2019-07-17
T. 225 - அறையணிநல்லூர் - நிலமிசை நையா
(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தய்யாத் .. தனதான)
நிலமிசை நையாத் .. திரமீயும்
.. நினதடி அல்லாற் .. பணியேனே
மலையொரு வில்லாக் .. கியவீரா
.. மதனுடல் இல்லாப் .. பரிசீவாய்
தலைமிசை ஐவாய்ப் .. பணிசூடீ
.. தமிழ்மறை சொல்வார்க் .. கினியானே
அலர்கழல் உள்கார்க் .. கிலனானாய்
.. அறையணி நல்லூர்ப் .. பெருமானே.
பதம் பிரித்து:
நிலமிசை நையாத் .. திரம் ஈயும்
.. நினது அடி அல்லாற் .. பணியேனே;
மலை ஒரு வில் ஆக்கிய வீரா;
.. மதன் உடல் இல்லாப் பரிசு ஈவாய்
தலைமிசை ஐவாய்ப் .. பணி சூடீ;
.. தமிழ்மறை சொல்வார்க்கு .. இனியானே;
அலர்-கழல் உள்கார்க்கு .. இலன் ஆனாய்;
.. அறையணிநல்லூர்ப் .. பெருமானே.
நிலமிசை நையாத் திரம் ஈயும் நினது அடி அல்லால் பணியேனே - பூவுலகில் வாடாதபடி முக்தி அருளும் உன் திருவடியைத் தவிர வேறு எதனையும் நான் வணங்கமாட்டேன்; (நைதல் - வாடுதல்); (திரம் - முக்தி; வலிமை);
மலை ஒரு வில் ஆக்கிய வீரா - மேருமலையை வில்லாக வளைத்த வீரனே;
மதன் உடல் இல்லாப் பரிசு ஈவாய் - காமனுக்கு உடல் இல்லாத தன்மையை ஈந்தவனே; (மதன் - காமன்); (பரிசு - தன்மை); (மதன் - காமனுக்கு; நான்காம்வேற்றுமைத்தொகை);
தலைமிசை ஐவாய்ப் பணி சூடீ - திருமுடிமேல் ஐந்தலை நாகத்தைச் சூடியவனே; (பணி - நாகம்); (சுந்தரர் தேவாரம் - 7.15.7 - "ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா");
தமிழ்மறை சொல்வார்க்கு இனியானே - தமிழ்வேதமான தேவாரம் திருவாசகம் ஓதும் அன்பர்களுக்கு இனிமை பயப்பவனே;
அலர்-கழல் உள்கார்க்கு இலன் ஆனாய் - மலரும் கழல் அணிந்த திருவடியை எண்ணாதவர்களுக்கு (அருள்) இல்லாதவனே; (அலர்தல் - மலர்தல்); (அப்பர் தேவாரம் - 4.82.6 - "அலரும் கழலடி நாள்தொறும் நந்தமை ஆள்வனவே");
அறையணிநல்லூர்ப் பெருமானே - அறையணிநல்லூரில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment