2020-09-25
P.524 - செம்பொன்பள்ளி (செம்பனார் கோயில்)
-----------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்) (திருநேரிசை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.29.1 - "ஊனினுள் ளுயிரை வாட்டி")
(சுந்தரர் தேவாரம் - 7.8.1 - "இறைகளோ டிசைந்த இன்பம்")
1)
கையினால் மலர்கள் தூவும் .. காதலர்க் கன்பி னானே
மெய்யனே மேனி மீது .. வெண்பொடி பூசி ஆடும்
செய்யனே சூல பாணீ .. செய்யணி செம்பொன் பள்ளி
ஐயனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
கையினால் மலர்கள் தூவும் காதலர்க்கு அன்பினானே - கையால் பூக்களைத் தூவி வணங்கும் அன்பருக்கு அன்புடையவனே;
மெய்யனே - மெய்ப்பொருளே;
மேனிமீது வெண்பொடி பூசி ஆடும் செய்யனே - சிவந்த திருமேனிமேல் வெண்ணீற்றைப் பூசி ஆடுபவனே; (செய்யன் - செம்மேனி உடையவன்);
சூலபாணீ - சூலபாணியே;
செய் அணி செம்பொன்பள்ளி ஐயனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற தலைவனே; (செய் - வயல்);
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க; (பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 12.28.865 - "ஐயனே அடியனேனை அஞ்சலென்று அருளவல்ல மெய்யனே");
2)
அருவமும் உருவும் ஆன .. அண்ணலே நெற்றிக் கண்ணா
மருவமர் குழலி பங்கா .. மண்டையோ டங்கை ஏந்தித்
தெருவினில் உழலும் செல்வா .. செய்யணி செம்பொன் பள்ளி
அரவனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
அருவமும் உருவும் ஆன அண்ணலே - அருவமும் உருவமும் ஆன பெருமானே;
நெற்றிக் கண்ணா - முக்கண்ணனே;
மரு-அமர் குழலி பங்கா - வாசக்குழல் உமையைப் பங்கில் உடையவனே; (மரு - வாசனை); (* மருவமர் குழலி - மருவார்குழலி - இத்தலத்து இறைவி திருநாமம்);
மண்டையோடு அங்கை ஏந்தித் தெருவினில் உழலும் செல்வா - கையில் மண்டையோட்டை ஏந்தித் தெருவில் பிச்சைக்கு உழலும் செல்வனே;
செய் அணி செம்பொன்பள்ளி அரவனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற நாகாபரணனே;
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
3)
இன்பனே உன்னை என்றும் .. ஏத்திடும் என்நா வென்ற
அன்பினார் காழி வேந்தர்க்(கு) .. ஆவடு துறையில் அன்று
செம்பொனா யிரமும் தந்தாய் .. செய்யணி செம்பொன் பள்ளி
அம்பொனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
"இன்பனே உன்னை என்றும் ஏத்திடும் என் நா" என்ற அன்பினார் காழி-வேந்தர்க்கு - "இன்பவடிவினனே, என் நாக்கு உன்னை என்றும் துதிக்கும்" என்று பாடிய அன்பர் சீகாழிப் பிள்ளையாருக்கு (= திருஞான சம்பந்தருக்கு); (சம்பந்தர் தேவாரம் - 3.4.4 - "வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் ஏத்தாதென்நா");
ஆவடுதுறையில் அன்று செம்பொன் ஆயிரமும் தந்தாய் - திருவாவடுதுறையில் முன்னர் ஆயிரம் பொற்காசுகள் அளித்தவனே; (ஆயிரமும் - உம் - அசை); (அப்பர் தேவாரம் - 4.56.1 - "கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறையனாரே"); (* திருஞான சம்பந்தருக்குத் திருவாவடுதுறையில் ஈசன் ஆயிரம் பொன் அளித்த வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க);
செய் அணி செம்பொன்பள்ளி அம்பொனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற அழகிய பொன் போன்றவனே; (அப்பர் தேவாரம் - 6.46.1 - "அம்பொன்னை ஆவடுதண் துறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே");
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
4)
அங்கமா றோது நாவா .. அணிபொழில் ஆனைக் காவிற்
பைங்கணேற் றாயு னக்குப் .. பந்தர்செய் சிலந்தி தன்னைச்
செங்கணான் ஆக்க வல்லாய் .. செய்யணி செம்பொன் பள்ளி
அங்கணா அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
அங்கம்-ஆறு ஓது நாவா - ஆறங்கம் ஓதியவனே;
அணிபொழில் ஆனைக்காவில் பைங்கண் ஏற்றாய் உனக்குப் பந்தர்செய் சிலந்திதன்னைச் செங்கணான் ஆக்க வல்லாய் - அழகிய சோலை சூழ்ந்த திருவானைக்காவில் பசிய கண்ணை உடைய இடபத்தை ஊர்தியாக உடைய உனக்குப் பந்தலிட்டுத் தொண்டுசெய்த சிலந்தியைக் கோச்செங்கட்சோழன் ஆக்கியவனே; (பந்தர் - பந்தல்); (செங்கணான் - செங்கண்ணான்);
செய் அணி செம்பொன்பள்ளி அங்கணா - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற அருள்நோக்கம் உடையவனே;
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
5)
உண்டவன் னஞ்சு தன்னை .. ஒருமணி செய்த கண்டா
வண்டறை கொன்றை வன்னி .. மதியணி சடையில் கங்கைத்
தெண்டிரை கரந்த தேவா .. செய்யணி செம்பொன் பள்ளி
அண்டனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
உண்ட வன்-நஞ்சுதன்னை ஒரு மணி செய்த கண்டா - உண்ட கொடிய ஆலகாலத்தை ஒப்பற்ற மணி ஆக்கிய கண்டத்தை உடையவனே;
வண்டு அறை கொன்றை, வன்னி, மதி அணி சடையில் கங்கைத் தெண்திரை கரந்த தேவா - வண்டுகள் ஒலிக்கும் கொன்றைமலர், வன்னி, சந்திரன் இவற்றை அணிந்த சடையில் கங்கையின் தெளிந்த அலைகளை ஒளித்த தேவனே; (திரை - அலை); (கரத்தல் - ஒளித்தல்);
செய் அணி செம்பொன்பள்ளி அண்டனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற கடவுளே;
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
6)
ஏற்றினைக் கொடியில் வைத்த .. ஏந்தலே மாணி வாழக்
கூற்றினை உதைத்த பாதா .. குஞ்சரத் துரிவை போர்த்தாய்
சீற்றமார் நாகத் தாராய் .. செய்யணி செம்பொன் பள்ளி
ஆற்றனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
ஏற்றினைக் கொடியில் வைத்த ஏந்தலே - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய அரசனே;
மாணி வாழக் கூற்றினை உதைத்த பாதா - மார்க்கண்டேயர் வாழ்வதற்காகக் காலனை உதைத்த பாதனே; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);
குஞ்சரத்து உரிவை போர்த்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (குஞ்சரம் - யானை); (உரிவை - தோல்);
சீற்றம் ஆர் நாகத்-தாராய் - சீற்றம் மிக்க பாம்பை மாலையாக அணிந்தவனே; (தார் - மாலை);
செய் அணி செம்பொன்பள்ளி ஆற்றனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற கங்காதரனே / நன்னெறியாக உள்ளவனே; (ஆறு - நதி; வழி); (அப்பர் தேவாரம் - 4.74.5 - "இருஞ்சடைக் கற்றைதன்மேல் ஆற்றனை");
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
7)
எய்ப்பிலா வாழ்வை அன்பர்க்(கு) .. இனிதருள் புரியும் ஈசா
ஒப்பிலா வாக்கின் மன்னர் .. உய்ந்திடக் கடலில் கல்லைத்
தெப்பமே ஆக்க வல்லாய் .. செய்யணி செம்பொன் பள்ளி
அப்பனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
எய்ப்பு-இலா வாழ்வை அன்பர்க்கு இனிது-அருள் புரியும் ஈசா - துன்பமற்ற வாழ்வினைப் பக்தர்களுக்கு இனிதே அருளும் ஈசனே; (எய்ப்பு - இளைப்பு);
ஒப்பு-இலா வாக்கின்-மன்னர் உய்ந்திடக் கடலில் கல்லைத் தெப்பமே ஆக்க வல்லாய் - ஒப்பற்ற திருநாவுக்கரசர் உய்யும்படி கடலில் கல்லைத் தெப்பம்போல் மிதக்கச்செய்து காத்தவனே; (தெப்பமே - ஏ - அசை; தேற்றம் என்றும் கொள்ளலாம்);
செய் அணி செம்பொன்பள்ளி அப்பனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற தந்தையே;
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
8)
வரையினை இடந்த மூர்க்கன் .. மணிமுடி பத்த டர்த்தாய்
தரையினில் ஆழி கீறிச் .. சலந்தரன் தனைத்த டிந்தாய்
திரையணி சடையி னானே .. செய்யணி செம்பொன் பள்ளி
அரையனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
வரையினை இடந்த மூர்க்கன் மணிமுடி பத்து அடர்த்தாய் - கயிலைமலையைப் பெயர்த்த மூர்க்கனான இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கியவனே; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (மூர்க்கன் - மூடன்; கடுஞ்சினம் உடையவன்);
தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தாய் - தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தரனை வெட்டியவனே; (ஆழி - வட்டம்; சக்கரம்); (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);
திரை அணி சடையினானே - சடையில் கங்கையை அணிந்தவனே; (திரை - அலை; நதி);
செய் அணி செம்பொன்பள்ளி அரையனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற அரசனே; (அரையன் - அரசன்);
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
9)
வெற்பையோர் குடையா ஏந்து .. வெண்ணெயுண் மாலி னோடு
பொற்பதார் பூவி னானும் .. போற்றிட நீண்ட சோதீ
சிற்பரா தேவ தேவா .. செய்யணி செம்பொன் பள்ளி
அற்புதா அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
வெற்பை ஓர் குடையா ஏந்து வெண்ணெய் உண் மாலினோடு பொற்பது ஆர் பூவினானும் போற்றிட நீண்ட சோதீ - (கிருஷ்ணாவதாரத்தில்) மலையை ஒரு குடையாக ஏந்தியவனும் வெண்ணெய் உண்டவனுமான திருமாலும் அழகிய தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு எல்லையின்றி நீண்ட ஜோதியே; (வெற்பு - மலை); (பொற்பு - அழகு; அது - பகுதிப்பொருள்விகுதி);
சிற்பரா - சிற்பரனே; (சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன் - கடவுள்);
தேவதேவா - தேவாதிதேவனே;
செய் அணி செம்பொன்பள்ளி அற்புதா - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற அற்புதனே;
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
10)
கறைமலி நெஞ்சர் சொல்லும் .. கட்டுரை நீங்கி நாளும்
நறைமலர் தூவி நாமம் .. நவில்பவர் இடர்கள் தீர்ப்பாய்
சிறையளி பாடு சோலை .. செய்யணி செம்பொன் பள்ளி
அறவனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
கறை மலி நெஞ்சர் சொல்லும் கட்டுரை நீங்கி நாளும் நறைமலர் தூவி நாமம் நவில்பவர் இடர்கள் தீர்ப்பாய் - குற்றம் மிக்க நெஞ்சத்தை உடையவர்கள் சொல்லும் பொய்களை மதியாமல் நீங்கித் தினமும் தேன்மலர் தூவித் திருப்பெயரை ஓதுபவர்களது துன்பங்களைத் தீர்ப்பவனே; (கட்டுரை - பொய்); (நறை - தேன்; வாசனை); (நவில்தல் - சொல்தல்);
சிறை-அளி பாடு சோலை செய் அணி செம்பொன்பள்ளி அறவனே - சிறகுகளையுடைய வண்டுகள் பாடும் சோலையும் வயலும் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற அறவடிவினனே; (சிறை - சிறகு); (அளி - வண்டு); (சோலை செய் - சோலையும் வயலும்; உம்மைத்தொகை);
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
11)
முனமொரு கணையை ஏவி .. முப்புரம் சுட்ட மூர்த்தீ
வனமலர் அம்பை ஏவும் .. மதனனை நீறு செய்தாய்
சினவிடை ஒன்ற மர்ந்தாய் .. செய்யணி செம்பொன் பள்ளி
அனகனே அடிய னேனை .. அஞ்சலென் றருள்செய் யாயே.
முனம் ஒரு கணையை ஏவி முப்புரம் சுட்ட மூர்த்தீ - முன்பு ஒரு கணையை எய்து முப்புரங்களை எரித்த கடவுளே; (முனம் - முன்னம்);
வன-மலர் அம்பை ஏவும் மதனனை நீறு செய்தாய் - அழகிய மலர்க்கணையை ஏவும் மன்மதனைச் சாம்பல் ஆக்கியவனே; (வனம் - அழகு); (மதனன் - மன்மதன்);
சின-விடை ஒன்று அமர்ந்தாய் - சினக்கின்ற இடபத்தை ஊர்தியாக விரும்பியவனே; (அமர்தல் - விரும்புதல்);
செய் அணி செம்பொன்பள்ளி அனகனே - வயல் சூழ்ந்த திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்ற தூயவனே; (அனகன் - பாவம் அற்றவன்);
அடியனேனை "அஞ்சல்" என்று அருள்செய்யாயே - "அஞ்சாதே" என்று சொல்லி அடியேனுக்கு அருள்க;
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment