Monday, April 27, 2026

P.472 - இடைமருதூர் - இருபொழுது இலைமலர்

2019-06-11

P.472 - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")


முற்குறிப்பு: படிப்போர் வசதி கருதிச் சந்தம் கெடாத இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

1)

இருபொழு திலைமலர் இவைகொடு தொழுபவர்

அருவினை அறவினி தருளரன் எரியன

உருவினன் அரிவையை ஒருபுறம் உடையவன்

எருதமர் இறையிடம் இடைமரு ததுவே.


பதம் பிரித்து:

இருபொழுது இலை மலர் இவைகொடு தொழுபவர்

அரு-வினை அற இனிது அருள் அரன்; எரி அன

உருவினன்; அரிவையை ஒரு-புறம் உடையவன்;

எருது அமர் இறை இடம் இடைமருது அதுவே.


காலையும் மாலையும் (வில்வம் வன்னி முதலிய) இலைகளாலும் பூக்களாலும் வழிபடும் பக்தர்களது அரிய வினை தீர இன்னருள் புரியும் ஹரன்; தீப் போன்ற செம்மேனியன்; உமையை இடப்பக்கம் பாகமாக உடையவன்; இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;

(எரி - தீ); (அரிவை - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.74.1 - "காடு பயில் வீடு ... வேதியர் திருந்து-பதிதான் ... தேவூர் அதுவே");


2)

நீறணி அடியவர் நினைவன அருள்துணை

தேறலர் திரிபுரம் எரிதிரு நகையினன்

ஆறர விளமதி அணிசடை முடியினன்

ஏறமர் இறையிடம் இடைமரு ததுவே.


நீறு அணி அடியவர் நினைவ அருள் துணை - திருநீற்றைப் பூசிய அடியார்கள் எண்ணிய வரங்களை அருளும் துணைவன்; (துணை - துணைவன்); (அருள்+துணை = அருடுணை என்று புணரும்; சந்தம் கெடாது);

தேறலர் திரிபுரம் எரி திரு-நகையினன் - பகைவர்களது முப்புரங்களை எரித்த சிரிப்பினன்; (தேறலர் - பகைவர்);

ஆறு, அரவு, இளமதி அணி சடை முடியினன் - கங்கை, பாம்பு, இளம்பிறை இவற்றை அணிந்த சடைமுடி உடையவன்;

ஏறு அமர் இறை இடம் இடைமருது அதுவே - இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அமர்தல் - விரும்புதல்);


3)

தொடுமலர் கொடுகழல் தொழுதெழும் அடியவர்

படுதுயர் பழவினை பறைதர அருள்பவன்

அடுபுலி அதளினன் நடுவிருள் தனில்நடம்

இடுமிறை யவனிடம் இடைமரு ததுவே.


தொடு-மலர்-கொடு கழல் தொழுதெழும் அடியவர் படுதுயர் பழவினை பறைதர அருள்பவன் - தொடுத்த மலரால் திருவடியை வழிபடும் அடியார்களது கொடிய துன்பங்களும் பழைய வினைகளும் அழிய அருள்பவன்; (தொடுமலர் - தொடுத்த பூ); (பறைதல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை);

அடு-புலி அதளினன் - கொல்லும் இயல்புடைய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (அடுதல் - கொல்தல்); (அதள் - தோல்);

நடுவிருள்தனில் நடம் இடும் இறை அவன் இடம் இடைமருது அதுவே - நள்ளிருளில் கூத்து ஆடும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (இறை - இறைவன்; அவன் - பகுதிபொருள்விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "நடுவிருள் ஆடும் எந்தை");


4)

ஓர்ந்தவர் இருவினை ஒழியரன்; மனமது

சோர்ந்தடி தொழுதெழு சுரரவர் துயர்கெட

ஆர்ந்தவன் அருவிடம்; அயிலுறு மழுவினை

ஏந்திய இறையிடம் இடைமரு ததுவே.


ஓர்ந்தவர் இருவினை ஒழி-அரன் - தியானிக்கும் அடியார்களது இருவினையைத் தீர்க்கும் ஹரன்; (ஓர்தல் - எண்ணுதல்);

மனமது சோர்ந்து அடி தொழுதெழு சுரர்-அவர் துயர் கெட ஆர்ந்தவன் அருவிடம் - மனம் தளர்ந்து திருவடியை வணங்கிய தேவர்களது துன்பம் தீர அரிய விஷத்தை உண்டவன்; (ஆர்தல் - உண்தல்);

அயில்-உறு மழுவினை ஏந்திய இறை இடம் இடைமருது அதுவே - கூர்மையான மழுவை ஏந்திய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அயில் - கூர்மை);


5)

கரியதன் உரிபுனை பெரியவன் எளியவன்

அரியவன் எனநிகழ் அதிசயன் அலைமலி

புரிசடை மிசைமதி பொலியரன் மழுமறி

எரிதரி இறையிடம் இடைமரு ததுவே.


கரி-அதன் உரி புனை பெரியவன் - யானைத்தோலைப் போர்த்த பெரியோன்; (கரி - யானை); (உரி - தோல்);

எளியவன் அரியவன் என நிகழ் அதிசயன் - (அடியார்களல்) எளிதில் அடையப்படுபவனும் (மற்றவர்களால்) அடைய இயலாதவனும் ஆன அதிசயத்தன்மை உடையவன்; (நிகழ்தல் - விளங்குதல்);

அலை மலி புரி-சடைமிசை மதி பொலி-அரன் - (கங்கையின்) அலை மிகுந்த சுருண்ட சடையில் திங்கள் திகழ்கின்ற ஹரன்; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

மழு மறி எரி தரி இறை இடம் இடைமருது அதுவே - மழு, மான்கன்று, தீ இவற்றை ஏந்திய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (மறி - மான்கன்று); (எரி - நெருப்பு);


6)

கைதொழும் அடியவர் கருதின தருபவன்

மைதிகழ் உடலுடை மறலியை விழவுதை

செய்தவன் நணுகலர் திரிபுரம் எரியெழ

எய்தருள் இறையிடம் இடைமரு ததுவே.


கைதொழும் அடியவர் கருதின தருபவன் - வணங்கும் அடியார்கள் எண்ணிய வரங்களை அருள்பவன்;

மை திகழ் உடலுடை மறலியை விழ உதை செய்தவன் - கரிய உடலுடைய இயமனை அவன் இறந்து விழும்படி உதைத்தவன்; (மை - கருநிறம்); (மறலி - இயமன்); (விழுதல் - தரையில் விழுதல்; சாதல்); (அப்பர் தேவாரம் - 4.107.1 - "இருட்டிய மேனி ... வெங் கூற்றம் பதைப்ப உதைத்து");

நணுகலர் திரிபுரம் எரி எழ எய்து-அருள் இறை இடம் இடைமருது அதுவே - பகைவர்களது முப்புரங்களில் தீயெழும்படி ஒரு கணை எய்து அருளிய இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (நணுகலர் - பகைவர்);


7)

கொய்ம்மலர் கொடுதொழும் அடியவர் குறைதவிர்

செம்மலை எனவெழில் திகழ்தரும் உருவினன்

மும்மலம் இலனணி இளமதி புனைபவன்

எம்மிறை அவனிடம் இடைமரு ததுவே.


கொய்ம்-மலர்-கொடு தொழும் அடியவர் குறை தவிர் - பறித்த பூக்களால் தொழும் அடியார்களது குறைகளைத் தீர்க்கும்;

செம்-மலை என எழில் திகழ்தரும் உருவினன் - செந்நிறம் திகழும் மலை போன்ற அழகு திகழும் வடிவினன்; (தருதல் - ஒரு துணைவினை);

மும்மலம் இலன் - இயல்பாகவே மும்மலங்களும் இல்லாதவன்;

அணி இளமதி புனைபவன் - அழகிய இளந்திங்களை அணிந்தவன்;

எம் இறை அவன் இடம் இடைமருது அதுவே - எம் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


8)

மலைபெயர் தசமுகன் வலிகெட நிறுவிய

மலரடி விரலினன் மணிதிகழ் மிடறினன்

அலைதிகழ் சடைமிசை அளியறை நறைமலர்

இலையணி இறையிடம் இடைமரு ததுவே.


மலை பெயர் தசமுகன் வலி கெட நிறுவிய மலரடி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிமை அழியும்படி மலர்ப்பாத-விரல் ஒன்றை ஊன்றியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.20.8 - "தசமுகனது கரமிருபது நெரிதர விரல் நிறுவிய கழலடி யுடையவன்");

மணி திகழ் மிடறினன் - கண்டத்தில் நீலமணி உடையவன்; (மிடறு - கண்டம்);

அலை திகழ் சடைமிசை அளி அறை நறை-மலர் இலை அணி இறை இடம் இடைமருது அதுவே - கங்கை திகழும் சடையில் வண்டுகள் ஒலிக்கும் தேன்மலர்களையும், (வில்வம் வன்னி முதலிய) இலைகளையும் அணிந்த இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (அளி - வண்டு); (நறை - தேன்);


9)

கண்ணனும் அழகிய கடிமலர் மிசையுறை

அண்ணலும் அயர்வுற அழலென உயர்பரன்

மண்ணினர் இமையவர் மலர்கொடு வழிபடும்

எண்ணுரு வினனிடம் இடைமரு ததுவே.


கண்ணனும் அழகிய கடி-மலர்மிசை உறை அண்ணலும் அயர்வுற அழல் என உயர்-பரன் - திருமாலும் அழகிய வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமனும் (அடிமுடி தேடித்) தளரும்படி ஜோதியாகி ஓங்கிய பரமன்; (கடி - வாசனை); (அழல் - தீ);

மண்ணினர் இமையவர் மலர்கொடு வழிபடும் - மண்ணுலகினரும் தேவரும் பூக்களால் வழிபாடு செய்கின்ற;

எண்-உருவினன் இடம் இடைமருது அதுவே - அஷ்டமூர்த்தம் உடைய (/ எண்ணிய வடிவங்கள் உடைய) இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


10)

கைதவம் உடையவர் கலதிகள் உரைபல

பொய்களை விலகுமின் நலமருள் புரிபவன்

மைதிகழ் மிடறினன் வரிசிலை கொடுபுரம்

எய்தவன் உறைவிடம் இடைமரு ததுவே.


கைதவம் உடையவர் கலதிகள் உரை பல பொய்களை விலகுமின் - வஞ்சகம் உடையவர்களும் தீயோர்களும் சொல்லும் பல பொய்களை நீங்குங்கள்; (கைதவம் - வஞ்சகம்; கபடம்); (கலதி - தீயோன்);

நலம் அருள் புரிபவன் - நன்மை அருள்பவன்;

மை திகழ் மிடறினன் - நீலகண்டன்; (மை - கறுப்பு); (மிடறு - கண்டம்);

வரி-சிலை-கொடு புரம் எய்தவன் உறைவிடம் இடைமருது அதுவே - (நாணைக்) கட்டிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்த இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்; (வரிதல் - கட்டுதல்); (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 1.120.3 - "வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர் எரிந்தற எய்தவன்");


11)

அடைபவர் அருவினை அறவருள் புரிபவன்

விடமணி மிடறினன் விரிசடை முடியினன்

அடல்விடை உடையவன் அழகிய உமைதனை

இட(ம்)மகிழ் இறையிடம் இடைமரு ததுவே.


அடைபவர் அரு-வினை அற அருள் புரிபவன் - சரண்புகுந்தவர்களது அரிய வினை தீர அருள்செய்பவன்;

விடமணி மிடறினன் - ஆலகாலத்தை அணிந்த கண்டன்; விஷத்தால் ஆன மணி இருக்கும் கண்டன்; (விடமணி - 1. விடம் அணி; 2. விட-மணி = விஷ-மணி);

விரி-சடை முடியினன் - விரித்த சடைமுடி உடையவன்;

அடல்-விடை உடையவன் - வலிய எருதை வாகனமாக உடையவன்; (அடல் - வலிமை; போர்; வெற்றி);

அழகிய உமைதனை இட(ம்) மகிழ் இறை இடம் இடைமருது அதுவே - அழகிய உமாதேவியை இடப்பாகமாக மகிழும் இறைவன் உறையும் தலம் திருவிடைமருதூர்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

  • சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

  • முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

  • பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

  • முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் - 1.123.1 - "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்"

சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை கொளமிகு கரியது"


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment