2020-09-02
P.517 - நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்)
-----------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)
(அப்பர் தேவாரம் - 5.65.1 - "பூவனூர்ப் புனிதன்")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
மெல்லி டைக்கொடி வெண்ணீற் றுமைமாது
புல்கு மார்பினன் பொல்லா விடமுண்ட
நல்லன் நல்லூர்ப் பெருமணத் தானடி
வல்ல வாறு தொழவினை மாயுமே.
மெல்லிடைக்கொடி வெண்ணீற்றுமைமாது புல்கு மார்பினன் - மெல்லிடையை உடையவளும் கொடி போன்றவளும் வெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமம் உடையவளுமான உமாதேவியைத் தழுவிய மார்பை உடையவன்; (புல்குதல் - தழுவுதல்; அணைத்தல்); (* வெண்ணீற்று உமையம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்); (சம்பந்தர் தேவாரம் - 1.11.1 - "மடமான்விழி உமைமாதிடம் உடையான்")
பொல்லா-விடம் உண்ட நல்லன் - கொடிய ஆலகாலத்தை உண்டருளிய நல்லவன்;
நல்லூர்ப் பெருமணத்தான் அடி வல்லவாறு தொழ வினை மாயுமே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற சிவனது திருவடியை இயன்ற அளவு தொழுதால் நம் வினைகள் அழியும்; (அப்பர் தேவாரம் - 5.43.6 - "வல்லவாறு சிவாயநம என்று நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே");
2)
அம்பி னால்மூ வரணெரி செய்தவன்
வம்பு நாறு மலர்க்கொன்றை சூடிய
நம்பன் நல்லூர்ப் பெருமணம் மேவிய
எம்பி ரானடி ஏத்துதல் இன்பமே.
அம்பினால் மூ-அரண் எரிசெய்தவன் - ஓர் அம்பால் முப்புரங்களை எரித்தவன்;
வம்பு நாறு மலர்க்கொன்றை சூடிய நம்பன் - வாசம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன், நம்பன் என்ற திருநாமம் உடையவன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
நல்லூர்ப் பெருமணம் மேவிய எம்பிரான் அடி ஏத்துதல் இன்பமே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற எம்பெருமானான சிவனது திருவடியைத் துதித்தலே இன்பம்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "சிற்றம்பல(ம்) மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே");
3)
காதல் மாதொடு காழியர் கோன்புகச்
சோதி காட்டிய சுந்தரன் தொல்புகழ்
நாதன் நல்லூர்ப் பெருமணத் தோடொரு
காதன் சேவடி கைதொழு துய்ம்மினே.
காதல்-மாதொடு காழியர்கோன் புகச் சோதி காட்டிய சுந்தரன் - அன்புடைய மனைவியோடு திருஞான சம்பந்தர் உள்ளே புகும்படி சிவஜோதியைக் காட்டிய அழகன்;
தொல்புகழ் நாதன் - தொன்மையான புகழை உடைய தலைவன்;
நல்லூர்ப் பெருமணத் தோடு ஒரு காதன் சேவடி கைதொழுது உய்ம்மினே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்றவனும் ஒரு காதில் தோடு அணிந்தவனுமான (= அர்த்தநாரீஸ்வரனான) சிவனது சிவந்த திருவடியை வழிபட்டு உய்யுங்கள்;
4)
தேச னைச்சிவ லோகத் தியாகனை
நேச னைத்திரு நீற்றனை நம்வினை
நாச னைத்திரு நல்லூர்ப் பெருமணத்
தீச னைத்தினம் எண்ணு மடநெஞ்சே.
தேசனைச் - ஒளியுருவினனை;
சிவலோகத் தியாகனை - சிவலோகத்தை அளிப்பவனை; (* சிவலோகத் தியாகர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);
நேசனைத் - அன்புடையவனை;
திருநீற்றனை - திருநீற்றைப் பூசியவனை;
நம் வினை-நாசனைத் - நம் வினையையெல்லாம் அழிப்பவனை;
திருநல்லூர்ப் பெருமணத்து ஈசனைத் தினம் எண்ணு மடநெஞ்சே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற ஈசனை, என் பேதைநெஞ்சமே, நீ நாள்தோறும் நினை;
5)
தக்க னைத்தலை வெட்டிய தேவனை
அக்கி னைப்புனை செல்வனை அண்ணலை
நக்க னைத்திரு நல்லூர்ப் பெருமணச்
சொக்க னைத்தொழத் தொல்வினை தீருமே.
தக்கனைத் தலை வெட்டிய தேவனை - தக்கனது வேள்வியை அழித்து அவன் தலையை அரிந்த தேவனை;
அக்கினைப் புனை செல்வனை - எலும்பை அணியும் செல்வனை; (அக்கு - எலும்பு);
அண்ணலை - தலைவனை;
நக்கனைத் - திகம்பரனை;
திருநல்லூர்ப் பெருமணச் சொக்கனைத் தொழத் தொல்வினை தீருமே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற அழகனை வழிபட்டால் நம் பழவினைகள் அழியும்;
6)
ஏறு காட்டிய வெல்கொடி ஏந்தலை
நீறு பூசு(ம்) நிமலனை மாமலர்
நாறு சோலைசூழ் நல்லூர்ப் பெருமணத்(து)
ஆறு சூடியை ஆதரி நெஞ்சமே.
ஏறு காட்டிய வெல்கொடி ஏந்தலை - இடபச்சின்னம் திகழும் வெற்றிக்கொடியை உடைய பெருமையனை;
நீறு பூசு(ம்) நிமலனை - திருநீற்றைப் பூசிய தூயனை;
மாமலர் நாறு சோலை சூழ் நல்லூர்ப் பெருமணத்து - அழகிய மலர்கள் மணம் கமழும் பொழில் சூழ்ந்த நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற;
ஆறு-சூடியை ஆதரி நெஞ்சமே - கங்காதரனை, விரும்பு என் மனமே; (ஆதரித்தல் - விரும்புதல்; அன்புசெய்தல்); (அப்பர் தேவாரம் - 6.67.3 - "ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் விளைவானை");
7)
துட்டர் முப்புரம் சுட்ட சிலையனை
வட்ட வெல்படை மாற்கருள் வள்ளலை
நட்டம் ஆடியை நல்லூர்ப் பெருமண
அட்ட மூர்த்தியை அன்புசெய் நெஞ்சமே.
துட்டர் முப்புரம் சுட்ட சிலையனை - துஷ்டர்களது முப்புரங்களை வில்லேந்தி எரித்தவனை; (சிலை - வில்);
வட்ட வெல்-படை மாற்கருள் வள்ளலை - வட்டமான வெல்கின்ற சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருள்செய்த வள்ளலை; (படை - ஆயுதம்); (திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.80 - "நாட்டம் இட்டு அன்று அரி வந்திப்ப வெல்படை நல்கினர்");
நட்டம் ஆடியை - கூத்தனை; (நட்டம் - கூத்து);
நல்லூர்ப் பெருமண அட்டமூர்த்தியை அன்புசெய் நெஞ்சமே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற எண்வடிவ ஈசனைப் பக்திசெய் மனமே; (அட்டமூர்த்தி - அஷ்டமூர்த்தி - ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு மூர்த்தங்களை உடையவன்);
8)
போரி லாத அரக்கன் பொருப்பின்கீழ்
வீரி டத்தான் விரலினை ஊன்றிய
நாரி பங்கினன் நல்லூர்ப் பெருமண
ஆரி யன்கழல் ஆரிடர் தீர்க்குமே.
போர் இலாத அரக்கன் பொருப்பின்கீழ் வீரிடத்தான் விரலினை ஊன்றிய நாரிபங்கினன் - தன்னை எதிர்ப்பார் எவரும் இல்லாத அரக்கனான இராவணன் கயிலைமலையின்கீழ் வீரிட்டு அழும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய உமைபங்கன்; (வீரிடுதல் - திடீரெனக் கத்துதல்); (பொருப்பு - மலை); (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன்);
நல்லூர்ப் பெருமண ஆரியன் கழல் ஆரிடர் தீர்க்குமே - நல்லூர்ப் பெருமணம் என்ற தலத்தில் உறைகின்ற பெரியோனான சிவபெருமானது திருவடி நம் பெருந்துன்பத்தைத் தீர்க்கும்; (ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");
9)
மாலு(ம்) மாமல ரானும் அடியொடு
மேலும் காணா விமலனை வேதங்கள்
நாலும் ஓதிய நல்லூர்ப் பெருமண
நீல கண்டனை நித்தல் நினைநெஞ்சே.
மாலு(ம்) மாமலரானும் அடியொடு மேலும் காணா விமலனை - திருமாலாலும் தாமரைமேல் இருக்கும் பிரமனாலும் அடியும் முடியும் காண இயலாதபடி ஓங்கிய தூயவனை;
வேதங்கள் நாலும் ஓதிய - நான்மறைகளைப் பாடியருளிய; நால்வேதங்களும் போற்றிப் பாடுகின்ற;
நல்லூர்ப் பெருமண நீலகண்டனை நித்தல் நினை நெஞ்சே - நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற நீலகண்டனை, நெஞ்சே நீ நாள்தோறும் நினை; (நித்தல் - எந்நாளும்);
10)
வஞ்ச நெஞ்சினர் வார்த்தையை நீங்குமின்
அஞ்சு மாணியின் ஆருயிர் காத்தவன்
நஞ்சை உண்டவன் நல்லூர்ப் பெருமண
மஞ்சன் வார்கழல் வாழ்த்தினார்க் கின்பமே.
வஞ்ச-நெஞ்சினர் வார்த்தையை நீங்குமின் - பொய்ம்மொழி பேசி வஞ்சிக்கும் மனத்தினர் சொல்லும் வார்த்தைகளை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);
அஞ்சு-மாணியின் ஆருயிர் காத்தவன் - அஞ்சிய மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்துக் காலனை உதைத்தவன்;
நஞ்சை உண்டவன் - ஆலகாலத்தை உண்டருளியவன்;
நல்லூர்ப் பெருமண மஞ்சன் வார்கழல் வாழ்த்தினார்க்கு இன்பமே - நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற வீர்னான சிவபெருமானது நீண்ட கழல் அணிந்த திருவடியை வாழ்த்தும் அன்பர்களுக்கு என்றும் இன்பமே; (மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம்); (அப்பர் தேவாரம்- 4.47.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்"); (வார்தல் - நீள்தல்);
11)
திங்கள் கொன்றை திரைநதி கூவிளம்
பொங்க ராவிவை புன்சடைச் சூடினான்
நங்கை பங்கினன் நல்லூர்ப் பெருமண
அங்க ணன்தமர்க் கல்லலொன் றில்லையே.
திங்கள் கொன்றை திரைநதி கூவிளம் பொங்கு-அரா இவை புன்சடைச் சூடினான் - சந்திரன், கொன்றைமலர், அலையுடைய கங்கை, வில்வம், சீறும் பாம்பு இவற்றைச் செஞ்சடையில் அணிந்தவன்; (திரை - அலை); (அரா - பாம்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.106.1 - "படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை"); (சம்பந்தர் தேவாரம் - 2.78.5 - "திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்");
நங்கை-பங்கினன் - உமைபங்கன்;
நல்லூர்ப் பெருமண அங்கணன் தமர்க்கு அல்லல் ஒன்று இல்லையே - நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்றவனும் அருள்நோக்கம் உடையவனுமான சிவபெருமானது அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை; (தமர் - சுற்றத்தார்); (அப்பர் தேவாரம் - 5.92.5 - "பிறையும் பாம்புமுடைப் பெருமான்தமர்");
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment