Wednesday, May 6, 2026

T.226 - நாகை (நாகப்பட்டினம்) - வாடிப் பார்மீள்வுற்று

2019-07-18

T. 226 - நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - வாடிப் பார்மீள்வுற்று

-----------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானானத் .. தனதான)


வாடிப் பார்மீள்வுற் .. றுழலாமல்

.. வாரத் தாலோதிப் .. பணிவேனோ

கூடிப் பேய்சூழச் .. சுடுகானில்

.. கோலத் தாலாடிச் .. சுழல்பாதா

பாடித் தாழ்வாருக் .. கொருதாயே

.. பாலத் தால்வேளைச் .. சுடுவோனே

நாடிப் பேணாருக் .. கரியானே

.. நாகைக் காரோணப் .. பெருமானே.


பதம் பிரித்து:

வாடிப் பார் மீள்வுற்று .. உழலாமல்,

.. வாரத்தால் ஓதிப் .. பணிவேனோ?

கூடிப் பேய் சூழச் .. சுடுகானில்

.. கோலத்தால் ஆடிச் .. சுழல்-பாதா;

பாடித் தாழ்வாருக்கு .. ஒரு தாயே;

.. பாலத்தால் வேளைச் .. சுடுவோனே;

நாடிப் பேணாருக்கு .. அரியானே;

.. நாகைக் காரோணப் .. பெருமானே.


வாடிப் பார் மீள்வு-உற்று உழலாமல் - (இப்பிறப்பில்) வருந்தி மீண்டும் பூமியிற் பிறந்து உழலாதவாறு; (பார் - பூமி); (மீள்வு - மீள்தல் - திரும்புதல்);

வாரத்தால் ஓதிப் பணிவேனோ - அன்பால் உன்னைத் துதித்து வழிபடுவேனோ? (அருள்க); (வாரம் - அன்பு);

கூடிப் பேய் சூழச் சுடுகானில் கோலத்தால் ஆடிச் சுழல் பாதா - பேய்கள் கூடிச் சூழ அந்தச் சுடுகாட்டில் அழகுறச் சுழன்று ஆடும் திருப்பாதனே; (பேய்சூழச்சுடுகானில் - 1. பேய் சூழச் சுடுகானில்; 2. பேய் சூழ் அச்-சுடுகானில்; - பண்டறிசுட்டு);

பாடித் தாழ்வாருக்கு ஒரு தாயே - பாடி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற ஒப்பற்ற தாயே; (தாழ்தல் - வணங்குதல்); (ஒரு - ஒப்பற்ற);

பாலத்தால் வேளைச் சுடுவோனே - நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தவனே; (பாலம் - bhāla - நெற்றி - இங்கே ஆகுபெயராக நெற்றிக்கண்ணைச் சுட்டியது);

நாடிப் பேணாருக்கு அரியானே - விரும்பிப் போற்றாதவர்களால் அடைய இயலாதவனே;

நாகைக்-காரோணப் பெருமானே - திருநாகைக்-காரோணத்தில் உறைகின்ற பெருமானே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment