Monday, October 12, 2026

P.519 - மூவலூர் - கைப்புறு நஞ்சு

2020-09-05

P.519 - மூவலூர்

(மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)

-----------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞால மெல்லாம்")

(சுந்தரர் தேவாரம் - 7.8.1 - "இறைகளோ டிசைந்த இன்பம்")


1)

கைப்புறு நஞ்சு தன்னைக் .. கருமணி செய்த கண்டன்

செப்பரும் புகழான் திங்கள் .. செஞ்சடை வைத்த செல்வன்

அப்பெரும் தேரில் ஏறி .. அருவரை வில்லை ஏந்தி

முப்புரம் வேவ எய்த .. முதல்வனூர் மூவ லூரே


கைப்பு உறு நஞ்சு-தன்னைக் கருமணி செய்த கண்டன் - கசக்கின்ற ஆலகாலத்தைக் கண்டத்தில் கரிய மணி ஆக்கியவன்; (கைப்பு - கசப்பு);

செப்பரும் புகழான் - சொல்லற்கு அரிய புகழை உடையவன்; (செப்பரும் - செப்ப அரும்; தொகுத்தல் விகாரம்);

திங்கள் செஞ்சடை வைத்த செல்வன் - சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த செல்வன்;

அப்-பெருந்தேரில் ஏறி அருவரை வில்லை ஏந்தி - தேவர்கள் செய்த அந்தப் பெரிய தேரில் ஏறி, மேருமலை என்ற அரிய வில்லை ஏந்தி; (வரை - மலை);

முப்புரம் வேவ எய்த முதல்வன் ஊர் மூவலூரே - முப்புரங்கள் எரிய எய்த முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்;


2)

பனையன கரத்து வேழம் .. படவுரி செய்த வீரன்

தனைநினை மாணி வாழத் .. தாளினால் கூற்று தைத்தான்

சினவிடை ஊர்தி அண்ணல் .. சேவடி ஏத்தும் அன்பர்

முனைவினை வேர றுக்கும் .. முதல்வனூர் மூவ லூரே.


பனை அன கரத்து வேழம் பட உரிசெய்த வீரன் - பனை போன்ற கையையுடைய யானை அழியும்படி போரிட்டு அதன் தோலை உரித்த வீரன்; (அன - அன்ன); (படுதல் - அழிதல்; சாதல்);

தனை நினை மாணி வாழத் தாளினால் கூற்று உதைத்தான் - தன்னை எண்ணி வழிபாடு செய்த மார்க்கண்டேயர் உயிர்வாழும்படி காலனைப் பாதத்தால் உதைத்தவன்;

சின-விடை ஊர்தி அண்ணல் - கோபம் உடைய இடபத்தை வாகனமாக உடைய தலைவன்;

சேவடி ஏத்தும் அன்பர் முனை-வினை வேரறுக்கும் முதல்வன் ஊர் மூவலூரே - தனது சிவந்த திருவடியை வழிபடும் பக்தர்களது பழவினையையெல்லாம் வேரோடு அழிக்கும் முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (முனை - முன்னை - பழமை);


3)

பொன்னிகர் சடையின் மீது .. புற்றரா இளவெண் திங்கள்

வன்னிவண் கொன்றை சூடும் .. வழித்துணை நாதன் பாதம்

உன்னிய அன்பர் தம்மை .. உம்பரில் வாழ வைப்பான்

முன்னயன் மாலும் போற்று .. முதல்வனூர் மூவ லூரே.


பொன் நிகர் சடையின்-மீது புற்றரா, இள-வெண் திங்கள், வன்னி, வண்-கொன்றை சூடும் வழித்துணை நாதன் - பொன் போன்ற சடையின்மேல் புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு, வெண்மையான இளம்பிறை, வன்னி, செழுமையான கொன்றைமலர் இவற்றை அணிந்த வழித்துணை நாதன்; (* மார்க்கசகாயேஸ்வரர் - வழித்துணை நாதர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

பாதம் உன்னிய அன்பர்தம்மை உம்பரில் வாழ வைப்பான் - திருவடியைத் தியானிக்கும் பக்தர்களைச் சிவலோகத்தில் வாழ அருள்பவன்; (உம்பர் - வானுலகம்; இங்கே, சிவலோகம்);

முன் அயன் மாலும் போற்று முதல்வன் ஊர் மூவலூரே - முன்பு பிரமன் திருமால் இவர்கள் வழிபட்ட முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (* பிரமன் திருமால் இருவரும் ஈசனை இதலத்தில் வழிபாடு செய்தது - தலபுராணச் செய்தி);


4)

இரணியன் தனைக்கொன் றானும் .. எழில்மலர் மேலி னானும்

சரணமென் றேத்தக் கண்டு .. தண்ணருள் செய்த ஈசன்

மரணமும் பிறப்பும் இல்லான் .. மலைதனை வில்லா ஏந்தி

முரணரண் மூன்றெ ரித்த .. முதல்வனூர் மூவ லூரே.


இரணியன்தனைக் கொன்றானும் எழில்மலர்-மேலினானும் சரணம் என்று ஏத்தக் கண்டு தண்ணருள் செய்த ஈசன் - ஹிரண்யகசிபுவை அழித்த திருமாலும் அழகிய தாமரைமேல் இருக்கும் பிரமனும் "சரணம்" என்று திருவடியை வழிபடக்கண்டு அவர்களுக்குக் குளிர்ந்த அருளைச் செய்த ஈசன்; (* பிரமன் திருமால் இருவரும் ஈசனை இதலத்தில் வழிபாடு செய்தது - தலபுராணச் செய்தி);

மரணமும் பிறப்பும் இல்லான் - இறப்பும் பிறப்பும் அற்றவன்;

மலைதனை வில்லா ஏந்தி முரண்-அரண் மூன்று எரித்த முதல்வன் ஊர் மூவலூரே - பகைத்த அசுரர்களது முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி எரித்த முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்;


5)

அத்தழல் ஆர்ந்த அம்பை .. அவுணர்முப் புரங்கள் வேவ

உய்த்தவன் பாடல் ஓலை .. ஒன்றினை உதவிப் பாண

பத்திரர்க் கருளும் பண்பன் .. பண்ணமர் பதிகம் பாடி

முத்தமிழ் விரகர் போற்று .. முதல்வனூர் மூவ லூரே.


அத்-தழல் ஆர்ந்த அம்பை அவுணர் முப்புரங்கள் வேவ உய்த்தவன் - அந்தத் தீக்கணையை அசுரர்களது முப்புரங்கள் சாம்பலாகும்படி செலுத்தியவன்; (அவுணர் - அசுரர்); (உய்த்தல் - செலுத்துதல்);

பாடல்-ஓலை ஒன்றினை உதவிப் பாணபத்திரர்க்கு அருளும் பண்பன் - திருமுகப்-பாசுர ஓலையைத் தந்து பாணபத்திரருக்கு அருள்புரிந்தவன்; (திருமுகப்பாசுரம் - 11.1 - "மதிமலி புரிசை மாடக் கூடல்" என்று தொடங்கும் பாடலின் வரலாற்றில் காண்க. பெரியபுராணத்தில் சேரமான்பெருமாள் நாயனார் புராணத்திற் காண்க);

பண் அமர் பதிகம் பாடி முத்தமிழ் விரகர் போற்று முதல்வன் ஊர் மூவலூரே - முத்தமிழ் வல்லவரான சம்பந்தர் பண் பொருந்திய பதிகங்கள் பாடிப் போற்றிய முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (சம்பந்தர் மூவலூரில் பதிகம் பாடியுள்ளார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்பதிகம் நமக்குக் கிட்டவில்லை; பெரியபுராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.437 - "மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால் மேவு காதலில் ஏத்தியே");


6)

உறுதுயர்க் கடலில் ஆழ்ந்த .. உம்பருக்(கு) உய்தி தந்த

அறுமுகற்(கு) அத்தன் அங்கை .. ஆரழல் ஏந்தும் ஐயன்

நறுமலர்க் கொன்றை சூடி .. நாகநாண் வில்லை ஏந்தி

முறுவலித்(து) எயில்கள் சுட்ட .. முதல்வனூர் மூவ லூரே.


உறுதுயர்க் கடலில் ஆழ்ந்த உம்பருக்(கு) உய்தி தந்த அறுமுகற்(கு) அத்தன் - பெருந்துயரக்கடலில் மூழ்கிய தேவர்களைக் காத்தருளிய ஷண்முகனுக்கு தந்தை; (உம்பர் - தேவர்); (அத்தன் - தந்தை);

அங்கை ஆரழல் ஏந்தும் ஐயன் - கையில் அரிய தீயை ஏந்தும் தலைவன்;

நறுமலர்க் கொன்றை சூடி - மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்;

நாகநாண் வில்லை ஏந்தி, முறுவலித்(து) எயில்கள் சுட்ட முதல்வன் ஊர் மூவலூரே - மேருமலை என்ற வில்லில் ஒரு பாம்பை நாணாகக் கட்டி ஏந்திச், சிரித்தே முப்புரங்களை எரித்த முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்;


7)

பிறையணி சடையில் வானப் .. பெரும்புனல் வைத்த பெம்மான்

பறைபல பூதம் ஆர்க்கப் .. படுபிணக் காட்டில் ஆடி

மறைகளைப் பாடு நாவன் .. மலர்களைத் தூவி நின்று

முறைமுறை தேவர் ஏத்தும் .. முதல்வனூர் மூவ லூரே.


பிறை அணி சடையில் வானப் பெரும்புனல் வைத்த பெம்மான் - பிறையை அணிந்த சடையில் ஆகாயகங்கையை அடைத்த பெருமான்;

பறை பல பூதம் ஆர்க்கப் படுபிணக்-காட்டில் ஆடி - பல பறைகளைப் பூதங்கள் ஒலிக்கச் சுடுகாட்டில் ஆடுபவன்; (படு - பெரிய; கொடிய); (பிணக்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 1.7.1 - "பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று நாடகம் ஆடும்");

மறைகளைப் பாடு நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;

மலர்களைத் தூவி நின்று முறைமுறை தேவர் ஏத்தும் முதல்வன் ஊர் மூவலூரே - பூக்களைத் தூவி முறைப்படி தேவர்கள் வழிபாடு செய்யும் முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்;


8)

பாங்கிலா அரக்கன் ஓடிப் .. பனிமலை பேர்த்த நாளில்

ஆங்கொரு விரலை ஊன்றி .. அவன்முடி பத்த டர்த்தான்

வீங்கிருள் நட்டம் ஆடும் .. விரிசடை விகிர்தன் வேண்டில்

மூங்கரைப் பாட வைக்கும் .. முதல்வனூர் மூவ லூரே.


பாங்கு-இலா அரக்கன் ஓடிப் பனிமலை பேர்த்த நாளில் - நற்குணம் இல்லாத இராவணன் ஓடிப்போய்க் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது;

ஆங்கு ஒரு விரலை ஊன்றி அவன்முடி பத்து அடர்த்தான் - அங்கு ஒரு திருப்பாதவிரலை ஊன்றி அவனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);

வீங்கு-இருள் நட்டம் ஆடும் விரிசடை விகிர்தன் - மிகுந்த இருளில் கூத்து ஆடும் விரித்த சடையையுடைய விகிர்தன்; (வீங்குதல் - மிகுதல்); (நட்டம் - கூத்து); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவன் திருநாமம்);

வேண்டில் மூங்கரைப் பாடவைக்கும் முதல்வன் ஊர் மூவலூரே - வேண்டினால் (வழிபட்டால் / அவன் விரும்பினால்) ஊமைகளையும் பாடச்செய்யும் முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (வேண்டுதல் - விரும்புதல்; பிரார்த்தித்தல்); (மூங்கர் - ஊமையர்); (அப்பர் தேவாரம் - 6.95.3 - "பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே");


9)

கல்லினால் கடலில் சேது .. கட்டினான் பிரமன் காணா

எல்லையில் சோதி கானில் .. இருந்தவம் செய்பார்த் தற்கு

வெல்லரும் படையை நல்கும் .. வேடுவன் மென்ம ருங்குல்

முல்லைவெண் ணகையாள் பங்காம் .. முதல்வனூர் மூவ லூரே.


கல்லினால் கடலில் சேது கட்டினான் பிரமன் காணா எல்லை-இல் சோதி - (இராமாவதாரத்தில்) கல்லால் கடலில் அணை கட்டிய திருமாலாலும் பிரமனாலும் அறிய ஒண்ணாத எல்லையற்ற ஜோதி-உருவன்;

கானில் இருந்-தவம் செய் பார்த்தற்கு வெல்லரும் படையை நல்கும் வேடுவன் - காட்டில் பெருந்தவம் செய்த அர்ஜுனனுக்கு வெற்றியுடைய பாசுபதாஸ்திரத்தை வேடன் உருவிற் சென்று அருளியவன்; (இருமை - பெருமை); (வெல்லரும் - வெல்ல அரும்; தொகுத்தல் விகாரம்; "வெல் அரும் - வெல்கின்ற அரிய" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மென்-மருங்குல் முல்லை-வெண்ணகையாள் பங்கு ஆம் முதல்வன் ஊர் மூவலூரே - மெல்லிடையையும் முல்லைஅரும்பு போன்ற வெண்பற்களையும் உடைய உமை ஓர் பங்கு ஆகின்ற முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (மருங்குல் - இடை); (நகை - பல்);


10)

நாவினால் நாளும் பொய்சொல் .. நாணிலார் தம்மை நீங்கும்

பூவினால் பொற்பா தங்கள் .. போற்றினார் துன்பம் தீர்ப்பான்

கூவிளம் கொன்றை மத்தம் .. கொக்கிற கணிந்த பித்தன்

மூவிலை வேலை ஏந்தும் .. முதல்வனூர் மூவ லூரே.


நாவினால் நாளும் பொய் சொல் நாண்-இலார்-தம்மை நீங்கும் - நாக்கூசாது தினமும் பொய்கள் சொல்லித் திரியும் வெட்கமற்றவர்களை விலகுங்கள்;

பூவினால் பொற்பாதங்கள் போற்றினார் துன்பம் தீர்ப்பான் - பூக்களால் பொன்னடிகளைப் போற்றும் அன்பர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

கூவிளம் கொன்றை மத்தம் கொக்கிறகு அணிந்த பித்தன் - வில்வம், கொன்றைமலர், ஊமத்தமலர், கொக்கின் இறகு இவற்றையெல்லாம் முடிமேல் அணிந்த பேரருளாளன்; (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (* கந்தபுராணம் - 3. மகேந்திர காண்டம் - 9. சயந்தன் புலம்புறு படலம் - # 64 - "ஏங்கி அமரர் ... குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை வாங்கி அணிந்த");

மூவிலை-வேலை ஏந்தும் முதல்வன் ஊர் மூவலூரே - திரிசூலத்தை ஏந்திய முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்;


11)

கனிவுடை நெஞ்ச ராகிக் .. கைதொழு வார்க்கி ரங்கி

இனிவரும் நாள்க ளெல்லாம் .. இன்பமே நல்கும் எந்தை

தனிவிடைப் பாகன் கல்லால் .. தருநிழற் போதன் முன்னம்

முனிவுடைக் கூற்று தைத்த .. முதல்வனூர் மூவ லூரே.


கனிவுடை நெஞ்சராகிக் கைதொழுவார்க்கு இரங்கி - மனம் உருகிக் கைகூப்பித் தொழும் பக்தர்களுக்கு இரங்கி;

இனி வரும் நாள்களெல்லாம் இன்பமே நல்கும் எந்தை - அவர்களுக்கு என்றும் இன்பமே அருளும் எம் தந்தை;

தனி விடைப்-பாகன் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாக உடையவன்; (தனி - ஒப்பின்மை);

கல்லால்-தருநிழல் போதன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் ஞானவடிவினன்; (தரு - மரம்); (போதன் - ஞானி);

முன்னம் முனிவுடைக் கூற்று உதைத்த முதல்வன் ஊர் மூவலூரே - சினம் மிக்க காலனை முன்பு உதைத்து அழித்த முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் மூவலூர்; (முனிவு - கோபம்);


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment