2011-05-23
T.147 - பொது - கழலிணையை ஏத்தற்கு
-----------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தாத்தத் .. தனதான)
(Somewhat similar to the syllabic pattern of - வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - பழநி - but with தாத்தத் instead of தாத்த in the pattern)
கழலிணையை ஏத்தற் .. கறியாத
.. கடுவினையர் கூட்டிற் .. சுழலாமல்
அழகுதரு நீற்றைப் .. புனைநேயர்
.. அடையுமுனை வாழ்த்திப் .. பணிவேனே
அழைபுகலி யார்க்குப் .. பெருஞான
.. அமுதையுமை ஊட்டற் .. கருள்வோனே
மழவிடைய நாற்றக் .. கணையேவு
.. மதனையெரி நாட்டப் .. பெருமானே.
பதம் பிரித்து:
கழலிணையை ஏத்தற்கு அறியாத
.. கடுவினையர் கூட்டிற் சுழலாமல்,
அழகுதரு நீற்றைப் புனை-நேயர்
.. அடையும் உனை வாழ்த்திப் பணிவேனே;
அழை புகலியார்க்குப் பெரு-ஞான
.. அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே;
மழ-விடைய; நாற்றக் கணை ஏவு
.. மதனை எரி நாட்டப் பெருமானே.
கழல்-இணையை ஏத்தற்கு அறியாத கடுவினையர் கூட்டிற் சுழலாமல் - இருதிருவடிகளைத் துதிக்க அறியாத தீவினையாளர்களோடு கூடித் திரிந்து மனம் வருந்தாமல்; (கடுவினையர் - தீவினையாளர்கள்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);
அழகு தரு நீற்றைப் புனை-நேயர் அடையும் உனை வாழ்த்திப் பணிவேனே - அழகு தரும் திருநீற்றைப் பூசும் பக்தர்கள் சரண்புகுகின்ற (/ எளிதில் பெறுகின்ற) உன்னை நானும் வாழ்த்தி வணங்குவேன்; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரமாவது நீறு");
அழை புகலியார்க்குப் பெருஞான அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே - "அம்மே, அப்பா" என்று அழுது அழைத்த சம்பந்தருக்கு அரிய ஞானப்பாலை உமாதேவி ஊட்டுமாறு அருள்செய்தவனே; (புகலியார் - புகலி என்ற சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (பெரியபுராணம் - 12.28.63 - "திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள");
மழவிடைய - இளைய ஏற்றை ஊர்தியாக உடையவனே; (மழ - இளமை);
நாற்றக்-கணை ஏவு மதனை எரி நாட்டப் பெருமானே - வாசம் கமழும் அம்பினை (மலர்க்கணையை) எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண் உடைய பெருமானே; (நாற்றம் - வாசனை); (மதன் - காமன்); (நாட்டம் - கண்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment