

விண் உயர் சோலை சூழ்ந்த வியலூரே - வானோங்கிய சோலை சூழ்ந்த திருவியலூர்;


3)

மாகயி லாய நாதன் வரியார்ந்த

நாகமி லங்கு மார்பன் நரையேற்றன்

பாக(ம்)ம டந்தை காட்டு பரனூராம்

மேகமு ரிஞ்சு சோலை வியலூரே.


மா-கயிலாய-நாதன் - பெரிய கயிலைமலைமேல் வீற்றிருக்கும் தலைவன்;

வரி ஆர்ந்த நாகம் இலங்கு மார்பன் - வரிகளையுடைய பாம்பு திகழும் மார்பை உடையவன்;

நரை-ஏற்றன் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்; (நரை - வெண்மை);

பாக(ம்) மடந்தை காட்டு பரன் ஊர் ஆம் - ஒரு பாகமாக உமையைக் காட்டுகின்ற பரமன் ஊர் ஆவது;

மேகம் உரிஞ்சு சோலை வியலூரே - மேகம் உரசும் சோலை சூழ்ந்த திருவியலூர்; (உரிஞ்சுதல் - உரசுதல்; உராய்தல்); (அப்பர் தேவாரம் - 6.35.4 - "மேக முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு");


4)

அரவினை நாண தாக அரையார்த்தான்

விரவிய அன்பர் பண்டை வினைதீர்ப்பான்

திரைகடல் நஞ்சை உண்ட சிவனூராம்

விரைகமழ் சோலை சூழ்ந்த வியலூரே.


அரவினை நாண்அது ஆக அரை ஆர்த்தான் - பாம்பை அரையில் நாணாகக் கட்டியவன்; (நாணது - அது - பகுதிப்பொருள்விகுதி); (ஆர்த்தல் - கட்டுதல்);

விரவிய அன்பர் பண்டை-வினை தீர்ப்பான் - வந்தடைந்த பக்தர்களது பழைய வினைகளைத் தீர்ப்பவன்;

திரைகடல் நஞ்சை உண்ட சிவன் ஊர் ஆம் - அலையெழும் கடலில் தோன்றிய விஷத்தை உண்ட சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

விரை கமழ் சோலை சூழ்ந்த வியலூரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவியலூர்;


5)

பேரினை ஓதும் அன்பர் பிணிதீர்ப்பான்

ஊரிடும் ஐயம் ஏற்க உழல்பித்தன்

பேரிகள் ஆர்க்க ஆடு பெருமானூர்

வேரி மலிந்த சோலை வியலூரே.


பேரினை ஓதும் அன்பர் பிணி தீர்ப்பான் - திருநாமத்தை ஓதும் பக்தர்களது பிணியைத் தீர்ப்பவன்;

ஊர் இடும் ஐயம் ஏற்க உழல் பித்தன் - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையை ஏற்கத் திரிகின்ற பேரருளாளன்; (பித்தன் - பேரருளாளன்);

பேரிகள் ஆர்க்க ஆடு பெருமான் ஊர் - பேரிகைகள் (முரசுகள்) முழங்கக் கூத்து ஆடும் பெருமான் உறையும் தலம்; (பேரி - பேரிகை - முரசு; भेरी bherī - kettle-drum); (ஆர்த்தல் - ஒலித்தல்);

வேரி மலிந்த சோலை வியலூரே - வாசனை மல்கும் சோலை சூழ்ந்த திருவியலூர்; (வேரி - தேன்; வாசனை);


6)

புயலன கண்ட என்று புகழ்பாடித்

துயரற வேண்டி நின்று தொழுமன்பர்

பயமற நல்கு கின்ற பரனூராம்

வியனுறும் இஞ்சி சூழ்ந்த வியலூரே.


"புயல் அன கண்ட" என்று புகழ் பாடித் - "மேகம் போன்ற நீலகண்டம் உடையவனே" என்று ஈசன் திருப்புகழைப் பாடி; (புயல் - மேகம்);

துயர் அற வேண்டி-நின்று தொழும் அன்பர் - தம் துயர் நீங்குவதற்காக வழிபடும் பக்தர்களது;

பயம் அற நல்குகின்ற பரன் ஊர் ஆம் - அச்சம் நீங்குமாறு அவர்களுக்கு அருள்கின்ற பரமன் ஊர் ஆவது;

வியன் உறும் இஞ்சி சூழ்ந்த வியலூரே - பெரிய மதில் சூழ்ந்த திருவியலூர்; (வியன் - ஆகாயம்; பெருமை); (உறுதல் - இருத்தல்; அடைதல்); (இஞ்சி - மதில்);


7)

புன்சடை மீது பாம்பு பொலிதிங்கள்

இன்புற வைத்த ஈசன் இணையில்லான்

என்பணி கோலன் நின்ற இடமென்பர்

மென்சிறை வண்ட லம்பு வியலூரே.


புன்சடை மீது பாம்பு, பொலி-திங்கள் இன்புற வைத்த ஈசன் - செஞ்சடைமேல் பாம்பையும் விளங்கும் பிறையையும் சூடி மகிழும் ஈசன்;

இணை இல்லான் - ஒப்பற்றவன்;

என்பு அணி கோலன் நின்ற இடம் என்பர் - எலும்பை அணிந்த கோலத்தை உடைய பெருமான் உறையும் தலம் ஆவது; (என்பு - எலும்பு);

மென்-சிறை வண்டு அலம்பு வியலூரே - மெல்லிய சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) திருவியலூர்; (சிறை - சிறகு); (அலம்புதல் - ஒலித்தல்);


8)

மயலுடை வல்ல ரக்கன் மலையின்கீழ்த்

துயருற ஊன்றி அன்று துதிகேட்டோர்

அயிலுறு வாளும் ஈந்த அரனூராம்

வெயில்நுழை யாத சோலை வியலூரே.


மயலுடை வல்லரக்கன் மலையின்கீழ்த் துயருற ஊன்றி - அறியாமை மிக்க வலிய அரக்கனான இராவணன் கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கியவன்; (மயல் - மயக்கம்; அறியாமை); (ஊன்றி - ஊன்றியவன்);

அன்று துதி கேட்டு ஓர் அயிலுறு வாளும் ஈந்த அரன் ஊர் ஆம் - பின்பு இராவணன் அழுது இசைபாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு (நீண்ட ஆயுளையும், இராவணன் என்ற பெயரையும்,) ஒரு கூரிய வாளையும் வரமருளிய ஹரன் உறையும் தலம் ஆவது; (அயில் - கூர்மை); (வாளும் - உம் - எச்சவும்மை);

வெயில் நுழையாத சோலை வியலூரே - வெயில் நுழையாத அடர்ந்த சோலை சூழ்ந்த திருவியலூர்;


9)

அரியயன் நேடி வாடி அடிபோற்ற

எரியென நின்ற ஈசன் எருதேறி

கரியுரி போர்த்த எந்தை கருதும்மூர்

விரிபொழில் ஆர்ந்தி லங்கு வியலூரே.


அரி அயன் நேடி வாடி அடிபோற்ற எரி என நின்ற ஈசன் - திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி வாடி வணங்குமாறு எல்லையற்ற ஒளித்தூணாகி நின்ற ஈசன்; (நேடுதல் - தேடுதல்); (எரி - தீ; ஜோதி);

எருதேறி - இடபவாகனன்;

கரியுரி போர்த்த எந்தை கருதும் ஊர் - யானைத்தோலைப் போர்த்த எம் தந்தையான சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (கரி - யானை); (உரி - தோல்); (கருதுதல் - விரும்புதல்); (கருதும்மூர் - மகரஒற்று விரித்தல் விகாரம்);

விரிபொழில் ஆர்ந்து இலங்கு வியலூரே - விரிந்த சோலைகள் நிறைந்த திருவியலூர்;


10)

மாமணி கண்டன் நாம(ம்) மருவாநா

ஊமரை நீங்கி வம்மின் ஒருதேவன்

ஆமையின் ஓட ணிந்த அரனூராம்

வீமலி சோலை சூழ்ந்த வியலூரே.


மா-மணிகண்டன் நாம(ம்) மருவா நா- ஊமரை நீங்கி வம்மின் - அழகிய மணிகண்டத்தை உடைய பெருமானது திருநாமத்தைச் சொல்லாத நாக்கை உடைய ஊமைகளை விட்டு நீங்கி வாருங்கள்; (மருவா - மருவாத - தழுவாத); (ஊமர் - ஊமைகள்); (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஒரு தேவன் - ஒப்பற்ற தேவன்;

ஆமையின் ஓடு அணிந்த அரன் ஊர் ஆம் - ஆமையோட்டை மார்பில் பூண்ட ஹரன் உறையும் ஊர் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 2.85.2 - "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க);

வீ மலி சோலை சூழ்ந்த வியலூரே - பூக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திருவியலூர்; (வீ - பூ);


11)

இசையொடு பாடும் அன்பர் இடர்தீர்ப்பான்

அசைவிலன் வேளை ஆகம் அறநோக்கி

திசையவை ஆடை யான சிவனூராம்

மிசையெழு சோலை சூழ்ந்த வியலூரே.


இசையொடு பாடும் அன்பர் இடர் தீர்ப்பான் - தேவாரம் முதலிய பாமாலைகளை இசையோடு பாடி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

அசைவு இலன் - சலனமற்றவன்; அசலன்;

வேளை ஆகம் அற நோக்கி - மன்மதனை அவனது உடல் அழியும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (வேள் - காமன்); (ஆகம் - உடல்); (நோக்கி - நோக்கியவன்);

திசைஅவை ஆடை ஆன சிவன் ஊர் ஆம் - திக்குகளே ஆடையான (திகம்பரன்) சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

மிசை எழு சோலை சூழ்ந்த வியலூரே - மேலோங்கிய பொழில் சூழ்ந்த திருவியலூர்; (மிசை - மேலிடம்; வானம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment