Saturday, July 16, 2022

T.146 - பொது - உந்திப் பந்த வினையேவ

2011-05-19

T.146 - பொது - உந்திப் பந்த வினையேவ

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தந்த .. தனதான)


உந்திப் பந்த .. வினையேவ

.. .. உந்திக் கென்று .. தினமோடி

.. நிந்திக் கின்ற .. வழியேகும்

.. .. நெஞ்சக் குன்றம் .. உடையேனும்

சிந்திப் பண்டை .. வினைபோகச்

.. .. செஞ்சொற் கந்த .. மலர்தூவித்

.. திங்கட் டுண்டன் .. உனையோதச்

.. .. சிந்திப் பொன்றை .. அருளாயே

வந்தித் துன்றன் .. அடிபேணும்

.. .. அன்பர்க் கென்றும் .. அணியானாய்

.. வம்பர்க் கண்ட .. அரிதானாய்

.. .. நஞ்சைக் கண்டம் .. அணிவோனே

முந்திப் பந்தன் .. இசைபாட

.. .. என்புக் கந்த .. உருவீவாய்

.. முன்கைச் சங்க .. மடமானோர்

.. .. பங்கிற் கொண்ட .. பெருமானே.


பதம் பிரித்து:

உந்திப் பந்த .. வினை ஏவ,

.. .. உந்திக்கென்று .. தினம் ஓடி,

.. நிந்திக்கின்ற .. வழி ஏகும்

.. .. நெஞ்சக்-குன்றம் .. உடையேனும்,

சிந்திப் பண்டை .. வினை போகச்,

.. .. செஞ்சொற் கந்த .. மலர் தூவித்

.. திங்கட்-டுண்டன் .. உனை ஓதச்,

.. .. சிந்திப்பு ஒன்றை .. அருளாயே;

வந்தித்து உன்றன் .. அடிபேணும்

.. .. அன்பர்க்கு என்றும் .. அணி ஆனாய்;

.. வம்பர்க்கு அண்ட .. அரிது ஆனாய்;

.. .. நஞ்சைக் கண்டம் .. அணிவோனே;

முந்திப் பந்தன் .. இசைபாட

.. .. என்புக்கு அந்த .. உரு ஈவாய்;

.. முன்கைச் சங்க .. மடமான் ஓர்

.. .. பங்கிற் கொண்ட .. பெருமானே.


உந்திப் பந்த-வினை ஏவ, உந்திக்கு என்று தினம் ஓடி, நிந்திக்கின்ற வழி ஏகும் நெஞ்சக்குன்றம் உடையேனும் - பந்தித்திருக்கும் பழவினைகள் என்னை உந்திச் செலுத்த, வயிற்றிற்காகத் தினமும் அலைந்து (& உடலை வளர்ப்பதற்கே நாள்கள் சென்று), மேன்மையில்லாத வழியில் போகும், மலை போன்ற கல்நெஞ்சத்தை உடைய நானும்; (உந்துதல் - தள்ளுதல்); (உந்தி - வயிறு); (நெஞ்சக்-குன்றம் - கல்நெஞ்சு; குன்றம் - மலை); (நெஞ்சக்குன்றம் - நெஞ்சமாகிய மலை - உருவகம்; பாதமலர் என்பதை ஒத்த ஒத்த பிரயோகம்); (கந்தர் அநுபூதி - காப்பு - "நெஞ்சக் கன-கல்லு நெகிழ்ந்து உருகத்") (அப்பர் தேவாரம் - 5.100.2 - "செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய் மனப்பாறைகட்கு ஏறுமோ" - மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல்மனம் உடையவர்க்கு);

சிந்திப் பண்டை-வினை போகச், செஞ்சொற்-கந்த-மலர் தூவித், திங்கள்-துண்டன் உனை ஓதச் சிந்திப்பு ஒன்றை அருளாயே - என் பழைய வினைகள் அழிந்துபோகச், சிறந்த சொற்களால் ஆன வாசம் மிகுந்த பாமலர்களைத் தூவிப் (= பாமாலைகளைப் பாடிப்), பிறையை அணிந்த உன்னை ஓத ஓர் எண்ணத்தை அருள்வாயாக; (சிந்துதல் - அழிதல்); (கந்தம் - வாசனை); (திங்கட்டுண்டன் - திங்கள் துண்டன் - பிறையை அணிந்தவன்); (சிந்திப்பு - எண்ணம்);

வந்தித்து உன்றன் அடி பேணும் அன்பர்க்கு என்றும் அணினாய் - வந்தனை செய்து உன் திருவடிகளைப் போற்றும் பக்தர்களுக்கு என்றும் அருகே இருப்பவனே; (அணி - சமீபத்தில்; அருகு);

வம்பர்க்கு அண்ட அரிதானாய் - பயனற்ற துஷ்டர்களுக்கு அணுக இயலாதவனே; (வம்பர் - வீணர்கள்; துஷ்டர்கள்);

நஞ்சைக் கண்டம் அணிவோனே - விஷத்தைக் கண்டத்தில் அணிந்தவனே;

முந்திப் பந்தன் இசை பாட, என்புக்கு அந்த-உரு ஈவாய் - முன்பு திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடவும், மயிலாப்பூரில் எலும்பை அழகிய பெண் (பூம்பாவை) ஆக்கியவனே; (பந்தன் - ஞானசம்பந்தன்; ஒருபுடைப்பெயர் - நாம ஏகதேசம்); (என்பு - எலும்பு); (அந்தம் - அழகு);

முன்கைச் சங்க மடமான் ஓர் பங்கில் கொண்ட பெருமானே - முன்கையில் வளையல் அணிந்த, இளமையான மான் போன்ற பார்வதியை ஒரு கூறாகக் கொண்ட பெருமானே; (சங்கம் - வளையல்); (மடம் - மென்மை; அழகு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment