Saturday, July 30, 2022

T.149 - புகலி (காழி) - அலையு(ம்) மனமும்

2011-06-11

T.149 - புகலி (காழி) - அலையு(ம்) மனமும்

--------------

(வண்ணவிருத்தம்;

தனன தனன தனன தனன

தனன தனன .. தனதான)

(திமிர உததி - திருப்புகழ் - பழநி)

(கரிய பெரிய - திருப்புகழ் - பழநி)


அலையு(ம்) மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் .. அடியேனை

.. அவதி மலியு(ம்) நெறியில் அழிவை

.. .. அடைய விரைய .. உகையாமுன்

இலையு(ம்) மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய .. தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய .. அருளாயே

உலவு நதியும் ஒளிரு(ம்) மதியும்

.. .. உரகம் அருகு .. முடிமீதே

.. உடைய ஒருவ மயிலை அனைய

.. .. உமையும் உடலில் .. ஒருபாதி

இலகும் இறைவ புகலி நகரில்

.. .. எழுது மறையை .. மகிழ்வோனே

.. இருவர் பரவு பரம கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


பதம் பிரித்து:

அலையு(ம்) மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் அடியேனை

.. அவதி மலியு(ம்) நெறியில் அழிவை

.. .. அடைய விரைய உகையாமுன்,

இலையு(ம்) மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய அருளாயே;

உலவு- நதியும் ஒளிரு(ம்) மதியும்

.. .. உரகம் அருகு முடிமீதே

.. உடைய ஒருவ; மயிலை அனைய

.. .. உமையும் உடலில் ஒரு பாதி

இலகும் இறைவ; புகலி நகரில்

.. .. எழுது மறையை மகிழ்வோனே;

.. இருவர் பரவு பரம; கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அலையு(ம்) மனமும் உலகில் நசையும் அதிக வினையும் அடியேனை அவதி மலியு(ம்) நெறியில் அழிவை அடைய விரைய உகையாமுன் - அலைபாய்கின்ற மனமும், உலக ஆசைகளும், மிகுந்திருக்கும் பழைய வினைகளும் என்னைத் துன்பம் மிகும் பாதையில் அழிவை அடைய விரையும்படி செலுத்துவதன்முன்னம்; (நசை - ஆசை); (அவதி - துன்பம்); (உகைத்தல் - செலுத்துதல்);

இலையு(ம்), மலரும், இயலும் இசையும் இசையும் இனிய தமிழோடே, இயலும் வகையில் உனது சரண-இணையை அடைய அருளாயே - வில்வ-இலைகளாலும், பலவகை மலர்களாலும், இயல் இசை என்ற இரண்டும் பொருந்திய தமிழ்ப்பாடல்களோடும், இயன்ற வகையில் உன்னைப் போற்றி உன் இணையடியை அடைவதற்கு அருள்வாயாக; (சரணஇணை - இரண்டு திருவடிகள்); (அடைதல் - சரண்புகுதல்; சேர்தல்);

உலவு நதியும், ஒளிரு(ம்) மதியும், உரகம் அருகு முடிமீதே உடைய ஒருவ - உலாவுகின்ற கங்கையையும் ஒளிவீசும் சந்திரனையும் பாம்பின் அருகே தலைமீது அணியும் ஒப்பற்றவனே; (உலவுதல் - உலாவுதல்); (அப்பர் தேவாரம் - 5.56.4 - "உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குலவினான்"); (உரகம் - பாம்பு); (ஒருவன் - ஒப்பற்றவன்);

மயிலை அனைய உமையும் உடலில் ஒரு பாதி இலகும் இறைவ - மயில் போன்ற பார்வதியைத் திருமேனியில் ஒரு கூறாக உடைய இறைவனே;

புகலி-நகரில் எழுது-மறையை மகிழ்வோனே - புகலியில் (சீகாழியில்) (திருஞான சம்பந்தர் பாடியருளிய) எழுதப்பெறும் வேதமாகிய தேவாரத்தை விரும்பியவனே; (எழுது மறை - எழுதப்படும் வேதமாகிய தேவாரம்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.180 - "வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்");

இருவர் பரவு பரம - திருமால் பிரமன் என்ற இருவரும் வணங்கும் பரமனே; (பரவுதல் - துதித்தல்);

கொடியில் எருதை உடைய பெருமானே - இடபக்கொடியை உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------


No comments:

Post a Comment