Monday, April 27, 2026

P.476 - பொது - பரம்பொருளு(ம்)நீ

2019-06-30

P.476 - பொது

--------------------

(வஞ்சித்துறை - தனாதனதனா தனாதனதனா)

(சந்தக் கலிவிருத்தம் - தனான தனனா தனான தனனா)

(Sanskrit Meter - ஜலோத்ததகதி (जलोद्धतगतिः) (jalōddhatagatiḥ)

முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

பரம்பொருளு(ம்)நீ பனிச்சடையினாய்

பெரும்புகழினாய் பிரான்அருளெனக்

கரம்குவிதரக் கழற்குருகினால்

வரம்தருபவன் வலஞ்சுழியனே.


"பரம்பொருளும் நீ; பனிச்-சடையினாய்; பெரும்-புகழினாய்; பிரான்; அருள்" னக் - "நீயே பரம்பொருள்; கங்கையைச் சடையில் அணிந்தவனே; பெரும்புகழ் உடையவனே; பெருமானே; அருள்க" என்று;

கரம் குவிதரக் கழற்கு உருகினால் - கைகளைக் குவித்து உருகித் திருவடியை வழிபட்டால்; (தருதல் - ஒரு துணைவினை);

வரம் தருபவன் வலஞ்சுழியனே - வரம் அருள்பவன் திருவலஞ்சுழியில் உறைகின்ற ஈசன்;


2)

மடந்தை பிரியா மணாள அளவைக்

கடந்த புகழாய் கரந்தை புனைவாய்

குடந்தை உறைவாய் குவிந்து தொழுதேன்

தொடர்ந்த வினையைத் துரத்தி அருளே!


மடந்தை பிரியா மணாள - உமை ஒரு பாகம் ஆன மணவாளனே; (மடந்தை - பெண்);

அளவைக் கடந்த புகழாய் - எல்லையற்ற புகழ் உடையவனே;

கரந்தை புனைவாய் - கரந்தையை அணிந்தவனே;

குடந்தை உறைவாய் - குடமூக்கில் (கும்பகோணத்தில்) உறைகின்றவனே;

குவிந்து தொழுதேன் - மனம் ஒன்றி வழிபட்டேன்;

தொடர்ந்த வினையைத் துரத்தி அருளே - என்னைத் தொடரும் வினைகளை அழித்து அருள்வாயாக;


3)

தராய்நகரிலும் தவத்துறையிலும்

பராய்த்துறையிலும் பயில்பரமனே

குராமுடியினாய் கொடும்பழவினை

இராவணமெனக் கிரங்கியருளே.


தராய்நகரிலும் தவத்துறையிலும் பராய்த்துறையிலும் பயில்-பரமனே - பூந்தராயிலும் (சீகாழி), திருத்தவத்துறையிலும் (லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயில்), திருப்பராய்த்துறையிலும் உறையும் பரமனே; (தராய் - பூந்தராய் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

குரா-முடியினாய் - குராமலரைச் சூடிய திருமுடியினனே;

கொடும்-பழவினை இராவணம் எனக்கு இரங்கி அருளே - கொடிய பழைய வினைகளெல்லாம் தீரும்படி எனக்கு இரங்கி அருள்க;


4)

எதிர்த்தமதமா உரித்தவிறலாய்

நதிச்சடையிலே நடுக்கமதிலாக்

கதிர்ப்பிறையினாய் கறுத்தமிடறா

துதித்தவரிடர் துடைத்தருளவே.


எதிர்த்த மதமா உரித்த விறலாய் - தாக்கிய மதயானையைத் தோலுரித்த வெற்றியினனே; (மதமா - யானை); (விறல் - வெற்றி; வீரம்);

நதிச்சடையிலே நடுக்கமது இலாக் கதிர்ப்-பிறையினாய் - கங்கையைத் தரித்த சடையில் பயம் தீர்ந்த வெண்பிறையைச் சூடியவனே; (நடுக்கம் - அச்சம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (கதிர் - ஒளி; கிரணம்);

கறுத்த மிடறா - கரிய கண்டனே; (அப்பர் தேவாரம் - 4.93.3 - "கறுத்த மிடறுடையான்");

துதித்தவர் இடர் துடைத்து அருளவே - துதிக்கும் அன்பர்களது இடர்களை நீக்கி அருள்வாயாக;

(அருள - அருள்க; - வியங்கோள் விகுதி); (- ஈற்றசை);


5)

மடக்கொடியனாள் தனைப்பிரிகிலாய்

விடைப்பிரியனே மிகப்புனிதனே

கடற்பெருவிடம் களத்திடவலாய்

அடைக்கலமெனக் களித்தருளிடே.


மடக்கொடி அனாள்-தனைப் பிரிகிலாய் - இளங்கொடி போன்ற உமையைப் பிரியாதவனே; (அனாள் - அன்னாள்);

விடைப்-பிரியனே - இடபத்தை ஊர்தியாக விரும்பியவனே;

மிகப் புனிதனே - பரிசுத்தனே;

கடற்-பெருவிடம் களத்து இட வலாய் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் இட்டவனே; (களம் - கண்டம்); (வலாய் - வல்லாய் - வல்லவனே);

அடைக்கலம் எனக்கு அளித்து அருளிடே - எனக்கு அடைக்கலம் தந்து காப்பாயாக;


6)

அணங்கையொருபால் அமர்ந்தபதியே

கணங்களிடையே நடங்கருதினாய்

மணங்கமழு(ம்)மா மலர்த்தொடையினாய்

வணங்குமடியேன் தனக்குமருளே.


அணங்கை ஒருபால் அமர்ந்த பதியே - உமையை ஒரு பக்கம் கூறாக விரும்பிய தலைவனே;

கணங்களிடையே நடம் கருதினாய் - பூதகணங்கள் சூழக் கூத்தாடுபவனே;

மணம் கமழு(ம்) மா-மலர்த்தொடையினாய் - வாசம் கமழும் அழகிய மலர்மாலையை அணிந்தவனே;

வணங்கும் அடியேன்-தனக்கும் அருளே - வணங்குகின்ற எனக்கும் அருள்வாயாக;


7)

செழும்பவளமார் திருச்சடையினாய்

எழும்பொழுதுநின் இணைக்கழல்நினை

தொழும்புடையவர்க் கருந்துணைவனே

அழுந்துவினையேற் கருள்புரிகவே.


செழும்-பவளம் ஆர் திருச்சடையினாய் - செழுமையான பவளம் போன்ற சடையை உடையவனே;

எழும் பொழுது நின் இணைக்கழல் நினை - துயிலெழும்பொழுது உன் இரு-திருவடிகளை நினைக்கின்ற; (இணைக்கழனினை - இணைக்கழல் நினை);

தொழும்பு உடையவர்க்கு அரும்-துணைவனே - அடிமை உடைய பக்தர்களுக்கு அரிய துணை ஆனவனே; (தொழும்பு - அடிமை);

அழுந்து வினையேற்கு அருள்புரிகவே - வினையில் ஆழும் எனக்கு அருள்வாயாக;


8)

விரித்தசடைமேல் விளங்கமதியைத்

தரித்தசதுரா தகாதவரெயில்

எரித்தநகையாய் இராவணனழ

நெரித்தகழலே நினைக்கவருளே.


விரித்த சடைமேல் விளங்க மதியைத் தரித்த சதுரா - விரித்த சடையின்மேல் சந்திரனை ஒளிவீசும்படி அணிந்த வல்லவனே;

தகாதவர் எயில் எரித்த நகையாய் - அசுரர்களது முப்புரங்களைச் சிரித்து எரித்தவனே;

இராவணன் அழ நெரித்த கழலே நினைக்க அருளே - இராவணன் அழும்படி அவனை நசுக்கிய உன் திருவடியையே நான் நினைக்கும்படி அருள்வாயாக; (நெரித்தல் - நசுக்குதல்);


9)

அயன்முகில்நிறத் தரிக்கரியவன்

புயங்கனொளிரும் பொடிப்புனைபவன்

கயம்புரிசடைக் கரந்தருளினான்

சுயம்புதனைநீர் தொழீர்மகிழவே.


அயன் முகில்-நிறத்து அரிக்கு அரியவன் - பிரமனாலும் மேகம் போன்ற நிறமுடைய திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்; (முகினிறத்தரி - முகில் நிறத்து அரி; சந்தியோடு நோக்கில் சந்தம் கெடாமையைக் காண்க);

புயங்கன் - பாம்புகளை அணிந்தவன்; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு);

ஒளிரும் பொடிப் புனைபவன் - ஒளியுடைய திருநீற்றைப் பூசியவன்; (இலக்கணக் குறிப்பு : குறிலிணைச் சொற்கள் வருமிடத்தில் வல்லொற்று மிகுவதும் உண்டு; தேவாரத்தில் "பொடிப்பூசி" என்று பல இடங்களில் வரக் காணலாம். அப்பர் தேவாரம் - 5.14.8 - "வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்");

கயம் புரிசடைக் கரந்து அருளினான் - கங்கையை முறுக்கிய சடையில் ஒளித்தவன்; (கயம் - நீர்நிலை); (கரத்தல் - மறைத்தல்);

சுயம்புதனை நீர் தொழீர் மகிழவே - சுயம்புமூர்த்தியாகிய அப்பெருமானை நீங்கள் தொழுங்கள்; இன்புறலாம்;


10)

தொழாத்துரிசினர் சொலைக்கருதிடேல்

விழாமலிதரும் வியன்மயிலையான்

குழாம்புகிலினிக் கொடும்பிறவிகள்

எழாவண(ம்)நமக் கிரங்குமவனே.


தொழாத் துரிசினர் சொலைக் கருதிடேல் - ஈசனை வழிபடாத குற்றமுடையவர்கள் பேசும் பேச்சை மதிக்கவேண்டா; (துரிசு - குற்றம்); (சொலை - சொல்லை);

விழா மலிதரும் வியன் மயிலையான் குழாம் புகில் - பல விழாக்கள் கொண்டாடப்பெறும் பெருமைமிக்க மயிலாப்பூரில் உறையும் பெருமானது அடியார்-குழாத்தைச் சேர்ந்தால்; (வியன் - பெருமை; சிறப்பு);

இனிக் கொடும்-பிறவிகள் எழாவண(ம்) நமக்கு இரங்கும் அவனே - இனிமேல் கொடிய பிறவிகள் வாராதபடி நமக்கு இரங்கி வினைகளைத் தீர்த்து அருள்வான் அப்பெருமான்; (வணம் - வண்ணம்); (இரங்கும் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


11)

அழற்சடையில்நீர் அடைத்தசதுரன்

மழுப்படையினான் மலைச்சிலையினான்

கழுத்ததனிலோர் கறுத்தமணியான்

வழுத்துமடியார் மனத்துறைவனே.


அழற்சடையில் நீர் அடைத்த சதுரன் - தீப் போன்ற செஞ்சடையில் கங்கையை அடைத்த ஆற்றலுடையவன்; (சடையினீர் - சடையில் நீர்);

மழுப்படையினான் - மழுவை ஏந்தியவன்;

மலைச்சிலையினான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 2.73.8 - "திரிபுரங்கள் செற்ற மலைச்சிலையனூரே");

கழுத்து அதனில் ஓர் கறுத்த மணியான் - கண்டத்தில் ஒப்பற்ற நீலமணியை உடையவன்;

வழுத்தும் அடியார் மனத்து உறைவனே - அப்பெருமான் துதிக்கும் பக்தர்களது நெஞ்சில் உறைவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment