Sunday, October 4, 2026

P.516 - கங்கைகொண்ட சோழபுரம் - தவியா வாழ்வை

2020-08-29

P.516 - கங்கைகொண்ட சோழபுரம்

-----------

(12 பாடல்கள்)

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு; அடியீற்றுச்சீர் எல்லாம் மாங்காய்ச்சீர்)

(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - "வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

தவியா வாழ்வைத் தாழ்ந்தார்க் கருள்வார் சடைமேற் பிறையாளர்

செவியோர் தோடர் சேவூர் கின்ற சிவனார் இடமென்பர்

கவிநால் வகையால் காதற் புலவர் கழலைத் துதிசெய்யக்

கவினார் கின்ற கங்கை கொண்ட சோழ புரந்தானே.


தவியா வாழ்வைத் தாழ்ந்தார்க்கு அருள்வார் - தலைவணங்கும் பக்தர்களுக்குத் துன்பமில்லா வாழ்வை அருள்பவர்; (தாழ்தல் - வணங்குதல்);

சடைமேல் பிறையாளர் - சடையின்மேல் பிறையைச் சூடியவர்;

செவி ஓர் தோடர் - ஒரு காதில் தோடு அணிந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "உடல் செய்யர் செவியில் தோடர்");

சே ஊர்கின்ற சிவனார் இடம் என்பர் - இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானார் உறையும் தலம் ஆவது; (சே - எருது);

கவி நால்வகையால் காதற்-புலவர் கழலைத் துதிசெய்யக் - அன்புடைய புலவர்கள் நால்வகைக் கவிகள் பாடித் திருவடியைப் போற்றுகின்ற; (காதல் - அன்பு); (கவி நால்வகை - நாற்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி);

கவின் ஆர்கின்ற கங்கைகொண்ட சோழபுரம் தானே - அழகிய கங்கைகொண்ட சோழபுரம்; (கவின் - அழகு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


2)

அல்லும் பகலு(ம்) மார்க்கண் டேயர் அன்பால் தொழும்போது

கொல்லும் எண்ணம் கொண்ட கூற்றைக் குமைத்த மலர்ப்பாதர்

வெல்லும் வில்லா வெற்பை ஏந்தும் வீரர் இடமென்பர்

கல்லும் கதைசொல் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


அல்லும் பகலும் மார்க்கண்டேயர் அன்பால் தொழும்போது - மார்க்கண்டேயர் இராப்பகலாகப் பக்தியோடு வழிபாடு செய்தபொழுது;

கொல்லும் எண்ணம் கொண்ட கூற்றைக் குமைத்த மலர்ப்பாதர் - அவரைக் கொல்ல எண்ணி நெருங்கிய காலனைத் தமது மலர்ப்பாதத்தால் உதைத்து அழித்த பெருமானார்; (குமைத்தல் - அழித்தல்);

வெல்லும் வில்லா வெற்பை ஏந்தும் வீரர் இடம் என்பர் - முப்புரங்களை எரித்த நாளில் வெற்றியுடைய வில்லாக மேருமலையை ஏந்திய வீரரான சிவனார் உறையும் தலம் ஆவது;

கல்லும் கதை சொல் கங்கைகொண்ட சோழபுரம் தானே - கல்லிலே அழகிய சிற்பங்கள் திகழும் கங்கைகொண்ட சோழபுரம்;


3)

இகழும் தக்கன் தலையை வெட்டி எரியில் இட்டங்கே

பகனங் கண்ணைப் பறித்த பரமர் பாத மலர்தன்னைப்

புகழும் அன்பர் வினைகள் தீர்க்கும் புனிதர் இடமென்பர்

ககனம் ஓங்கு கங்கை கொண்ட சோழ புரந்தானே.


இகழும் தக்கன் தலையை வெட்டி எரியில் இட்டு அங்கே - ஈசனை இகழ்ந்து அவவேள்வி செய்த தக்கனது தலையை வெட்டித் தீயில் இட்டு, அவ்விடத்தில்; (தக்கன் செய்த வேள்வியை அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்தில் காண்க);

பகன் அம்-கண்ணைப் பறித்த பரமர் - சூரியர்களுள் ஒருவனான பகன் என்பவனது அழகிய கண்ணைப் பிடுங்கிய பரமர்; (அம் - அழகு); (அப்பர் தேவாரம் - 6.96.9 - "எச்சன் நிணத்தலை கொண்டார் பகன்கண் கொண்டார்");

பாதமலர்தன்னைப் புகழும் அன்பர் வினைகள் தீர்க்கும் புனிதர் இடம் என்பர் - அவரது திருவடித்-தாமரையைப் புகழும் பக்தர்களது வினையைத் தீர்க்கும் புனிதரான சிவனார் உறையும் தலம் ஆவது;

ககனம் ஓங்கு கங்கைகொண்ட சோழபுரம் தானே - வானம் ஓங்கும் (கோபுரம் / விமானம் திகழும்) கங்கைகொண்ட சோழபுரம்; (ககனம் - ஆகாயம்); (சம்பந்தர் தேவாரம் - 1.24.3 - "வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்");


4)

வெண்ணெய் நல்லூர் வியலூர் மேயார் வெண்ணூல் திகழ்மார்பர்

பெண்ணை ஒருபால் பாக மாகப் பேணும் பெருமானார்

மண்ணைச் சுமந்த மதுரைச் சொக்கர் மன்னும் இடமென்பர்

கண்ணைக் கவரும் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


வெண்ணெய்நல்லூர் வியலூர் மேயார் - திருவெண்ணெய்நல்லூர், திருவியலூர் முதலிய தலங்களில் உறைபவர்;

வெண்ணூல் திகழ் மார்பர் - திருமார்பில் பூணூல் அணிந்தவர்;

பெண்ணை ஒருபால் பாகமாகப் பேணும் பெருமானார் - உமையை இடப்பக்கத்தில் ஒரு பாகமாக விரும்பிய பெருமானார்;

மண்ணைச் சுமந்த மதுரைச் சொக்கர் மன்னும் இடம் என்பர் - பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கநாதரான சிவனார் உறையும் தலம் ஆவது; (மன்னுதல் - தங்குதல்);

கண்ணைக் கவரும் கங்கைகொண்ட சோழபுரம் தானே - நம் கண்ணைக் கவரும் அழகிய கங்கைகொண்ட சோழபுரம்;


5)

முற்றா மதிய(ம்) முடிமேல் வைத்த முக்கட் பெருமானார்

நற்றா ராக நாகம் பூண்ட நாதர் புர(ம்)மூன்று

செற்றார் கையில் சிரமொன் றேந்தும் செல்வர் இடமென்பர்

கற்றார் பேணும் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


முற்றா மதியம் முடிமேல் வைத்த முக்கட் பெருமானார் - இளந்திங்களைத் தலைமேல் அணிந்த முக்கண்ணர்;

நல்-தாராக நாகம் பூண்ட நாதர் - நல்ல மாலையாகப் பாம்பை அணிந்த தலைவர்; (தார் - மாலைவகை);

புரம்-மூன்று செற்றார் - முப்புரங்களை அழித்தவர்; (செறுதல் - அழித்தல்);

கையில் சிரம் ஒன்று ஏந்தும் செல்வர் இடம் என்பர் - கையில் (பிச்சைப்பாத்திரமாகப்) பிரமனது மண்டையோட்டை ஏந்தும் செல்வரான சிவனார் உறையும் தலம் ஆவது;

கற்றார் பேணும் கங்கைகொண்ட சோழபுரம் தானே - கற்றவர்கள் விரும்பிப் போற்றும் கங்கைகொண்ட சோழபுரம்;


6)

வாரு லாவு(ம்) முலையாள் பங்கர் வலிய விடமுண்ட

சீரு லாவும் திருமா மிடறர் சேரும் இடமென்பர்

ஏரு லாவும் வயல்கள் சூழ எழிற்கோ புர(ம்)மீது

காரு லாவும் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


வார் உலாவும் முலையாள் பங்கர் - கச்சு அணிந்த முலையினளான உமையை ஒரு பங்கில் உடையவர்; (வார் - முலைக்கச்சு); (உலாவுதல் - சூழ்தல்);

வலிய விடம் உண்ட சீர் உலாவும் திரு-மா-மிடறர் சேரும் இடம் என்பர் - ஆலகாலத்தை உண்ட புகழ் திகழும் அழகிய திருநீலகண்டரான சிவனார் உறையும் தலம் ஆவது; (சீர் - அழகு; நன்மை; பெருமை; புகழ்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.4 - "கொக்கரவர் கூன்மதியர் கோபர் திருமேனிச் செக்கரவர் சேருமிடம் என்பர்"):

ஏர் உலாவும் வயல்கள் சூழ - கலப்பைகள் இயங்குகின்ற அழகிய வயல்களால் சூழப்பெற்று; (ஏர் - கலப்பை; அழகு); (உலாவுதல் - இயங்குதல்);

எழில்-கோபுரம்-மீது கார் உலாவும் கங்கைகொண்ட சோழபுரம் தானே - அழகிய கோபுரத்தின்மீது மேகம் உலவுகின்ற கங்கைகொண்ட சோழபுரம்; (கார் - மேகம்); (உலாவுதல் - சஞ்சரித்தல்);


7)

பாட்டும் பாடிப் பரவும் பத்தர் பழைய வினையெல்லாம்

வீட்டும் ஈசர் வென்றி விடையர் மேய இடமென்பர்

வாட்டும் பசியைத் தீர்க்கும் வளமார் வயல்கள் புடைசூழக்

காட்டும் கவினார் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


பாட்டும் பாடிப் பரவும் பத்தர் பழைய வினையெல்லாம் வீட்டும் ஈசர் - பாட்டுகளும் பாடித் துதிக்கும் பக்தர்களது பழவினையைத் தீர்க்கும் ஈசர்; (சுந்தரர் தேவாரம் - 7.91.1 - "பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்");

வென்றி-விடையர் மேய இடம் என்பர் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய சிவனார் உறையும் தலம் ஆவது;

வாட்டும் பசியைத் தீர்க்கும் வளம் ஆர் வயல்கள் புடைசூழக் காட்டும் - கொடிய பசியைத் தீர்க்கும் வளம் மிக்க வயல்களால் சூழப்பெற்ற;

கவின் ஆர் கங்கைகொண்ட சோழபுரம் தானே - அழகிய கங்கைகொண்ட சோழபுரம்;


8)

எண்டோள் ஈசர் மலையை எடுத்தான் ஈரைந் தலைதோள்கள்

புண்டான் ஆக விரலை ஊன்றிப் போர்வாள் அருள்செய்தார்

உண்டார் நஞ்சை உம்பர் ஏத்தும் ஒருவர் இடமென்பர்

கண்டார் வியக்கும் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


எண்தோள் ஈசர் மலையை எடுத்தான் ஈரைந்தலை தோள்கள் புண்தான் ஆக விரலை ஊன்றிப் போர்வாள் அருள்செய்தார் - எட்டுப் புஜங்களை உடைய ஈசனாரது கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளும் தோள்களும் புண்படும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவனுக்கு இரங்கிச் சந்திரஹாஸம் என்ற வாளை அருள்செய்தவர்; (ஈர்-ஐந்தலை = பத்துத்-தலை); (அப்பர் தேவாரம் - 5.92.11 - "அரக்கன் ஈரைந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான்"); (எண்+தோள் = எண்டோள், புண்+தான் = புண்டான்);

உண்டார் நஞ்சை - ஆலகாலத்தை உண்டவர்;

உம்பர் ஏத்தும் ஒருவர் இடம் என்பர் - தேவர்களால் துதிக்கப்படும் ஒப்பற்றவரான சிவனார் உறையும் தலம் ஆவது; (ஒருவர் - ஒப்பற்றவர்);

கண்டார் வியக்கும் கங்கைகொண்ட சோழபுரம் தானே - காண்போர் வியக்கின்ற கங்கைகொண்ட சோழபுரம்;


9)

மண்ணை உண்ட மாலும் வாச மலரின் மேலானும்

நண்ணற் கரிய சோதி வடிவர் நாமம் பலவோதி

உண்ணெக் குருகும் அன்பர்க் கன்பர் உறையும் இடமென்பர்

கண்ணுக் கினிய கங்கை கொண்ட சோழ புரந்தானே.


மண்ணை உண்ட மாலும் வாசமலரின் மேலானும் நண்ணற்கு அரிய சோதி வடிவர் - மண்ணை உண்ட திருமால், தாமரைமேல் இருக்கும் பிரமன், இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதிப்பிழம்பாகி ஓங்கியவர்; (அப்பர் தேவாரம் - 4.23.10 - "மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும் விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காணமாட்டார்");

நாமம் பல ஓதி உள் நெக்கு உருகும் அன்பர்க்கு அன்பர் உறையும் இடம் என்பர் - அவரது திருநாமங்கள் பலவற்றை ஓதி உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்ற அன்பர்களுக்கு அன்பு உடையவரான சிவனார் உறையும் தலம் ஆவது; (நெகுதல் - கரைதல்; உருகுதல்); (உள்+நெக்கு = உண்ணெக்கு);

கண்ணுக்கு இனிய கங்கைகொண்ட சோழபுரம் தானே - காண்போர்க்கு இன்பம் தருகின்ற கங்கைகொண்ட சோழபுரம்;


10)

வெந்த நீறு பூச மாட்டா வீணர் உரைசெய்யும்

மந்த வார்த்தை மதிக்க வேண்டா வாழ்த்தித் தலைசாய்த்துச்

சிந்தை செய்வார்க் கின்பம் அருளும் சிவனார் இடமென்பர்

கந்தம் கமழும் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


வெந்த நீறு பூச மாட்டா வீணர் உரைசெய்யும் மந்த வார்த்தை மதிக்க வேண்டா - சுட்ட திருநீற்றைப் பூசாத வீணர்கள் சொல்கின்ற அறிவற்ற சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா; (மந்தம் - அறிவுமழுக்கம்; அற்பம்);

வாழ்த்தித் தலைசாய்த்துச் சிந்தை-செய்வார்க்கு இன்பம் அருளும் சிவனார் இடம் என்பர் - வாயால் வாழ்த்தித், தலையால் வணங்கி, மனத்தால் தியானிக்கும் அன்பர்களுக்கு இன்பம் அருளும் சிவனார் உறையும் தலம் ஆவது; (தலைசாய்த்தல் - தலையைத் தாழ்த்தி வணங்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.60.3 - "கையால் தொழுது தலைசாய்த்து உள்ளம் கசிவார்கள்");

கந்தம் கமழும் கங்கைகொண்ட சோழபுரம்தானே - வாசனை கமழும் கங்கைகொண்ட சோழபுரம்;


11)

பழனம் பாசூர் மேய பரமர் பாத(ம்) நாள்தோறும்

தொழநம் வினையைத் தொலைவித் தருளும் துணைவர் சுடுநீற்றர்

பழனி நின்ற குமரற் கத்தர் பயிலும் இடமென்பர்

கழனி சூழ்ந்த கங்கை கொண்ட சோழ புரந்தானே.


பழனம் பாசூர் மேய பரமர் - திருப்பழனம் திருப்பாசூர் முதலிய தலங்களில் உறையும் பரமர்;

பாதம் நாள்தோறும் தொழ, நம் வினையைத் தொலைவித்து அருளும் துணைவர் - அவரது திருவடியைத் தினமும் தொழுதால் நம் வினையைத் தீர்த்து அருளும் துணைவர்;

சுடுநீற்றர் - சுட்ட திருநீற்றைப் பூசியவர்;

பழனி நின்ற குமரற்கு அத்தர் பயிலும் இடம் என்பர் - பழனியில் நின்ற முருகனுக்குத் தந்தையாரான சிவனார் உறையும் தலம் ஆவது; (குமரன்+கு = குமரற்கு = குமரனுக்கு);

கழனி சூழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம் தானே - வயல்கள் சூழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம்; (கழனி - வயல்);


12)

பெரிதும் சிறிதும் பெண்ணும் ஆணும் பிறவு மாய்ப்பேணார்க்(கு)

அரிதும் போற்றும் அன்பர்க் கெளிதும் ஆய பெருமானார்

எருதும் ஊர்தி ஆகும் அரனார் ஈரச் சடையீசர்

கருதும் இடமாம் கங்கை கொண்ட சோழ புரந்தானே.


பெரிதும் சிறிதும் பெண்ணும் ஆணும் பிறவுமாய்ப் - எவற்றினும் பெரியவன், எவற்றினும் நுண்ணியன், பெண், ஆண், அலி எல்லாம் ஆகி; (பிற - மற்றவை); (திருவிசைப்பா - கருவூர்த் தேவர் - 9.13.6 - "அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண்டு அணுஓர் அண்டமாம் சிறுமைகொண்டு");

பேணார்க்கு அரிதும், போற்றும் அன்பர்க்கு எளிதும் ஆய பெருமானார் - வழிபடாதவர்களால் அடையப்படாதவனும், விரும்பி வணங்கும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனும் ஆன பெருமானார்; (பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்);

எருதும் ஊர்தி ஆகும் அரனார் - (யானை, குதிரை, முதலியவற்றைக் கருதாமல்) எருதை வாகனமாக விரும்பிய ஹரனார்;

ஈரச்-சடை ஈசர் - குளிர்ந்த சடையுடைய ஈசர்; (ஈரம் - குளிர்ச்சி); (சம்பந்தர் தேவாரம் - 2.90.2 - "ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்");

கருதும் இடம் ஆம் கங்கைகொண்ட சோழபுரம் தானே - அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் ஆவது கங்கைகொண்ட சோழபுரம்;


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment