Friday, October 16, 2026

P.522 - மீயச்சூர் - சங்கடம் தீர்த்தருள்

2020-09-16

P.522 - மீயச்சூர்

-----------

(அறுசீர் விருத்தம் - தானனா தானனா தானனா தானனா தான தானா - சந்தம்)

(விளம் விளம் விளம் விளம் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே");


முற்குறிப்புகள்:

1. இத்தலத்தின் கருவறைக் கோஷ்டத்தில் இருக்கும் க்ஷேத்ரபுராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அழகு! சடையில் கங்கையைத் தாங்கிய ஈசன் உமையைச் சமாதானப்படுத்துவது போன்ற காட்சி.

2. இப்பதிகத்தின் எல்லாப் பாடல்களிலும் உமாதேவியும் கங்கையும் உள்ளனர்.


1)

சங்கடம் தீர்த்தருள் சங்கர என்பவர் தமக்கு நல்லன்

சங்கணி கையினள் சவுந்தர நாயகி தன்ம ணாளன்

திங்களைச் சூடிய செஞ்சடைக் கங்கையைத் தேக்க வல்லான்

வெங்கரி உரித்தவன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


"சங்கடம் தீர்த்தருள் சங்கர" என்பவர் தமக்கு நல்லன் - "கஷ்டத்தைத் தீர்த்தருள் சங்கரனே" என்று தொழும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

சங்கு அணி கையினள் சவுந்தரநாயகி தன் மணாளன் - வளையல் அணிந்த கையையுடைய சௌந்தரநாயகிக்குக் கணவன்; (சங்கு - கைவளை); (* சௌந்தரநாயகி - லலிதாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);

திங்களைச் சூடிய செஞ்சடைக் கங்கையைத் தேக்க-வல்லான் - சந்திரனை அணிந்த சிவந்த சடையில் கங்கையைத் தடுத்து நிறுத்தியவன்;

வெங்கரி உரித்தவன் - கொடிய யானையின் தோலை உரித்தவன்; (வெம்மை - கொடுமை);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


2)

கண்பனித் திடவிரு கழல்தொழும் அன்பரைக் காக்கும் அண்ணல்

தண்புனல் உலவிடும் சடையினில் கொன்றையன் சாம வேதன்

பெண்புடை காட்டிடும் பெரியவன் முருகனைப் பெற்ற தந்தை

வெண்பொடி மேனியன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


கண் பனித்திட இருகழல் தொழும் அன்பரைக் காக்கும் அண்ணல் - கண்ணீர் கசிய உருகி இருதிருவடிகளைத் தொழும் பக்தர்களைக் காக்கும் தலைவன்;

தண்புனல் உலவிடும் சடையினில் கொன்றையன் - குளிர்ந்த கங்கை உலவும் சடையில் கொன்றைமலரை அணிந்தவன்;

சாமவேதன் - சாமவேதப் பிரியன்;

பெண் புடை காட்டிடும் பெரியவன் - உமையை ஒரு பக்கம் காட்டும் பெருமான்;

முருகனைப் பெற்ற தந்தை - முருகனுக்கு அப்பன்;

வெண்பொடி மேனியன் - திருநீற்றை மேனியில் பூசியவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


3)

துரிசறு நெஞ்சொடு தொழுமவர் தொல்வினை துடைக்கும் ஐயன்

எரிசரம் கொடுபுரம் எய்தவன் மழவிடை ஏறும் ஈசன்

சுரிகுழல் உமையொரு பங்கென மகிழ்பவன் தோயம் ஆரும்

விரிசடை வித்தகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


துரிசு-அறு நெஞ்சொடு தொழும்அவர் தொல்வினை துடைக்கும் ஐயன் - குற்றமற்ற நெஞ்சோடு வழிபடும் பக்தர்களது பழைய வினையைத் தீர்க்கும் தலைவன்; (துரிசு - குற்றம்);

எரிசரம்கொடு புரம் எய்தவன் - எரிக்கும் கணையால் முப்புரங்களை எய்தவன்; (சரம் - அம்பு);

மழவிடை ஏறும் ஈசன் - இளைய எருதை வாகனமாக உடைய ஈசன்;

சுரிகுழல் உமை ஒரு பங்கு என மகிழ்பவன் - சுருண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்காக விரும்பியவன்; (சுரிதல் - சுருள்தல்);

தோயம் ஆரும் விரிசடை வித்தகன் - கங்கை பொருந்திய விரிந்த சடையை உடைய ஆற்றல் மிக்கவன்; (தோயம் - நீர்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


4)

சொற்பெரு மாலைகள் சூட்டினார்க் கன்புடைத் துணைவன் எம்மான்

விற்பெரு விறலுடை விசயனுக் கருளிய வேடன் நீரார்

பொற்சடைப் புண்ணியன் மங்கையோர் பங்கினன் புரமெ ரிக்க

வெற்புவில் ஏந்தினான் மேவிய நன்னகர் மீயச் சூரே.


சொற்பெரு மாலைகள் சூட்டினார்க்கு அன்புடைத் துணைவன் எம்மான் - சிறந்த சொல்மாலைகள் சூட்டும் பக்தர்களுக்கு அன்பு உடைய துணைவன் எம்பெருமான்;

விற்-பெருவிறலுடை விசயனுக்கு அருளிய வேடன் - பெரிய வில்வீரனான அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருள வேடன் உருவில் சென்றவன்; (விறல் - வெற்றி; வீரம்);

நீர் ஆர் பொற்சடைப் புண்ணியன் - பொன் போன்ற சடையில் கங்கையை உடையவன்;

மங்கை ஓர் பங்கினன் - உமையொருபங்கன்;

புரம் எரிக்க வெற்புவில் ஏந்தினான் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


5)

அஞ்செழுத் தோதிடும் அன்பருக் கின்பமே அருளும் அண்ணல்

பஞ்சன மெல்லடிப் பாவையோர் பங்கினன் பாய்ந்த கங்கை

செஞ்சடைக் கரந்தவன் கொன்றிடும் கூற்றினைச் செற்ற பாதன்

வெஞ்சின விடையினன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


அஞ்செழுத்து ஓதிடும் அன்பருக்கு இன்பமே அருளும் அண்ணல் - திருவைந்தெழுத்தை ஓதும் பக்தர்களுக்கு இன்பமே அருளும் தலைவன்;

பஞ்சு அன மெல்-அடிப் பாவை ஓர் பங்கினன் - பஞ்சு போன்ற மென்மையான பாதத்தை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

பாய்ந்த கங்கை செஞ்சடைக் கரந்தவன் - பாய்ந்து வந்த கங்கையைச் செஞ்சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - மறைத்தல்);

கொன்றிடும் கூற்றினைச் செற்ற பாதன் - கொல்லும் கூற்றுவனை உதைத்து அழித்த திருப்பாதன்;

வெஞ்சின விடையினன் - மிகவும் சினமுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


6)

ஆற்றவும் அன்பினால் அடிதொழும் அன்பர்தம் அல்லல் தீர்ப்பான்

தோற்றமும் கேடிலான் சுடர்மழு வாளினன் தோகை பங்கன்

ஆற்றினைச் சூடினான் அருமறை விரித்திட ஆல நீழல்

வீற்றருள் ஆரியன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


ஆற்றவும் அன்பினால் அடிதொழும் அன்பர்தம் அல்லல் தீர்ப்பான் - மிகவும் அன்போடு வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (ஆற்ற - மிக);

தோற்றமும் கேடு இலான் - பிறப்பும் இறப்பும் அற்றவன்; (கேடு - கேடும்; உம் தொக்கது); (அப்பர் தேவாரம் - 4.38.9 - "ஆதியும் அந்தம் வைத்தார்");

சுடர்-மழுவாளினன் - பிரகாசிக்கும் மழுவாயுதத்தை உடையவன்; (நெருப்பையும் மழுவையும் ஏந்தியவன் என்றும் பொருள்கொள்ளலாம்); (சுடர்தல் - ஒளிவிடுதல்; சுடர் - நெருப்பு);

தோகை-பங்கன் - உமைபங்கன்; (தோகை - பெண்);

ஆற்றினைச் சூடினான் - கங்காதரன்;

அருமறை விரித்திட ஆலநீழல் வீற்றருள் ஆரியன் - அரிய மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி; (ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


7)

சூழ்பவர் தம்வினைத் துயரறுத் தருளிடும் சூல பாணி

ஆழ்கடல் நஞ்சினை அமுதுசெய் தருளிய அணிமி டற்றன்

கேழ்கிளர் மேனியில் மாதொரு பாதியன் கெங்கை தாங்கும்

வீழ்சடைப் பிஞ்ஞகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


சூழ்பவர்தம் வினைத்துயர் அறுத்து அருளிடும் சூலபாணி - வலம்செய்யும் பக்தர்களது வினைத்துன்பத்தைத் தீர்த்து அருளும் சூலபாணி;

ஆழ்கடல் நஞ்சினை அமுதுசெய்து அருளிய அணி மிடற்றன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு அருளிய அழகிய கண்டத்தை உடையவன்;

கேழ் கிளர் மேனியில் மாது ஒரு பாதியன் - ஒளி திகழும் மேனியில் உமையை ஒரு பாதியாக உடையவன்; (கேழ் - ஒளி);

கெங்கை தாங்கும் வீழ்சடைப் பிஞ்ஞகன் - கங்கையைத் தாங்கிய, தொங்கும் சடையை உடைய தலைக்கோலம் உடையவன்; (கெங்கை - கங்கை); (அப்பர் தேவாரம் - 4.10.6 - "தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே"); (சம்பந்தர் தேவாரம் - 1.57.4 - "கங்கை கரந்தவன் வீழ்சடையினன்");

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


8)

வெள்ளிமால் வெற்பினைப் பேர்த்தவன் அலறிட விரலை வைத்தார்

துள்ளுமான் மறியொடு சூலமும் ஏந்தினார் சுடலை நீற்றர்

வள்ளிகோன் தாதையார் வஞ்சிநுண் ணிடையுடை மங்கை பங்கர்

வெள்ளமார் சடையினர் மேவிய நன்னகர் மீயச் சூரே.


வெள்ளி-மால்-வெற்பினைப் பேர்த்தவன் அலறிட விரலை வைத்தார் - வெள்ளிமயமான பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கியவர்;

துள்ளு-மான்மறியொடு சூலமும் ஏந்தினார் - துள்ளுகின்ற மான்கன்றையும் சூலத்தையும் ஏந்தியவர்;

சுடலை நீற்றர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவர்;

வள்ளிகோன் தாதையார் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தையார்; (தாதை - தந்தை);

வஞ்சி-நுண்-இடையுடை மங்கை பங்கர் - வஞ்சிக்கொடிபோல் சிற்றிடையுடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

வெள்ளம் ஆர் சடையினர் - கங்கையைச் சடையில் அணிந்தவர்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


9)

மண்ணகழ் மாயனும் வானிடை நேடிய மலரி னானும்

நண்ணரும் சோதியன் நாள்தொறும் நற்றமிழ் நாவில் ஏந்தி

எண்ணினார்க் கெளியவன் இரும்புனற் சடையினன் ஏழை பங்கன்

விண்ணவர் தலைமகன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


மண் அகழ் மாயனும் வானிடை நேடிய மலரினானும் நண்ணரும் சோதியன் - நிலத்தை அகழ்ந்து தேடிய திருமாலாலும் வானில் தேடிய பிரமனாலும் அடைய ஒண்ணாத ஜோதிவடிவினன்; (நேடுதல் - தேடுதல்); (நண்ணரும் = நண்ண அரும்; தொகுத்தல் விகாரம்);

நாள்தொறும் நற்றமிழ் நாவில் ஏந்தி எண்ணினார்க்கு எளியவன் - தினமும் தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளை ஓதித் தியானிக்கும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவன்;

இரும்-புனல் சடையினன் - பெரிய கங்கையைச் சடையில் உடையவன்; (இருமை - பெருமை); (அப்பர் தேவாரம் - 4.56.1 - "பாய் இருங்கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்");

ஏழைபங்கன் - உமைபங்கன்; (ஏழை - பெண்);

விண்ணவர் தலைமகன் - தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


10)

பாலையைச் சோலையாப் பகர்ந்திடும் பாவிகள் பறைபொய்ந் நீங்கும்

காலையும் மாலையும் கைதொழும் அன்பரைக் காக்கும் அண்ணல்

கோலவார் சடையிடைக் குளிர்புனல் கரந்தவன் கோதை கூறன்

வேலைநஞ் சுண்டவன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


பாலையைச் சோலையாப் பகர்ந்திடும் பாவிகள் பறை-பொய்ந் நீங்கும் - பாலைவனத்தைச் சோலை என்று சொல்லி வஞ்சிக்கும் பாவிகள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்; (பகர்தல் - சொல்லுதல்; விற்றல்); (பறைதல் - சொல்தல்);

காலையும் மாலையும் கைதொழும் அன்பரைக் காக்கும் அண்ணல் - காலையும் மாலையும் கைகூப்பி வணங்கும் பக்தர்களைக் காக்கின்ற பெருமான்;

கோல-வார்-சடையிடைக் குளிர்-புனல் கரந்தவன் - அழகிய நீண்ட சடையில் குளிர்ந்த கங்கையை மறைத்தவன்; (வார்தல் - நீள்தல்);

கோதை-கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (கோதை - பெண்);

வேலை-நஞ்சு உண்டவன் - கடல்விஷத்தை உண்டவன்; (வேலை - கடல்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


11)

திடமணி எண்புயம் திகழரன் தொழுபவர் செல்லல் தீர்ப்பான்

மடமணி மங்கையை இட(ம்)மகிழ் இறையவன் மன்னு கங்கை

படமணி பாம்பொடு பனிமதி படர்சடைப் பயில வைத்தான்

விடமணி மிடறினன் மேவிய நன்னகர் மீயச் சூரே.


திடம் அணி எண்-புயம் திகழ் அரன் தொழுபவர் செல்லல் தீர்ப்பான் - வலிமை மிக்க எட்டுத் தோள்களையுடைய ஹரன் வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (புயம் - புஜம்); (செல்லல் - துன்பம்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.4 - "நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ");

மடம் அணி மங்கையை இடம் மகிழ் இறையவன் - மடம் என்ற பெண்மைக்குணத்தையுடைய (/ அழகும் மென்மையும் உடைய) உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய இறைவன்; (மடம் - அழகு; மென்மை; பெண்களின் நான்கு குணங்களுள் ஒன்று);

மன்னு கங்கை, படம் அணி பாம்பொடு, பனிமதி படர்சடைப் பயில வைத்தான் - நிலைபெற்ற கங்கை, படத்தினை உடைய பாம்பு, குளிர்ந்த திங்கள் இவற்றைப் படர்ந்த சடையில் தங்க வைத்தான்; (மன்னுதல் - நிலைபெறுதல்); (பயில்தல் - தங்குதல்);

விடமணி மிடறினன் - ஆலகாலத்தை நீலமணியாகக் கண்டத்தில் வைத்தவன்; (விடமணி - 1. விட-மணி; 2. விடம் அணி); (மிடறு - கண்டம்);

மேவிய நன்னகர் மீயச்சூரே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருமீயச்சூர்;


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment